Published:Updated:

விலா எலும்பில் முறிவு; உடம்பெல்லாம் கொப்பளம்! - சுடு கஞ்சியை ஊற்றி குழந்தையைக் கொன்ற கொடூரன்

குழந்தையைக் கொன்ற கொடூரன்

மனைவியின் முதல் கணவனுக்குப் பிறந்த 2 வயதுக் குழந்தையை கொடூரமாக துன்புறுத்திக் கொன்றிருக்கிறார் கொடூர குணம் கொண்ட நபர் ஒருவர். ஆரணி அருகே நடந்திருக்கும் இந்தச் சம்பவம், பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

விலா எலும்பில் முறிவு; உடம்பெல்லாம் கொப்பளம்! - சுடு கஞ்சியை ஊற்றி குழந்தையைக் கொன்ற கொடூரன்

மனைவியின் முதல் கணவனுக்குப் பிறந்த 2 வயதுக் குழந்தையை கொடூரமாக துன்புறுத்திக் கொன்றிருக்கிறார் கொடூர குணம் கொண்ட நபர் ஒருவர். ஆரணி அருகே நடந்திருக்கும் இந்தச் சம்பவம், பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
குழந்தையைக் கொன்ற கொடூரன்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்திருக்கும் சந்தவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் மகள் ஜெயசுதா, வயது 29. சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 2017-ம் ஆண்டு நர்சிங் வேலை செய்துவந்த ஜெயசுதாவுக்கு அதே மருத்துவமனையில் எலெக்ட்ரீசியனாக இருந்த குணசேகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து, பெற்றோர் எதிர்ப்பைமீறி 2019-ல் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த 8 மாதங்களிலேயே அவர்களுக்குள் கருத்து-வேறுபாடு நிலவியது. அந்த சமயம், ஜெயசுதா கர்ப்பமடைந்தார். ஆனாலும், ஜெயசுதாவை அப்படியே தவிக்க விட்டுவிட்டு காதல் கணவன் குணசேகரன் எங்கேயோ சென்றுவிட்டாராம். இதையடுத்து, வயிற்றில் பிள்ளையை சுமந்தபடி பெற்றோரின் ஆதரவைத் தேடி சந்தவாசல் பகுதிக்கு வந்தார் ஜெயசுதா. கதறி அழுத பெற்றோர், மகளை ஏற்றுக்கொண்டனர். ஆண் குழந்தைப் பிறந்தது. ஏனோக்ராஜ் என்று பெயர் வைத்தனர். தற்போது, ஏனோக்ராஜுக்கு 2 வயதாகிறது.

உயிரிழந்த குழந்தை ஏனோக்ராஜ்
உயிரிழந்த குழந்தை ஏனோக்ராஜ்

இந்த நிலையில், ஆரணி அருகிலிருக்கும் சேவூர் கிராமத்தில் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்துவந்த தன் தாய்மாமன் மகன் மாணிக்கம் என்பவருடன் ஜெயசுதாவிற்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. மேஸ்திரி வேலைக்குச் சென்றுவந்த மாணிக்கத்திற்கு தற்போது 31 வயதாகிறது. ஏற்கெனவே, திருமணமான இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இவரின் கொடூரமான நடவடிக்கையால் குழந்தையை தூக்கிக்கொண்டு அவர் மனைவி பிரிந்துச் சென்றுவிட்டார். இந்த விவகாரங்கள் தெரிந்தும், மாணிக்கத்துடனான உறவை ஜெயசுதா தொடர்ந்திருக்கிறார்.

ரகசியத் தொடர்பு வெளியில் தெரிந்ததையடுத்து, இருவரும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். மாணிக்கத்தை இரண்டாவது கணவராக ஏற்றுக்கொண்டு குடும்பம் நடத்தத் தொடங்கினார் ஜெயசுதா. இவர்களுடன் குழந்தை ஏனோக்ராஜும் இருந்தான். இந்தக் குழந்தையை மாணிக்கத்திற்குப் பிடிக்கவில்லை. ‘யாருக்கோ பிறந்த இந்தக் குழந்தை நமக்கு வேண்டாம். நமக்குள் எல்லா வகையிலும் இடையூறாக இருக்கிறது. ஆதரவற்றோர் ஆசிரமத்தில் விட்டுவிடலாம்’ எனக்கூறி ஜெயசுதாவிடம் தகராறு செய்துவந்திருக்கிறார் மாணிக்கம். ‘தனக்குப் பிறந்த குழந்தையை ஆசிரமத்தில் விடமுடியாது. நாம் சேர்ந்து வாழ வேண்டுமெனில், என் குழந்தையும் நம்முடன்தான் இருக்கும்’ என ஜெயசுதா தீர்க்கமாகக் கூறியிருக்கிறார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த மாணிக்கம், அவ்வப்போது குழந்தை ஏனோக்ராஜை அடிப்பது, எட்டி உதைப்பது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்டுவந்தாராம். அப்போதெல்லாம் ஜெயசுதா அவரை கண்டித்திருக்கிறார். ஆனாலும், அடங்காத வெறியில் இருந்த மாணிக்கம், ஒருக்கட்டத்தில் குழந்தை மீது வெந்நீரை ஊற்றியிருக்கிறார். வாளித் தண்ணீரில் தலைக்குப்புற மூழ்கி எடுத்து கொல்ல முயன்றதாகவும் அதிர்ச்சி தகவலை விவரிக்கிறது ஆரணி போலீஸ். கடந்த மாதம் 23-ம் தேதி குழந்தை மீது சாதம் வடித்த சுடு கஞ்சியை ஊற்றியிருக்கிறார். கஞ்சி கொதிக்கத் கொதிக்க இருந்ததால் குழந்தை துடிதுடித்துப் போயிருக்கிறது. அப்போதும் ஆத்திரம் தீராமல் குழந்தையை தூக்கி வீசியிருக்கிறார். இதில், குழந்தையின் மார்புப் பகுதிக்கு கீழுள்ள விலா எலும்பில் முறிவு ஏற்பட்டிருக்கிறது. மிகவும் ஆபத்தான கட்டத்தில் குழந்தையை மீட்ட ஜெயசுதா, உறவினர்கள் உதவியுடன் ஆரணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்று அனுமதித்திருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட மாணிக்கம்
கைதுசெய்யப்பட்ட மாணிக்கம்

இது பற்றி, உடனடியாக ஆரணி தாலுகா காவல் நிலையத்திலும் ஜெயசுதா புகார் அளித்திருக்கிறார். போலீஸார் ‘கொலை முயற்சி’ வழக்கு பதிவுசெய்து கொடூரன் மாணிக்கத்தை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர். இதனிடையே, விலா எலும்பில் ஏற்பட்ட முறிவை சரிசெய்வதற்காக ஆரணி அரசு மருத்துவமனையிலிருந்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டது. அங்கு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் வீட்டுக்கு குழந்தையை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார் ஜெயசுதா. ஏற்கெனவே, சுடு கஞ்சி, வெந்நீர் ஊற்றியதால் குழந்தையின் உடம்பு முழுவதும் நிறைய கொப்புளங்களும் ஏற்பட்டிருந்தன. அதற்கான மருந்துகளையும் மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர். ஆனாலும், பல இன்னல்களுக்கு ஆளாகியிருந்த அந்தக் குழந்தையின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானது. நேற்று முன்தினம் இரவு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஏனோக்ராஜ் நேற்று பரிதாபமாக இறந்தான். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை மாற்றி ‘கொலை’ வழக்காக பதிவுசெய்த ஆரணி தாலுகா போலீஸார், மாணிக்கத்தை கைதுசெய்து, நீதிமன்றக் காவலில் சிறையிலடைத்திருக்கிறார்கள்.