Election bannerElection banner
Published:Updated:

`அந்தக் குழந்தை எனக்குப் பிறக்கல... அதான் அப்படி பண்ணிட்டேன்!’ -அதிர்ச்சிகொடுத்த வேலூர் இளைஞர்

கைதுசெய்யப்பட்ட இளைஞர் பிரவீன் குமார்
கைதுசெய்யப்பட்ட இளைஞர் பிரவீன் குமார்

மனைவியின் முதல் கணவருக்குப் பிறந்த குழந்தையை அடித்துக்கொன்றுவிட்டு நாடகமாடிய இரண்டாவது கணவரை போலீஸார் கைதுசெய்தனர்.

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர் லாவண்யா (20). இவர், திருப்பத்தூரை அடுத்த பாய்ச்சல் கிராமத்தைச் சேர்ந்த சிவசக்திவேல் (22) என்ற லாரி ஓட்டுநரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு வயதில் கலை ரஞ்சினி என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், சிவசக்திவேலுக்கு பாய்ச்சல் கிராமத்தில் உள்ள வேறொரு பெண்ணுடன் தவறான தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான தகராறில், கணவர் சிவசக்திவேலை பிரிந்து கடந்த ஆண்டு குழந்தையை தூக்கிக்கொண்டு சத்துவாச்சாரியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார் லாவண்யா.

`19 நாள் காவிரி நீர் கிடைக்காது!’ -வேலூர், திருப்பத்தூர் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கலெக்டர்கள்

தாய் வீட்டிலிருந்தபடியே கட்டட சித்தாள் வேலைக்குச் சென்றுள்ளார். கே.வி.குப்பத்தை அடுத்த தேவரிஷிகுப்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (25) என்ற நபரும் லாவண்யாவுடன் சித்தாள் வேலை செய்துவந்தார். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. லாவண்யாவைத் திருமணம் செய்துகொள்ள பிரவீன் குமார் விருப்பம் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே திருமணமாகி கணவரைப் பிரிந்ததைக் கூறிய லாவண்யா, தனக்குக் குழந்தை இருப்பது குறித்து பிரவீன் குமாரிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். பிரவீன் குமாரும், ``முதல் திருமணத்தைப் பற்றி தனக்குக் கவலையில்லை’’ என்று கூறி கடந்த பிப்ரவரி மாதம், குடியாத்தம் அருகே ஒலக்காசியில் உள்ள கோயிலுக்கு லாவண்யாவை அழைத்துச் சென்று தாலி கட்டி மனைவியாக்கிக்கொண்டார்.

திருமணம் முடிந்த கையுடன் தாய் வீட்டிலிருந்த தன் குழந்தையையும் இரண்டாவது கணவரின் வீட்டுக்குத் தூக்கிச் சென்றார் லாவண்யா. ``யாருடையது இந்தக் குழந்தை... நம் வீட்டுக்கு எதற்காக தூக்கிக் கொண்டு வந்தாய்...?’’ என்று பிரவீன் குமார் கேட்டுள்ளார். அதற்கு லாவண்யா, ``இது, என் அக்காவின் குழந்தை. அக்கா இறந்துவிட்டாள். தாயைப் பிரிந்த ஏக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நான் அம்மாவாக இருந்து வளர்க்கிறேன்’’ என்று கூறி மீண்டும் உண்மையைக் கூறாமல் மறைத்துள்ளார். எனினும், அந்தக் குழந்தை தன்னுடைய இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக நினைத்துக் கோபமடைந்த பிரவீன் குமார், ``குழந்தையை உன் அம்மா வீட்டிலேயே விட்டுவிடு... நமக்கு வேண்டாம்’’ என்று கூறியிருக்கிறார்.

சம்பவம் நடைபெற்ற வீடு
சம்பவம் நடைபெற்ற வீடு

லாவண்யாவுக்கு குழந்தையைப் பிரிந்திருக்க மனம் வரவில்லை. இதனால், இரண்டாவது கணவருடனும் லாவண்யாவுக்கு தினந்தோறும் தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. குழந்தையிடம் பிரவீன் குமார் அடிக்கடி கடுமையாக நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு குழந்தை திடீரென வலிப்பு வந்து மயங்கிவிட்டதாகக் கூறி உள்ளூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் தூக்கிச் சென்றனர். குழந்தைக்கு மூச்சுப் பேச்சு இல்லாததால், உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லுமாறு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் கூறியிருக்கிறார்கள். அங்கிருந்து, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று குழந்தையை மருத்துவர்களிடம் காட்டினர்.

பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை இறந்ததை உறுதி செய்தனர். அதையடுத்து, அவசர அவசரமாகக் குழந்தையின் உடலை தூக்கிக் கொண்டு திருப்பத்தூரில் உள்ள முதல் கணவரின் வீட்டுக்கு இரண்டாவது கணவருடன் லாவண்யாவும் சென்றார். முதல் கணவரிடம், ``வலிப்பு வந்து குழந்தை இறந்துவிட்டது. நீங்களே அடக்கம் செய்துகொள்ளுங்கள். உங்களின் வாரிசுதானே...?’’ என்று கூறியிருக்கிறார்கள். குழந்தையின் சாவில் சந்தேகமடைந்த முதல் கணவர் சிவசக்திவேல், ``குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. என்னிடம் எதற்காக உடலைக் கொண்டுவந்து இந்த நேரத்தில் அவசர அவசரமாகக் கொடுக்க வேண்டும். நீங்கள் எதையோ மறைக்கப் பார்க்கிறீர்கள்’’ என்று கேட்டுள்ளார்.

கே.வி.குப்பம் காவல் நிலையம்
கே.வி.குப்பம் காவல் நிலையம்

உடனே, சுதாரித்துக்கொண்ட லாவண்யாவும் அவரின் இரண்டாவது கணவரும் குழந்தையின் உடலைக் கொடுக்காமல் மீண்டும் கே.வி.குப்பம் பகுதிக்குத் திரும்பினர். அதிர்ச்சியில் உறைந்துபோன முதல் கணவர் சிவசக்திவேல், அவர்களைப் பின்தொடர்ந்து வந்து கே.வி.குப்பம் போலீஸில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் முரளீதரன் வழக்கு பதிந்து லாவண்யாவையும் அவரின் இரண்டாவது கணவர் பிரவீன் குமாரையும் பிடித்துக் காவல் நிலையம் அழைத்துவந்து கிடுக்கிப்பிடியாக விசாரணை மேற்கொண்டார். அப்போதும் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறினர். பின்னர் தங்களுடைய பாணியில் பிரவீன் குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதன்பிறகே, குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

பிரவீன் குமார் கொடுத்த வாக்குமூலத்தில், ``குழந்தை கலை ரஞ்சினி எங்களின் சந்தோஷத்துக்கு இடையூறாக இருந்தாள். திருமணத்துக்குப் பிறகு சில நாள்கள் வரை அது என் மனைவியின் முதல் கணவருக்குப் பிறந்தது என்று தெரியாது. குழந்தை இருக்கும் உண்மையை மறைத்து என்னை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டாள். பின்னரே, இந்தக் குழந்தை மனைவிக்குப் பிறந்தது என்று தெரியவந்தது. கடந்த ஒரு வாரம் முன்பு கே.வி.குப்பம் அடுத்த சீதாராம்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்துக் குடியேறினோம். குழந்தையை மாமியாரிடம் கொடுத்துவிடுமாறு கூறியும் மனைவி கேட்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருந்தேன். சம்பவத்தன்று இரவு மது போதையில் வீட்டுக்கு வந்தேன்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர் பிரவீன் குமார்
கைதுசெய்யப்பட்ட இளைஞர் பிரவீன் குமார்

ஏற்கெனவே ஆத்திரத்தில் இருந்த எனக்குக் குழந்தையை பார்த்ததும் கோபம் வெறியாக மாறியது. குழந்தையைத் தூக்கி வீசினேன். சுவரில் மோதி தரையில் விழுந்த குழந்தை மூச்சுப் பேச்சு இல்லாமல் மயங்கினாள். அப்போதே குழந்தை இறந்துவிட்டதை தெரிந்துகொண்டோம். `போலீஸிடம் சிக்கிக் கொள்வோம்’ என்ற பயத்தில்தான் குழந்தைக்கு வலிப்பு வந்தது என்று நாடகமாடினோம். எனக்குப் பிறக்கவில்லை.... அதனால்தான் அப்படி பண்ணிட்டேன்’’ என்று பிரவீன் குமார் கூறியதாக இன்ஸ்பெக்டர் முரளீதரன் நம்மிடம் தெரிவித்தார். இதையடுத்து, கொலை வழக்காகப் பதிவுசெய்த போலீஸார் பிரவீன் குமாரை கைதுசெய்தனர். குழந்தையைக் கொன்ற இந்த கொடூரச் சம்பவம், வேலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு