Published:Updated:

`குடிக்கு அடிமை.. சிகிச்சையில் குளறுபடி' -போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்

மரணம்
மரணம் ( மாதிரிப் படம் )

திருவள்ளூர் மாவட்டத்தில் போதை மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் திடீரென உயிரிழந்தார். அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பிரளயம்பாக்கம் கிராமத்தில் போதை மறுவாழ்வு இல்லம் உள்ளது. இங்கு சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த சுந்தரவேல்(27) சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சுந்தரவேல் இறந்துவிட்டதாக அவரின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரவேலின் உறவினர்கள், அவரின் சடலத்தைப் பார்த்தனர். அப்போது அதில் காயங்கள் இருந்தன.

Representational Image
Representational Image

இதற்கிடையில் சுந்தரவேல் மரணம் குறித்து திருப்பாலைவனம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சுந்தரவேலின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சூழலில் சுந்தரவேலை போதை மறுவாழ்வு இல்லத்தில் அடித்து கொலை செய்துவிட்டதாக அவரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதனால் இல்ல நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சுந்தரவேலின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸார், பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகே சுந்தரவேலின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

`முல்லைப் பூ பறிக்க முயற்சி செய்தார்.. ஆனால்?' - சென்னை விடுதி சமையலருக்கு நேர்ந்த சோகம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மதுபோதைக்கு அடிமையான சுந்தரவேல், வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். மேலும் அவர் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அதனால்தான் சிகிச்சைக்காக அவரை போதை மறுவாழ்வு இல்லத்தில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். அங்குதான் சுந்தரவேல் உயிரிழந்துள்ளார். அவரின் மரணம் குறித்து இல்ல நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளோம். சுந்தரவேலின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கும் பதிந்துள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு