அரசியல்
அலசல்
Published:Updated:

கை கால்களை கட்டிப்போட்டு சிறுமி பலாத்காரம்! - கிரிமினல்போல் திட்டமிட்ட சிறுவன்

சிவகங்கை
பிரீமியம் ஸ்டோரி
News
சிவகங்கை

அந்தப் பையன் எப்பவும் போன்ல ஆபாசப் படங்கள் பார்க்குறதை வழக்கமா வெச்சுருந்துருக்கான். அவன் வீட்டுல யாரும் அவனைக் கண்காணிக்கவோ, கண்டிக்கவோ இல்லை

12 வயது சிறுமியின் கை கால்களைக் கட்டிப்போட்டு,14 வயது சிறுவன் பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் சிவகங்கை மாவட்ட மக்களை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டாரத்தில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் அதே தெருவில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் பேச்சுக் கொடுத்து, அருகிலிருந்த பள்ளிக்கூட வளாகத்துக்குள் கூட்டிச் சென்றிருக்கிறார்கள். அங்கிருக்கும் கழிப்பறைக்குச் சிறுமியைக் கூட்டிச் சென்ற சிறுவர்களில் ஒருவன், அந்தக் குழந்தையிடம் பாலியல்ரீதியாகச் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறான். சிறுமி அழ ஆரம்பிக்கவும், கையோடு கொண்டுவந்திருந்த கயிற்றால் அவள் கை கால்களைக் கட்டிப்போட்டு வல்லுறவில் ஈடுபட்டிருக்கிறான்.

இந்த நிலையில், மகளைக் காணவில்லையே என்று சிறுமியின் தாய் தேடிக்கொண்டிருந்தபோது, அழுதபடியே வீடு வந்து சேர்ந்திருக்கிறாள் சிறுமி. தனக்கு நேர்ந்த அவலத்தைத் தாயிடம் சிறுமி சொல்லவும் கதறி அழுத தாய், சிறுமியை மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார். தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட சிறுவனைத் தாக்கி, தொடையில் சூடுவைக்கவே இந்த விவகாரம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறுவன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்த சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், சிறுவனுக்குச் சூடுவைத்த புகாரில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், உறவினர்கள்மீதும் போக்சோவில் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள். இதற்கிடையே சம்பவத்தின்போது உடனிருந்த மற்றொரு சிறுவன் வேறெந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்பதால் அவன் விடுவிக்கப்பட்டிருக்கிறான்.

கை கால்களை கட்டிப்போட்டு சிறுமி பலாத்காரம்! - கிரிமினல்போல் திட்டமிட்ட சிறுவன்

பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள், “அந்தப் பையன் எப்பவும் போன்ல ஆபாசப் படங்கள் பார்க்குறதை வழக்கமா வெச்சுருந்துருக்கான். அவன் வீட்டுல யாரும் அவனைக் கண்காணிக்கவோ, கண்டிக்கவோ இல்லை. அதனாலதான் இந்த வயசுலேயே மெச்சூரிட்டியான கிரிமினல்கள் திட்டமிடுறது மாதிரி பிளான் பண்ணி இந்தக் கொடூரமான காரியத்தைச் செஞ்சுருக்கான்” என்றனர் அதிர்ச்சியோடு.

இது குறித்து சிவகங்கை எஸ்.பி செந்தில்குமாரிடம் பேசினோம். “மாவட்டத்தில் பாலியல் குற்றங்கள், சிறார் மீதான வன்கொடுமைகள் நடக்காத வகையில் பள்ளிக்கூடங்களிலும் கிராமங்களிலும் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்திவருகிறோம். குற்றத்தில் ஈடுபடுவது சிறார்கள் என்றாலும், அவர்கள் குற்றவாளிகள்தான். பெற்றோர் தங்கள் குழந்தைகள்மீது அன்பு காட்டுவதுபோலவே கண்காணிப்பிலும் ஈடுபட வேண்டும். அவர்களின் உலகில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முன்வர வேண்டும்” என்றார்.

மொபைலும் இணையமும் இரு பக்கமும் கூர்மையான கத்தி போன்றவை. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அதில் என்ன செய்யக் கூடாது என்று சொல்லிக்கொடுத்துக் கண்காணிக்காமல்விட்டால், இது போன்ற விபரீதங்கள் பெருகும். பெற்றோர்களே உஷார்!