Published:Updated:

ரயில் நிலையத்தில் குழந்தைகளோடு தூங்கிய தாய்க்கு நேர்ந்த சோகம் - சிசிடிவியில் சிக்கிய மர்மநபர்

சென்னை எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையத்தில் குழந்தைகளோடு தூங்கிய தாய், கண்விழித்தபோது அவரின் அருகில் படுத்திருந்த ஒரு குழந்தையைக் காணவில்லை.

ரயில் நிலையத்தில் குழந்தையைத் தூக்கிச் செல்லும் மர்மநபர்
ரயில் நிலையத்தில் குழந்தையைத் தூக்கிச் செல்லும் மர்மநபர்

சென்னை எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் படுத்திருந்த பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையைக் காணவில்லை என்று கதறினார். அவரின் சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் என்ன நடந்தது என்று கேட்டனர். அப்போது அவர், நானும் என்னுடைய இரண்டு குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்தோம். திடீரென ஒரு குழந்தையைக் காணவில்லை என்று கண்ணீர்மல்கக் கூறினார். இதையடுத்து ரயில் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் அந்தப் பெண்ணிடம் விசாரித்தனர்.

எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம்
எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம்

அந்தப் பெண் கூறிய தகவலையடுத்து பிளாட்பாரத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் முதலில் ஆய்வு செய்தனர். அப்போது கையில் ஒரு பை, தோளில் குழந்தை என ஒருவர் பிளாட்பாரத்தில் நள்ளிரவில் நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த நபர் யாரென்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். ஏற்கெனவே சென்னை மெரினாவில் பலூன் விற்கும் தம்பதியிடம் சினிமாவில் நடிக்க வைப்பதாக நாடகமாடி நேற்றிரவு ஒரு குழந்தை கடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக பூக்கடை போலீஸார் விசாரித்துவரும் நேரத்தில் ரயில் நிலையத்தில் இன்னொரு குழந்தைக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மர்ஜினா ( 21). இவரின் கணவர் அசார் அலி. இந்தத் தம்பதிக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர். மூத்தவள் அஜிதா இளையவள் ரஜிதா. நேற்றிரவு அஜிதா, ரஜிதா ஆகியோருடன் ரயில் நிலையத்தில் மர்ஜினா தூங்கியுள்ளார். அப்போதுதான் ரஜிதாவை மர்ம நபர் கடத்திச் சென்றுள்ளார்.

  மர்ஜினா
மர்ஜினா

மர்ஜினாவுக்கும் அவரின் கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் மர்ஜினாவும் குழந்தைகளும் தனியாக வாழ்ந்துவருகின்றனர். இந்தத் தகராறு காரணமாக குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிசிடிவி மூலம் குழந்தையைக் கடத்தியவரை தேடிவருகிறோம்" என்றனர்.