சென்னை: திருமண நிச்சயத்தால் ஆத்திரம்; காதலி, அவரின் தாய்க்கு தீவைத்த காதலன்! - 3 பேர் பலி

சென்னையில், தான் காதலித்த பெண் வேறு ஒருவரைத் திருமணம் செய்வதை ஏற்காத காதலன், காதலியின் வீடு புகுந்து தீவைத்ததில் காதலி, காதலன், காதலியின் தாயார் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
சென்னை கொருக்குப்பேட்டை, அனந்தநாயகி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்டம்மா. இவரின் கணவர் சென்னை மாநகராட்சி ஊழியராகப் பணியிலிருந்தபோதே உயிரிழந்தவர். இவர்களுக்கு ரஜிதா என்ற மகள் இருக்கிறார். ரஜிதா அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞரைக் காதலித்துவந்திருக்கிறார். கடந்த ஏழு வருடங்களாகக் காதலித்துவருபவர்கள், தாலி கட்டி கணவன் - மனைவி போல வாழ்ந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

ரஜிதாவின் தந்தை பணியில் இருக்கும்போதே உயிரிழந்ததால், அவரின் வேலை இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, தண்டயார்பேட்டடையிலுள்ள மாநகராட்சியின் மண்டல அலுவலகத்தில் ரஜிதா பணியாற்றிவந்திருக்கிறார். இங்கு பணிக்குச் சேர்ந்ததிலிருந்து ரஜிதாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். சதீஷுடன் பேசுவதைத் தொடர்ந்து தவிர்த்துவந்ததாகவும், அதனால், அவர்களுக்குள் அடிக்கடி சண்டைவந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.
இந்தநிலையில், கடந்த ஜனவரி 17-ம் தேதி மயிலாப்பூரைச் சேர்ந்த மாநகராட்சி ஊழியர் ஒருவருடன் ரஜிதாவுக்கு நிச்சயம் ஆனது. இந்தச் செய்தியை கேள்விப்பட்ட சதீஸ் ஆத்திரமடைந்திருக்கிறார். இதையடுத்து, அவர் ரஜிதாவின் வீட்டுக்கு வந்து, அவருடன் சண்டை போட்டிருக்கிறார். அதற்கு ரஜிதாவோ, நிச்சயித்தபடி திருமணம் செய்யப்போவதாகக் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட சதீஸ் மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த சதீஷ், இன்று அதிகாலை 3 மணியளவில் ரஜிதாவின் வீட்டு ஓடுகளைப் பிரித்து மண்ணெண்ணெய் கேனுடன் உள்ளே குதித்திருக்கிறார். அங்கு தூங்கிக்கொண்டிருந்த தனது காதலி ரஜிதாவின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்திருக்கிறார். அதைத் தடுக்க வந்த அவரது தாய் வெங்கட்டம்மா மீதும் தீவைத்திருக்கிறார் சதீஸ். இதனால், வீடு முழுவதும் தீப் பற்றி எரிந்தது. தீ மளமளவென்று பற்றி எரியவே சம்பவ இடத்திலேயே மூவரும் உடல் கருகி பலியாகினர்.
தீ பற்றி எரிவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், வீட்டில் தீப்பற்றி எரிகிறது என்று நினைத்து தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பின்னர் இது குறித்து ஆர்.கே.நகர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். வீட்டில் வெங்கட்டம்மா மற்றும் ரஜிதா மட்டுமே வசித்துவந்த நிலையில், மூன்றாவதாக இருக்கும் நபர் யார் என்று விசாரித்தில், அது சதீஸ் என்பது தெரியவந்திருக்கிறது.

மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், சதீஸ் எழுதிவைத்த கடிதம் ஒன்று போலீஸாருக்குக் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள். காதலித்த பெண்ணையும், அவரின் தாயாரையும் எரித்துக் கொன்று, காதலன், தானும் இறந்த சம்பவம் அந்தப் பகுதியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.