Published:Updated:

`கைநீட்டி அடித்திருக்கக் கூடாது!' -தாயுடன் மன்னிப்பு கேட்கச் சென்ற சென்னை இளைஞருக்கு நேர்ந்த துயரம்

கைதான எலிசபெத்
கைதான எலிசபெத்

சென்னை ஓட்டேரியில் முதியவருக்கும் இளைஞருக்கும் இடையே நடந்த வாய்த்தகராறில் மன்னிப்பு கேட்கச் சென்றவரை, முதியவரின் குடும்பத்தினர் சொல்ல முடியாத அளவுக்குச் சித்ரவதை செய்துள்ளனர்.

சென்னை ஓட்டேரி, சத்யவாணி முத்து நகர், குடிசை மாற்றுவாரியத்தில் குடியிருப்பவர் வசந்தகுமார் (20). இவர் சாவு வீடுகளில் மேளம் அடிக்கும் வேலையைச் செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்குமுன் வசந்தகுமார் அந்தப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜுக்கும் வசந்தகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வசந்தகுமார், தேவராஜைத் தாக்கியுள்ளார்.

விமல்ராஜ்
விமல்ராஜ்
`இரும்புக் கம்பி சித்ரவதை; 2-வது திருமணம்?!’- கேரளப் பெண்ணின் புகாரால் சிக்கிய குமரி அதிமுக பிரமுகர்

இதையடுத்து வசந்தகுமார், வீட்டுக்கு வந்துள்ளார். நடந்த சம்பவம் பற்றி தன்னுடைய அம்மா சாந்தியிடமும் மனைவி மீனாவிடமும் கூறியுள்ளார். அதைக்கேட்ட சாந்தி, மகனிடம், ` நீ செய்தது தவறு. தேவராஜ் என்னதான் அவமானமாகப் பேசியிருந்தாலும் அவரைக் கைநீட்டி அடித்தது தவறு. நீ செய்த தவறுக்காகக் குடும்பத்தோடு சென்று தேவராஜிடம் மன்னிப்பு கேட்போம்' என்று கூறியுள்ளார். அதன்பிறகு தேவராஜ் வீட்டுக்கு சாந்தி, வசந்தகுமார், மீனா, வசந்தகுமாரின் மாமியார் அம்முலு ஆகியோர் சென்றனர்.

தேவராஜின் வீட்டில் அவருடைய மனைவி எலிசபெத், மகன்கள் அருண்ராஜ், விமல்ராஜ் மற்றும் இவர்களின் நண்பர்கள் பிரசாந்த், டேனியல் ஆகியோர் இருந்துள்ளனர். வசந்தகுமார், குடும்பத்துடன் வீட்டுக்கு வந்ததைப் பார்த்த தேவராஜ், அனைவரையும் வீட்டுக்குள் வரும்படி கூறியுள்ளார். பின்னர், வசந்தகுமாரைப் பிடித்து ஒரு அறையில் அடைத்துள்ளனர். இன்னொரு அறையில் வசந்தகுமாரின் குடும்பத்தினரை அடைத்தனர். வசந்தகுமாரின் கை, கால்களைக் கயிற்றால் கட்டிய தேவராஜின் குடும்பத்தினர் பின்னர் அவரை சித்ரவதை செய்துள்ளனர். வசந்தகுமாருக்கு மொட்டையடித்ததோடு அவரின் காலில் அயர்ன் பாக்ஸால் சூடு போட்டுள்ளனர். இந்தக் கொடுமை அனைத்தும் வசந்தகுமாரின் மனைவி மீனா, சாந்தி, மாமியார் அம்முலு ஆகியோரின் கண்முன்னால் நடந்தது.

தேவராஜ்
தேவராஜ்

வசந்தகுமார், தங்களின் கண் முன்னால் தாக்கப்படுவதைப் பார்த்த அவரின் குடும்பத்தினர் தேவராஜ் குடும்பத்தினரிடம் கெஞ்சியுள்ளனர். ஒருகட்டத்தில், அவர்களின் காலில் விழுந்து வசந்தகுமாரை விட்டுவிடும்படி கேட்டுள்ளனர். ஆனால் தேவராஜ் குடும்பத்தினர் மனம் இரங்கவில்லை. `எப்படி உங்கள் மகன் கைநீட்டி அடிக்கலாம்?' என்று கூறியபடி சித்ரவதையைத் தொடர்ந்துள்ளனர். பின்னர், இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் தெரிவித்தால் குடும்பத்தோடு காலி செய்துவிடுவோம் என்று தேவராஜ் குடும்பத்தினர் மிரட்டியுள்ளனர். அந்த மிரட்டலுக்குப் பயந்த வசந்தகுமாரின் குடும்பத்தினர் வெளியில் சொல்லவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து தலைமைச் செயலகக் காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் வசந்தகுமாரின் வீட்டுக்குச் சென்று விசாரித்தார். அப்போது அவருக்குக் கிடைத்த தகவல் உண்மை எனத் தெரியவந்தது. அதனால் வசந்தகுமாரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸார் சேர்த்தனர். பின்னர் அவரிடம் தேவராஜ் மீது புகார் கொடுக்கும்படி போலீஸார் கேட்டனர். முதலில் தயக்கம் காட்டிய வசந்தகுமார், போலீஸாரின் அறிவுரைக்குப்பிறகு தைரியமாகப் புகார் கொடுத்தார்.

அருண்ராஜ்
அருண்ராஜ்

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிந்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார் தேவராஜ் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். பின்னர் தேவராஜ், அவருடைய மனைவி எலிசபெத், மகன்கள் அருண், விமல் மற்றும் டேனியல், பிரசாத் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி 6 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 465, 442, 352, 355, 204, 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து தலைமைச் செயலக காலனி போலீஸார் கூறுகையில், ``தேவராஜ் குடும்பத்தினர் மீதுள்ள பயத்தில் வசந்தகுமார் புகார் கொடுக்க முதலில் தயக்கம் காட்டினார். அந்தளவுக்கு வசந்தகுமாரின் குடும்பத்தினரை தேவராஜ் குடும்பத்தினர் மிரட்டிவைத்துள்ளனர். வசந்தகுமாரின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. வறுமையின் காரணமாக சாந்தி, தன்னுடைய ஒரு கிட்னியை விற்றதாகத் தகவல் கிடைத்துள்ளது. குடும்பத்தை நடத்தவே வசந்தகுமார் சிரமப்பட்டுவருகிறார்.

பிரசாந்த்
பிரசாந்த்

தேவராஜுக்கும் வசந்தகுமாருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறின் தொடர்ச்சியாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வசந்தகுமாருக்கு தேவராஜின் குடும்பத்தினர் சொல்லக்கூட முடியாதளவுக்கு சித்ரவதைகளைச் செய்துள்ளனர்" என்றனர்.

வசந்தகுமாருக்கு நடந்த கொடுமைகளை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார் வெளியில் கொண்டு வந்துள்ளனர். அதற்கு ஓட்டேரி பகுதியில் உள்ள மக்கள் போலீஸாருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

பின் செல்ல