Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி:`2 வாரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட 6 குழந்தை திருமணங்கள்!’ -பதறவைக்கும் லாக்டெளன் ரிப்போர்ட்

சிறு வயது திருமணங்கள்
சிறு வயது திருமணங்கள்

குழந்தைத் திருமணத்தை தடுக்கத் தவறும் பெற்றோர், பாதுகாவலர், அந்தத் திருமணத்தில் கலந்துகொள்பவர்களுக்கும் இரண்டு ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் வரை அபராதமும் நீட்டித்து வழங்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் அண்மைக் காலங்களில் சிறார் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. போக்சோ வழக்குகளும் அதிகம் பதிவாகிவருகின்றன. இந்தநிலையில், தற்போது குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறுவதாக மீண்டும் புகார்கள் வந்து குவிகின்றன. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு 8-க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன. இவற்றில் ஆறு குழந்தைத் திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சிறார் வதை
சிறார் வதை

நீலகிரியில் மீண்டும் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள் குறித்து நம்மிடம் பேசிய சமூக நலத்துறை அலுவலர் ஒருவர், ``நீலகிரியில் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடந்தது உண்மைதான். பல வருஷமா தொடர்ந்து கண்காணித்து விழிப்புணர்வு கொடுத்துட்டுவர்றோம். கொஞ்ச வருஷமா ஓரளவுக்கு கன்ட்ரோல்ல இருந்தது. இப்ப லாக்டெளன் சமயத்துல மாணவர்களெல்லாம் வீட்ல இருக்காங்க. பெற்றோர்கள் கூலி வேலைக்குப் போறாங்க. பெண் குழந்தைகளை வீட்டுல விட்டுட்டு போனா பாதுகாப்பு இல்லைன்னு நினைச்சு, யாருக்காவது திருமணம் செஞ்சு கொடுத்தாப் போதும்னு தப்பான ஒரு விஷயத்தைச் செய்றாங்க. ஒன்பதாம் வகுப்பு படிக்கிற 14 வயசு பையனுக்கு 17 வயசு பொண்ணைக் கட்டிவெக்கப் பார்த்தாங்க. தடுத்து நிறுத்திட்டோம். இதே மாதிரி 15 வயசு, 14 வயசு சிறுமிகளுக்கு நடக்கவிருந்த திருமணங்களையும் நிறுத்தி கேஸ் போட்டோம். சிறுவர்களை மீட்டு காப்பகங்களுக்கு அனுப்பிட்டோம்" என்றார்.

நீலகிரி மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் (பொறுப்பு) தேவகுமாரி, ``மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் குன்னூர் 2, கூடலூர் 3, ஊட்டியில் ஒன்று என மொத்தம் ஆறு குழந்தைத் திருமணங்கள் நடைபெறவிருப்பதாக சமூக நலத்துறைக்குத் தகவல் கிடைத்தது. காவல்துறையினருடன்‌ சென்று குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தினோம். இது தொடர்பாக ஐந்து பேர் மீது வழக்குகள் பாதிப்பு செய்யப்பட்டுள்ளன. குழந்தைத் திருமண தடுப்பு சட்டத்தின்படி பெண்களின் திருமண வயது 18-ம், ஆண்களுக்கு 21 வயதும் பூர்த்தியடைந்து இருக்க வேண்டும். இந்த வயது பூர்த்தியடையாமல் திருமணம் செய்வது சட்டப்படிக் குற்றம். குழந்தைத் திருமணத்தை முன்னின்று நடத்துபவர்கள், வழிகாட்டுபவர்கள், துண போகிறவர்கள், ஆதரிப்பவர்கள் மற்றும் மறைப்பவருக்கு இரண்டு ஆண்டு வரை கடுங்காவல் தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

குழந்தைத் திருமணம்
குழந்தைத் திருமணம்

குழந்தைத் திருமணத்தை தடுக்க தவறும் பெற்றோர், பாதுகாவலர், அந்தத் திருமணத்தில் கலந்துகொள்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் வரை அபராதமும் நீட்டித்து வழங்கப்படும். குழந்தைத் திருமணத்தில் ஈடுபடும் செயல், பிடியாணையின்றி கைது செய்வதற்குரிய மற்றும் பிணையில் விடுவிக்க இயலாத குற்றம். எனவே, நீலகிரி மாவட்டத்தில் ஏதேனும் இடத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறுவதாகத் தெரியவந்தால் மாவட்ட சமூகநல அலுவலர் - 9655988869, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் - 9894210182, சைல்டு லைன் 1098, ஒருங்கிணைந்த சேவை மையம் - 9943040474 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்"என்றார்.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, "தற்போது பள்ளிகள் இயங்காததால் குழந்தைகளுக்கு எதிராக இது போன்ற திருமணங்கள் நடைபெறுவதாகத் தெரியவந்துள்ளது. இதில் எந்த சமரசமும் கிடையாது. குழந்தைத் திருமணங்களை நடத்துபவர்கள் மற்றும் ஆதரிப்பவர்கள் எனப் பாரபட்சமின்றி குற்ற வழக்குகள் பதியப்படும். இவற்றைக் கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்படும். தொடர்‌ விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்படுகின்றன" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு