Published:Updated:

சென்னை: குழந்தை கடத்தல் வழக்கு... மதபோதகர் சிக்கிய பின்னணி!

குழந்தை கடத்தல் ( Representation Image )

சென்னை தி.நகரில் குழந்தை கடத்தல் வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை: குழந்தை கடத்தல் வழக்கு... மதபோதகர் சிக்கிய பின்னணி!

சென்னை தி.நகரில் குழந்தை கடத்தல் வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
குழந்தை கடத்தல் ( Representation Image )

சென்னை தி.நகர், சீரணிபுரத்தைச் சேர்ந்தவர் கீதா. இவர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``நான் மேற்கண்ட முகவரியில் என்னுடைய பெற்றோருடன் வசித்துவருகிறேன். என்னுடைய தந்தை திருஞானம் பெயின்ட்டிங் வேலை செய்துவருகிறார். என் அம்மா வீட்டு வேலை செய்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு சந்திரசேகர் என்பவர், எங்கள் பகுதியில் வாடகைக்குக் குடிவந்தார். அதனால் இருவரும் பழகிவந்தோம். கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது சந்திரசேகர், என்னைக் காதலிப்பதாகக் கூறினார். அதற்கு நானும் சம்மதித்தேன்.

கைதான மதபோதகர்
கைதான மதபோதகர்

இதையடுத்து இருவரும் பீச், பார்க் எனச் சென்றுவந்தோம். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் என்னைத் திருமணம் செய்துகொள்வதாக சந்திரசேகர் ஆசைவார்த்தை கூறி தனிமையிலும் இருந்தார். திடீரென ஒருநாள் எனக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக என்னை கோடம்பாக்கத்திலுள்ள மருத்துவமனைக்குக் குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு என்னைப் பரிசோதித்த டாக்டர்கள், நான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த என்னுடைய குடும்பத்தின, கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று விசாரித்தனர். அப்போது நான் சந்திரசேகரின் பெயரைக் கூறினேன்.

இதையடுத்து சந்திரசேகரிடம் என்னுடைய பெற்றோர் பேசினர். அப்போது அவரும் என்னைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்தார். இந்த நிலையில் கடந்த 5.12.2021-ம் தேதி எனக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. எனக்குத் திருமணம் நடக்காததால் குழந்தையின் அப்பா பெயரை மருத்துவமனையில் பதிவுசெய்ய மறுத்துவிட்டார்கள். இந்தச் சமயத்தில் மருத்துவமனைக்கு வந்த சந்திரசேகர், என்னிடம் மூன்று மாதங்களுக்குள் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன். அதுவரை நான் சொல்கிற இடத்தில் குழந்தையோடு வர வேண்டும் என்று கூறினார். அவரின் அன்பான பேச்சைக் கேட்டு மருத்துவமனைக்குத் தெரியாமல் குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் சென்னை தி.நகர் ராஜாபாதர் தெருவில் உள்ள விடுதிக்குச் சென்றேன்.

குழந்தை
குழந்தை

அப்போது இந்தக் குழந்தையை என்னிடம் கொடுத்தால் ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு, அதன் பிறகு திருமணம் செய்துகொண்டு நாம் சேர்ந்து வாழலாம் என்று சந்திரசேகர் என்னிடம் தெரிவித்தார். வேறு வழியின்றி குழந்தை பிறந்த 5-வது நாளில் அவரிடம் குழந்தையைக் கொடுக்கச் சம்மதித்தேன். கடந்த 10.12.2021-ம் தேதி என்னையும் குழந்தையையும் காரில் செங்கல்பட்டில் உள்ள டோல்கேட் பகுதிக்கு சந்திரசேகர் அழைத்துச் சென்றார். அங்கு ஏற்கெனவே தயாராக சந்திரசேகரின் நண்பர் கார்த்திக்கும், அவருடன் ஒரு பெண்ணும் காத்திருந்தனர். அந்தப் பெண் என்னிடம், தான் ஆசிரமம் நடத்திவருவதாகவும் பெண் குழந்தையை நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறேன் என்றும் கூறியதோடு, மூன்று மாதங்களுக்குப் பிறகு குழந்தையை என்னிடம் ஒப்படைத்துவிடுவதாகத் தெரிவித்தார். அதை நம்பி குழந்தையை அவரிடம் கொடுத்தேன்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு குழந்தை குறித்து சந்திரசேகரிடம் விசாரித்தேன். அப்போது அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. என்னையும் திருமணமும் செய்துகொள்ளவில்லை. இந்தச் சமயத்தில்தான் சந்திரசேகர், வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளப்போவதாக என்னிடம் தெரிவித்தார். மேலும் அந்தப் பெண்ணுடன் சந்திரசேகர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் வைத்திருந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த நான், குழந்தையை என்னிடம் கொடுக்கும்படி சந்திரசேகரிடம் கேட்டேன். அப்போது அவர் `குழந்தையை விற்றுவிட்டேன். இனிமேல் யார் நினைத்தாலும் குழந்தையைத் திரும்ப பார்க்க முடியாது’ என்று தெரிவித்தார். எனவே எனது குழந்தையை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா, வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி, சந்திரசேகரைக் கைதுசெய்தார்.

கைது
கைது

சந்திரசேகர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீஸார், திருநெல்வேலியைச் சேர்ந்த கிறிஸ்துவ மத போதகரான பிரான்சிஸ் மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த தேன்மொழி ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது ஒரு லட்சம் ரூபாய்க்கு குழந்தை விற்கப்பட்டது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு பிரான்சிஸ், தேன்மொழி ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் குழந்தை கடத்தல் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.