Published:Updated:

தஞ்சாவூர்: காதல் திருமணம்; கவனிக்க ஆள் இல்லை- உதவுவதாக நடித்து குழந்தையை கடத்திய பெண்! நடந்தது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குழந்தையை கடத்தி செல்லும் மர்ம பெண்
குழந்தையை கடத்தி செல்லும் மர்ம பெண்

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் சில வருடங்களுக்கு முன்பு சுமார் இரண்டரை வயது பெண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டது இது வரை அந்த குழந்தை கண்டுபிடிக்கப்படவில்லை அந்த வழக்கும் என்ன ஆனது என்பதும் தெரியவில்லை

தஞ்சாவூரில் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு உதவி செய்வது போல் நடித்த, மர்மப் பெண் ஒருவர் பிறந்து நான்கு நாள்களே ஆன பெண் குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியிருக்கிறது. போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடத்தப்பட்ட குழந்தையின் பெற்ரோர்
கடத்தப்பட்ட குழந்தையின் பெற்ரோர்

தஞ்சாவூர் பர்மாகாலனி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (24). டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி ராஜலட்சுமி (22). இருவரும் தங்களது வீட்டின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனால் இருவரின் குடும்பாதாரும் அவர்களிடத்தில் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. கர்ப்பமாக இருந்த ராஜலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து கடந்த வாரம் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதாரர் மருத்துவமனையில் பிரவசத்திற்காக சேர்த்தார் குணசேகரன். அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. குடும்பத்தின் ஆதரவு இல்லாததால் குழந்தை பிறந்த நிலையில் உதவிக்கு ஆளில்லாமல் ராஜலெட்சுமியும் அவரது கணவரும் தவித்துள்ளனர்.

இதனைப் பயன்படுத்திக்கொண்ட பெண் ஒருவர், " உங்கள கவனிச்சுக்குறதுக்கு யாரும் இல்லையா. கவலைபடாதீங்க, என் நாத்தனாரை பிரசவத்துக்காக சேர்த்திருக்கோம். ஆஸ்பத்திரியிலதான் தங்கியிருக்கேன். நான் வந்து உங்கள பார்த்துக்குறேந்" என்று கூறியவர் உடனிருந்து அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறார். "யாருனே தெரியலை மூன்று நாளா நம்ம கூடவே இருந்து டீ வாங்கிக் கொடுப்பது தொடங்கி சாப்பாடு வாங்கி ஊட்டி விடுவது வரை தாய் மாதிரி இருந்து அனைத்தையும் செய்றாங்களே" என நினைத்து ராஜலட்சுமியும், குணசேகரனும் நெகிழ்ந்திருக்கின்றனர்.

அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தலில் ஈடுப்பட்ட பெண்
அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தலில் ஈடுப்பட்ட பெண்

நேற்று காலை ராஜலட்சுமி கழிவறைக்குச் சென்று விட்டு திரும்பி வரும்போது, குழந்தையையும், அவருக்கு உதவியாக இருந்த அந்த மர்ம பெண்ணையும் காணவில்லை. எங்கும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து குணசேகரன் போலீஸில் புகார் அளிக்க விசாரணையில் இறங்கிய போலீஸார் மருத்துவ மனையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 3 நாள்களாக உதவி செய்வது போல் நடித்த அந்த மர்மப் பெண் யாரும் இல்லாத நேரம் பார்த்து பச்சை நிற கட்டைப்பைக்குள் குழந்தையை வைத்து கடத்திச் சென்றது தெரிய வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"ஆதரவு கொடுக்க வந்த தாயாக நெனச்சேன். ஆனா பிறந்து 4 நாளே ஆன என்னோட உசுர தூக்கிட்டு போறதுக்குத்தான் அப்படி நடிச்சாங்களா" என்று ராஜலட்சுமி வெடித்து கதறுகிறார்.

ஆட்டோ ஏற செல்லும் மர்ம பெண்
ஆட்டோ ஏற செல்லும் மர்ம பெண்

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த மர்மப் பெண் பச்சை நிற கட்டைப் பைக்குள் குழந்தையை வைத்து எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வெளியே வருவதுடன், எதிரே உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்கு சென்று ஆட்டோவில் ஏறி செல்வது வரை சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. போலீஸ் அந்த ஆத்தோ ஓட்டுநரிடம் விசாரிக்க, புதிய பேருந்து நிலையத்துக்குள் சென்று கும்பகோணம் பஸ் நிற்கும் இடத்தில் இறக்கி விட்டு வந்ததாக கூறியிருக்கிறார்.

இதையடுத்து உஷாரான போலீஸ் சிசிடிவியில் பதிவான பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரை பற்றி தகவல் கிடைத்தால் தெரிவிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சமூக வலைதளங்களில் போலீஸ் தரப்பில் பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் உள்ள சிசிடிவி கேமராவை போலீஸார் செய்தனர். ஓட்டுநர், நடத்துநர் என பலரிடம் போட்டோவை காட்டி அந்த பெண் குறித்த தகவலை விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூரை ஒட்டியுள்ள வெளி மாவட்ட போலீஸாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குழந்தையை கடத்திச் சென்ற பெண் வெளியூருக்கு செல்ல வாய்ப்பிருப்பதால், அதன் அடிப்படையில் விசாரணையினை தீவிரப்படுத்தி தேடி வருகின்றனர். 3 நாள்கள் வரை அந்தப் பெண் ராஜலட்சுமியுடன் தங்கியிருந்து உதவியிருக்கிறார். ஆனால் அவரின் செல் நம்பரைக் கூட தம்பதி வாங்காதது குழந்தை கடத்தல் பெண்ணுக்கு சாதகமாகிவிட்டது. இப்போது போலீஸுக்கு இருக்கும் ஒரே துப்புதுப்பு அந்த பெண் பச்சை நிற பையை கையில் எடுத்து செல்வது தான். அதை வைத்தே விசாரணையினையும் தொடர்ந்து வருகின்றனர்.

போலீஸ் அறிவிப்பு
போலீஸ் அறிவிப்பு

கடந்த 2017-ம் ஆண்டு கும்பகோணம் பேருந்து நிலையத்தில், கைக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக தன்னுடைய இரண்டரை வயதுடைய மகளை நிற்க வைத்து விட்டு, பாலூட்டும் அறைக்குச் சென்றுவிட்ட தாய், திரும்பி வந்து பார்க்கும் மகளை காணவில்லை. கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பேருந்து நிலையத்தில் இருந்த பிச்சைக்காரர் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றிருக்க வாய்ப்பிருப்பதாக கருதி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அதன் பிறகு அந்த வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. கடத்தப்பட்ட அந்த குழந்தை இது வரை கிடைக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கிட்டதட்ட மூன்று வருடத்திற்கு பிறகு தற்போது மீண்டும் மற்றொரு பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சிக்குரியது.

குழந்தை கடத்தலில் ஈடுப்பட்ட பெண்
குழந்தை கடத்தலில் ஈடுப்பட்ட பெண்

போலீஸ் தரப்பில் இதுகுறித்து பேசும்போது, " தஞ்சாவூரில் கடத்தப்பட்ட குழந்தையுடன், அந்தப் பெண் வேற ஊருக்கு சென்றிருக்க் வாய்ப்புள்ளதால் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸார் அலர்ட் செய்யப்பட்டு அனைத்து பேருந்து நிலையங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை,சீர்காழி பகுதியில், குழந்தை கடத்தல் கும்பல் ஒன்று முன்பு செயல்பட்டு வந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியிலும் விசாரணை செய்யப்படுகிறது. சிசிடிவில் பதிவான காட்சிகள், பச்சை நிற கட்டைப் பை போன்றவற்றை வைத்து விசாரணை தொடர்ந்து வருகிறோம். ஏற்கெனவே குழந்தை கடத்தலில் ஈடுப்பட்ட கும்பலை சேர்ந்த யாரும் இதனை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம். விரைவில் கடத்தப்பட்ட குழந்தை மீட்க்கப்படும், அதில் ஈடுப்பட்ட மர்மப் பெண் கைது செய்யப்படுவார்" என தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு