Published:Updated:

`மனைவியிடம் சொல்லிவிட்டுத் தான் கிளம்பினார்!'- காதல் திருமணம் செய்த சென்னை இளைஞருக்கு நேர்ந்த துயரம்

சென்னையை அடுத்த காரப்பாக்கத்தில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
கொலை

சென்னை காரப்பாக்கம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் முரளி. 23 வயதான முரளிக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் கெளசல்யா என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருமே வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். முதலில் பெண் வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும், பின்னர் காதல் தம்பதிகளை பெற்றோர் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை காரப்பாக்கத்தில் முரளியை மர்ம நபர் ஒருவர் கழுத்தறுத்து கொன்றுவிட்டு தப்பியோடியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
கொலை

இதுகுறித்து பேசிய ஜே 11 கண்ணகி நகர் காவல்நிலைய அதிகாரிகள், ``இன்று காலை டீ குடிப்பதற்காக முரளி டீக்கடையில் நின்றுள்ளார். அப்போது அங்கே வந்த மர்மநபர் ஒருவர், முரளி சுதாரிப்பதற்குள் அவர் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டார். அருகிலிருந்தவர்கள் முரளியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. கொலையைச் செய்தவர் பைக்கில் தப்பியோடும் சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு விசாரித்து வருகிறோம்” என்றவர்களிடம், “சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் தான், ஆணவக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறதே?” என்றோம்.

“இது ஆணவக் கொலையாகத் தெரியவில்லை. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த முரளி, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கெளசல்யாவை திருமணம் செய்து கொண்டதற்கு முதலில் பெற்றோர்களிடையே எதிர்ப்பு இருந்துள்ளது. பின்னர் இருதரப்பு பெற்றோர்களும் சமாதானமாகி இணக்கமாகவே இருந்துள்ளனர். இன்று காலை முரளி வீட்டைவிட்டுக் கிளம்பும் போது கூட மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் கிளம்பியுள்ளார். கணவன் மனைவிக்கு இடையேயும் சண்டையில்லை. கொலை செய்தவரை விரைந்து பிடிக்க முயற்சிசெய்கிறோம். அதன் பின்னர்தான் கொலைக்கான நோக்கம் தெரியவரும். அதற்குள்ளாக இது ஆணவக் கொலை எனக் கூறுவது அபத்தமானது” என்றனர்.

கண்ணகிநகர் காவல்நிலையம்
கண்ணகிநகர் காவல்நிலையம்

முரளியின் செல்போன் தொடர்புகளை வைத்து, அவருடன் தொடர்ச்சியாகப் பேசியவர்கள் யார், கடைசியாக யாரிடம் பேசினார் என போலீஸ் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. சி.சி.டி.வியில் பதிவான கொலையாளி பைக்’கின் நம்பரை வைத்துத் தேடுகின்றனர். முரளியைக் கொலை செய்தவர் கைது செய்யப்படும் போதுதான், கொலைக்கான உண்மையான காரணம் வெளியே வரும்.