Published:Updated:

பாக்கெட்டில் இருந்த சாவி; சட்டையில் படிந்த ரத்தக்கறை! - கொல்கத்தா கொலையில் குற்றவாளி சிக்கிய பின்னணி

ராம் பிரசாத்

கொல்கத்தாவில் நடந்த இரட்டைக் கொலையில் காவல்துறையினர் குற்றவாளியை 24 மணி நேரத்துக்குள் கைது செய்துள்ளனர்.

Murder
Murder

லீ வான் தோ சீனா வம்சாவளியைச் சேர்ந்த இந்தியர். இவர் தன் மனைவி மற்றும் தந்தையுடன் கொல்கத்தாவில் உள்ள சீனா டவுன் பகுதியில் வசித்துவந்தார். இவரின் மகன்கள் கனடாவில் வசிக்கிறார்கள். 62 வயதான லீ மதபோதகராக இருந்துவருகிறார். நேற்று இரவு 7 மணியளவில் தன் நண்பர்களைச் சந்திப்பதற்காக லீ வான் தோ வெளியில் சென்றுவிட்டார். 8.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். வீட்டின் நுழைவு வாயில் பூட்டப்பட்டிருந்ததால் தொலைபேசி மூலம் தன் மனைவியைத் தொடர்புகொண்டார். ஆனால், செல்போன் ரிங் ஆனதே தவிர போனை அவர் எடுக்கவில்லை. இதையடுத்து பக்கத்து வீட்டில் இருந்தவர்களிடம் ஏணியை வாங்கி அதன்மூலம் வீட்டுச் சுவரில் ஏறிக்குதித்து உள்ளே சென்றுள்ளனர். பக்கத்து வீட்டில் இருப்பவர்களும் உடன் சென்றுள்ளனர். அங்கு லீ யின் மனைவி மற்றும் அவரின் தந்தை இவரும் பயங்கர காயங்களுடன் வீட்டுக்குள் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

Murder
Murder

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வரும் வழியிலே லீயின் மனைவி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அவரின் தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த இரட்டைக்கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் அப்படியே இருந்தன. கொள்ளை முயற்சி நடந்ததற்கான எந்தத் தடயமும் இல்லை.

லீயின் அக்கம்பக்கத்து வீடுகளில் விசாரணையை துரிதப்படுத்தினர். ஆனால், அவர்கள் யாரும் தங்களுக்கு எதுவும் தெரியாது. லீயுடன்தான் அவரது வீட்டுக்கு வந்தோம் என தெரிவித்தனர். இதையடுத்து, யார் மீதும் சந்தேகம் இருக்கிறதா என லீயிடம் விசாரித்தனர். லீயின் சட்டையில் இருந்த ரத்தக்கறைகள் குறித்து விசாரித்தனர். மனைவி மற்றும் தந்தையை மருத்துவமனைக்குத் தூக்கிச்செல்லும்போது கறை ஏற்பட்டிருக்கும் எனக் கூறியுள்ளார். மனைவி மற்றும் தந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது லீ தனது பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்து கதவை திறந்தாக ஒருவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

kolkata police
kolkata police

பாக்கெட்டில் சாவியை வைத்திருந்த லீ எதற்காக உறவினர்களிடம் ஏணியை வாங்கி அதன்மூலம் வீட்டுக்குள் வர வேண்டும் என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு வலுத்தது. இதற்கிடையில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் லீ தனது வீட்டிலிருந்து 7 மணியளவில் ஒருவித பதற்றத்துடன் வெளியேறியதும் அவரது சட்டையில் ரத்தக் கறை சுவடுகள் இருப்பதையும் காவல்துறையினர் கவனித்தனர். இதைத் தொடர்ந்து, லீயிடம் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது தன் மனைவி மற்றும் தந்தையைத் தாக்கியது தான் என காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். காவல்துறையினரிடம் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய காவல்துறையினர், லீ தன் நண்பர்களுடன் இரவு விருந்துக்குச் செல்வதாக தன் மனைவியிடம் கூறியுள்ளார். அவன் மனைவியோ பெண் தோழிகளுடன் விருந்துக்கு செல்கிறீர்களா எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த லீ அருகில் இருந்த பக்கெட்டை எடுத்து மனைவியின் முகத்தில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் மயங்கி கீழே விழுந்துவிட்டார். சத்தம் கேட்டு அவரது 90 வயது தந்தை வந்துள்ளார். கோபத்தில் இருந்த லீ அவரையும் தாக்கியுள்ளார். இதையடுத்து, வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

Arrest
Arrest

இரவு 7.10 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறியவர் 8.20 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து, வீடு பூட்டியிருப்பது போன்று டிராமா செய்துள்ளார். தனது பாக்கெட்டில் சாவியை வைத்துக்கொண்டு அவர் சுவர் ஏறி குதித்ததுதான் அவர் மீது சந்தேகத்தை வரவைத்தது. சிசிடிவி ஆய்வில் அவர் பதற்றத்துடன் சென்றது, சட்டையில் இருந்த ரத்தக்கறை ஆகியவை இவர் தான் கொலை செய்துள்ளார் என்பதை உறுதிசெய்தது. விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்” எனத் தெரிவித்தனர்.