Published:Updated:

அலறவைக்கும் கேரளா! - ஆறு வயது சிறுமி கொலை...

அலறவைக்கும் கேரளா
பிரீமியம் ஸ்டோரி
அலறவைக்கும் கேரளா

கோகெய்ன் கொடுத்து இளம்பெண் பலாத்காரம்...

அலறவைக்கும் கேரளா! - ஆறு வயது சிறுமி கொலை...

கோகெய்ன் கொடுத்து இளம்பெண் பலாத்காரம்...

Published:Updated:
அலறவைக்கும் கேரளா
பிரீமியம் ஸ்டோரி
அலறவைக்கும் கேரளா

கேரளாவை எழுத்தறிவு அதிகம் பெற்ற மாநிலம் என்கிறோம்... அரசியல் விழிப்புணர்வும் அதிகம் என்கிறோம். ஆனால், சமீபகாலமாக வரதட்சணைக் கொடுமை ஆகட்டும்... பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் ஆகட்டும்... அந்த மாநிலத்திலிருந்து வரும் தகவல்கள் கவலையளிக்கக்கூடியவையாக இருக்கின்றன. சமீபத்தில் இடுக்கி மாவட்டத்தில் கூலித் தொழிலாளியின் ஆறு வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், பாலக்காட்டில் கோகெய்ன் போதைப்பொருள் கொடுத்து சீரழிக்கப்பட்ட மாணவி... என்று வரும் செய்திகள் அந்த மாநிலத்தை மட்டுமல்லாமல், தமிழகத்தையும் அதிரச்செய்திருக்கின்றன!

அர்ஜுன்
அர்ஜுன்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பகுதியில், தமிழ்த் தொழிலாளர்கள் அதிகமாக வசித்துவருகிறார்கள். இங்குள்ள குடியிருப்பில் ஜூன் 30-ம் தேதி ஒரு தொழிலாளியின் 6 வயது மகள் கயிற்றில் தொங்கியபடி இறந்துகிடந்தாள். சிறுமியின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், இயற்கைக்கு முரணாகப் பலமுறை சிறுமி சிறார் வதை செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தார்கள். சுற்றுவட்டாரப் பகுதியில் பலரிடமும் விசாரணை நடத்தி, இறுதியில் சிறுமியின் வீட்டை ஒட்டி வசிக்கும் அர்ஜுன் என்ற 22 வயது இளைஞரைக் கைதுசெய்தார்கள். இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான டி.ஒய்.எஃப்.ஐ ஏரியா கமிட்டி தலைவர்.

அர்ஜுனை விசாரணை செய்த போலீஸார், அவன் செய்த கொடூரங்களை நம்மிடம் விவரித்தபோது நெஞ்சை உலுக்கியது... ‘‘வண்டிப்பெரியாரிலுள்ள கூரியர் கம்பெனியில் வேலை செய்துவந்தவன் அர்ஜுன். ஆரம்பத்தில் அவனை விசாரித்தபோது, `சிறுமியைப் பார்த்து இரண்டு நாள்களாகிவிட்டன’ என்றான். ஆனால், சிறுமி கொலைசெய்யப்பட்ட நாளன்று, அர்ஜுனுடன் அந்தச் சிறுமி நின்றிருந்ததைச் சிலர் பார்த்திருக்கிறார்கள். இதையடுத்து எங்கள் பாணியில் முறையாக விசாரித்தபோது அவன் உண்மையை ஒப்புக்கொண்டான்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து சிறார் வதை செய்துவந்திருக்கிறான். ஜூன் 30-ம் தேதி வீட்டில் யாருமில்லாத சமயத்தில், சிறுமியின் வீட்டுக்குள் அர்ஜுன் சென்றிருக்கிறான். அப்போது குரூரமான முறையில் செயல்பட்டதால், சிறுமி மயங்கி விழுந்திருக்கிறார். சிறுமி இறந்ததாக நினைத்த அர்ஜுன், அந்த அறையில் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றைச் சிறுமியின் கழுத்தில் கட்டித் தூக்கியிருக்கிறான். அந்தச் சமயத்தில் மயக்கம் தெளிந்து சிறுமி கண் விழித்திருக்கிறாள். இருந்தாலும், சிறுமி இறக்கும் வரை அங்கு நின்று உறுதி செய்த பிறகு, வீட்டின் முன்பக்கக் கதவை உட்பக்கமாகப் பூட்டிவிட்டு, பிறகு கம்பிகள் இல்லாத ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிச் சென்றிருக்கிறான். விஷயம் தெரிந்த சிறுமியின் பெற்றோர் கதறியழுது, ஊரே கூடி நின்று பார்த்தபோது அர்ஜுனும் எதுவும் தெரியாதவன்போல சென்று பார்த்திருக்கிறான். மரண வீட்டில் பந்தல் கட்டுவதற்கு தார்ப்பாயும் வாங்கிக் கொடுத்திருக்கிறான். அவனுக்குக் கடுமையான தண்டனை வாங்கித் தராமல் விட மாட்டோம்” என்றார்கள்.

கோகெய்ன் கொடுத்து பலாத்காரம்!

பாலக்காடு மாவட்டம், திருத்தாலப் பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால், ஜூன் 10-ம் தேதி அவரின் பெற்றோர் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மனநல மருத்துவர் கவுன்சலிங் அளித்ததில், அந்தப் பெண் 16 வயது முதல் கோகெய்ன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கொடுத்து சிலரால் சிறார் வதை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதையடுத்து, போலீஸார் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், அவர் சொன்ன தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்.

‘‘2019-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சென்டரில் பழக்கமான 25 வயதான இளைஞன், என்னைக் காதலிப்பதாகச் சொன்னான். 18 வயது ஆனதும், திருமணம் செய்வதாகக் கூறி சில இடங்களுக்கு அழைத்துச் சென்றவன், போதைப்பொருள்களை வலுக்கட்டாயமாக எனக்குப் பழக்கமாக்கி சீரழித்தான். அவனின் நண்பர்கள் சிலரும் என்னிடம் அத்துமீறினார்கள். என்னை மட்டுமன்றி, இதேபோல பல சிறுமிகளையும் அவர்கள் தங்கள் வலையில் வீழ்த்தியிருக்கிறார்கள். சிறுமிகளுக்கு போதைப்பொருளைச் சாப்பிடக் கொடுத்து, அதை கேமராவில் படம் பிடித்திருப்பதாக மிரட்டுவார்கள்; நிர்வாணப் படங்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறி தங்கள் வழிக்குக் கொண்டு வருவார்கள். கைகளை பிளேடால் கீறி அதன் வழியாக போதைப்பொருள்களை உடலில் ஏற்றுவார்கள்” என்றெல்லாம் அந்தப் பெண் வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.

அலறவைக்கும் கேரளா! - ஆறு வயது சிறுமி கொலை...

இந்த விவகாரத்தின் பின்னணியில் போதைப்பொருள் கடத்தும் கும்பல் இருப்பதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்தப் பெண்ணின் தந்தைக்கு அறிமுகமான முகம்மது என்ற உன்னி மற்றும் நெளபல் ஆகிய இருவர் போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்கு 18 வயதான பிறகு பாலியல் வன்கொடுமை செய்த அபிலாஷ் என்பவன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு பேரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

நாட்டின் பிற பகுதிகளில் சிறார் வதை, பாலியல் கொலைகள் நடக்கும்போது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் கேரள பிரபலங்கள், இந்தச் சம்பவங்களின்போது அமைதியாக இருப்பதற்கு, சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. என்ன ஆனது கேரளாவுக்கு?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism