Election bannerElection banner
Published:Updated:

சென்னை: சரணடையப் போவதாகக் கூறிய இளைஞர் - ஆத்திரத்தில் கொன்று கடற்கரையில் புதைத்த நண்பர்கள்

கொலை
கொலை

காவல் நிலையத்தில் சரணடையப்போவதாகக் கூறிய இளைஞரை, நண்பர்களே கொலை செய்து கடற்கரையில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை, ராயபுரம் புதுகாமராஜநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் வீரப்பன். இவர், நேற்று மதியம் (21-ம் தேதி) மீன்பிடித் துறைமுகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீரோ கேட் கடற்கரை மணலில் நடந்து சென்றிருக்கிறார். அப்போது மணலில் புதைந்தநிலையில் சடலம் ஒன்று கிடந்திருக்கிறது. அது குறித்து வீரப்பன், மீன்பிடித் துறைமுகம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு விசாரித்தனர்.

மது பாட்டில்
மது பாட்டில்

விசாரணையில் இறந்துகிடந்தது அப்புனு என்கிற செல்வக்குமார் (24), தாழங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதையடுத்து அவர் எப்படி இறந்தார் என்று போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கடந்த 13.4.2021-ல் எண்ணூர் பகுதியில் டிரில்லிங் மெஷினை வாடகைக்குத் தர மறுத்த லோகேஷ் என்பவரை செல்வக்குமார் தாக்கிவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார். அது தொடர்பாக லோகேஷ், எண்ணூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதன்பேரில் செல்வக்குமார் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீஸார் தேடிவந்தனர்.

நெல்லை: கோயில் பூசாரி வெட்டிக் கொலை! - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

இந்தநிலையில், செல்வக்குமார் அவரின் நண்பர்கள் தினேஷ் என்கிற முட்டை பானை தினேஷ், நிஷாந்தன், முத்தமிழ், ஸ்ரீதர், வெற்றிவேல், சந்தோஷ், அர்ஜூன் ஆகியோருடன் சேர்ந்து ஜீரோ கேட் கடற்கரை மணலில் அமர்ந்து மது அருந்தியிருக்கிறார். அப்போது போதையிலிருந்த செல்வக்குமார், லோகேஷை தாக்கிய வழக்கில் எண்ணூர் காவல் நிலையத்தில் சரணடையப் போவதாகக் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த அவரின் நண்பர்கள் பீர்பாட்டிலை உடைத்து செல்வக்குமாரை குத்தியிருக்கின்றனர். அதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

கொலை
கொலை

பின்னர் போதையிலிருந்த அவர்கள் செல்வக்குமாரின் சடலத்தை சிறிய அளவில் குழிதோண்டிப் புதைத்துவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். அதனால் சந்தேக மரணம் எனப் பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றியிருக்கிறோம். செல்வக்குமாரைக் கொலை செய்த வழக்கில் தினேஷ், நிஷாந்தன், முத்தமிழ், ஸ்ரீதர் ஆகிய நான்கு பேரைக் கைதுசெய்திருக்கிறோம். மற்றவர்களைத் தேடிவருகிறோம்" என்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு