சமூகம்
Published:Updated:

டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பாங்க... குழந்தை நமக்குப் பிறந்தது தெரிஞ்சா ஜெயிலுக்குத்தான் போகணும்!

மோகன்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
மோகன்ராஜ்

- கொலை செய்த இளைஞன்... உடந்தையான சிறுமி!

18 வயதுக்குள் இரண்டு குழந்தைகளுக்குத் தாயானதோடு, ‘போக்சோ வழக்கில் தண்டனை கிடைக்கும்’ என்று காதலன் பயம் காட்டியதால், தனக்குப் பிறந்த குழந்தையைக் கொலைசெய்ய உடந்தையாகவும் இருந்திருக்கிறார் அப்பாவிச் சிறுமி ஒருவர். இந்தச் சம்பவம் திருப்பூர் மாவட்டத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் மோகன்ராஜ். இவன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் காதல் என்ற பெயரில் நெருங்கிப் பழகியிருக்கிறான். அதன் விளைவாக சிறுமி கர்ப்பமாக, மோகன்ராஜை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையிலடைத்துள்ளனர் போலீஸார். இந்த நிலையில் சிறுமிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு அந்தச் சிறுமிக்கு வேறு ஓர் இளைஞருடன் திருமணம் செய்துவைத்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு சிறுமி மீண்டும் கர்ப்பமானதைத் தொடர்ந்து, பிரசவத்துக்காக மீண்டும் தன் தாய் வீட்டுக்கு, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வந்திருக்கிறார். அங்கு அவருக்கு மீண்டும் ஓர் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பாங்க... குழந்தை நமக்குப் பிறந்தது தெரிஞ்சா ஜெயிலுக்குத்தான் போகணும்!

போக்சோ வழக்கில் கைதான மோகன்ராஜ் ஜாமீனில் வெளியே வந்துவிட, அந்தச் சிறுமி தாய் வீட்டுக்கு வந்திருக்கும் தகவலறிந்து சிறுமியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறான். விவசாயக்கூலிகளான சிறுமியின் பெற்றோர் பகல் முழுக்க வேலைக்குச் சென்றுவிடுவதால், வீட்டில் யாரும் இல்லாததைப் பயன்படுத்தி கடந்த நான்கு மாதங்களுக்கும் மேல் மோகன்ராஜ் சிறுமியின் வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறான். இந்த நிலையில்தான், கடந்த 19-ம் தேதி, ‘தனது முதல் குழந்தை வீட்டிலிருந்த அண்டாவுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக’ சிறுமி கூறியிருக்கிறார். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் வரவே, இது குறித்து, காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அங்கு வந்த போலீஸார், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில், போக்சோ வழக்கில் கைதான மோகன்ராஜ், சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதும், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியிடமும், மோகன்ராஜிடமும் தனித்தனியாக விசாரணையைத் தொடங்கியபோதுதான், அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின.

டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பாங்க... குழந்தை நமக்குப் பிறந்தது தெரிஞ்சா ஜெயிலுக்குத்தான் போகணும்!

இது தொடர்பாக நம்மிடம் பேசிய போலீஸார், ‘‘பிரசவத்துக்காகச் சிறுமி தாய் வீட்டுக்கு வந்ததைத் தெரிந்துகொண்ட மோகன்ராஜ், எப்படியாவது போக்சோ வழக்கிலிருந்து தப்பிவிட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறான். அதற்காக அந்தச் சிறுமியிடம் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள குழந்தையைக் கொஞ்சுவது, மிட்டாய் வாங்கித்தருவது என நடித்திருக்கிறான். சிறுமியும் மோகன்ராஜை நம்பியிருக்கிறார். சிறுமி தன்னை நம்புவதைப் பயன்படுத்திக்கொண்டு, ‘குழந்தை உயிரோடு இருந்தால் போக்சோ வழக்கில் தனக்கு தண்டனை உறுதியாகக் கிடைத்துவிடும்’ என்று பயந்த மோகன்ராஜ், குழந்தையைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறான். சிறுமியிடம் விஷயத்தைச் சொன்னபோது, மறுத்து பிரச்னை செய்திருக்கிறார். எனவே, அவளை அச்சுறுத்தினால்தான் காரியத்தை முடிக்க முடியும் எனத் திட்டமிட்ட மோகன்ராஜ், சிறுமியிடம் ‘நமக்கும் குழந்தைக்கும் டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பாங்க... அப்படி எடுத்தா, குழந்தை நம்ம ரெண்டு பேருக்குத்தான் பிறந்ததுனு தெரியும். போலீஸ் நம்ம ரெண்டு பேரையும் கைது பண்ணுவாங்க. ஜெயிலுக்குத்தான் போகணும்” என்று சிறுமியைக் கடுமையாக பயமுறுத்தியிருக்கிறான். பயந்துபோன சிறுமி வேறு வழியின்றி குழந்தையைக் கொலைசெய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதையடுத்து, கடந்த 19-ம் தேதி காலை, குழந்தையின் கழுத்தைத் துணியால் நெரித்துக் கொலைசெய்துவிட்டு, உடலை அண்டாவுக்குள் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறான் மோகன்ராஜ். சிறிது நேரம் கழித்து ‘குழந்தை அண்டாவில் தவறி விழுந்து இறந்துவிட்டதாக’ சிறுமி கூச்சலிட்டிருக்கிறார். ஆனாலும், அக்கம் பக்கத்தினருக்குச் சந்தேகம் எழ, போலீஸில் புகார் செய்தனர். இருவரையும் கைதுசெய்து விசாரித்தபோது, உண்மையை ஒப்புக்கொண்டனர்’’ என்றனர்.

இது குறித்து சிறுமியின் உறவினர்களிடம் நாம் விசாரித்தபோது, ‘‘சிறுமிக்கு முதல் குழந்தை பிறக்கும் வரை அரசு அதிகாரிகள் வந்து ஆலோசனை கொடுத்து, பார்த்துக்கொண்டனர். பிறகு யாரும் இங்கு வரவில்லை. சிறுமியை ஏதாவது விடுதியில் சேர்த்துவிட்டிருக்கலாம். இந்நேரம் படித்து நல்ல நிலைக்கு வந்திருப்பாள். இன்று வாழ்க்கையையும் இழந்து, குழந்தையையும் கொன்று கொலைகாரியாகிவிட்டாள்’’ என்றனர் கண்ணீருடன்.

டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பாங்க... குழந்தை நமக்குப் பிறந்தது தெரிஞ்சா ஜெயிலுக்குத்தான் போகணும்!

இந்த விஷயம் குறித்து, திருப்பூர் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரான நித்யாவிடம் கேட்டோம். ‘‘நாளிதழில் வந்த செய்தியைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டோம். இனிமேல்தான் விசாரணை நடத்துவோம்’’ என்றார் அசால்டாக.

இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய வழக்கறிஞர் சுதா காந்தி, ‘‘96% போக்சோ வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசு, அதிகாரிகளை நியமிப்பதில்லை. போக்சோ வழக்குகளைக் கையாளும் காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவினருக்கு அந்தச் சட்டம் குறித்த புரிதலே கொஞ்சமும் இல்லை. இந்தச் சிறுமி வழக்கிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆலோசித்து, சிறுமியைக் கண்காணித்திருந்தால் தனக்குப் பிறந்த குழந்தையைக் கொலைசெய்யும் அளவுக்குச் சென்றிருக்க மாட்டார் அந்தச் சிறுமி’’ என்றார்.

14 வயதில், ஒருவனிடம் ஏமாந்து கர்ப்பமானபோதே பெற்றோர் அந்தச் சிறுமிக்குக் கூடுதல் கவனம் கொடுத்துப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். மாறாக, மைனரான சிறுமிக்குத் திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். அந்தச் சிறுமியையும் ஒருவர் மனசாட்சி இன்றித் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். வழக்கு முடியவில்லை, தவறு செய்தவன் ஜாமீனில் வெளியே வந்து குழந்தையையும் கொன்றுவிட்டான். இதைத் தடுத்திருக்கவேண்டிய, சிறுமியைப் பாதுகாத்திருக்கவேண்டிய மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களோ பெரும் அலட்சியம் காட்டியிருக்கிறார்கள். பாலியல் குறித்தோ போக்சோ குறித்தோ அந்தச் சிறுமிக்குப் போதிய ஆலோசனை வழங்கப்படவில்லை என்பது இதில் தெளிவாகிறது. குற்றத்துக்கு மேல் குற்றம் செய்யும் ஒருவன் ஜாமீனில் வெளியே வருகிற வகையில்தான் போக்சோ வழக்குகளின் யதார்த்த நிலை இருக்கிறது.

பெற்றோர், காதலன், கணவன்(?), அரசு, சட்டம், காவல்துறை என அத்தனை பேராலும் ஒரு சிறுமியின் வாழ்க்கை சின்னா பின்னமாகியிருக்கிறது. இதற்கு யார் பொறுப்பேற்பது?