Published:Updated:

ஆந்திரா: `நந்தி சிலைக்குள் கோடி ரூபாய் வைரம்!’ -அருள்வாக்கு சாமியார் பேச்சைக் கேட்டு சிக்கிய கும்பல்

சித்தூர் போலீஸ்
சித்தூர் போலீஸ்

ஆந்திர மாநிலம், காளஹஸ்தி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த சிவன் கோயிலின்  நந்தி சிலையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள் இருப்பதாகக் கிடைத்த பொய்த் தகவலை நம்பி சிலையைப் பெயர்த்தெடுத்துச் சென்று சுக்கு நூறாக உடைத்த கும்பலை போலீஸார் சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தெலங்கானா மாநிலம்,ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பாபா. ஆன்மிகத்தில் அதிக நாட்டம்கொண்ட இவர், அமாவாசை நள்ளிரவுகளில் நடுச்சாம பூஜைகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். ஹைதராபாத்தில் மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டுவரும் பாபா வெள்ளிக்கிழமைகளில் தனது வீட்டில் அருள்வாக்கு கூறிவந்திருக்கிறார். இவரிடம் சித்தூரை அடுத்த கத்தாடா பகுதியைச் சேர்ந்த ஹரி என்பவர் கடந்த சில வருடங்களாகச் சீடனாக இருந்துவந்திருக்கிறார். இந்தநிலையில், மாந்திரீக சாமியார் பாபாவுக்குக் கடந்த சில நாள்களுக்கு முன்பு சாமி அருள் வந்ததாகவும், அப்போது அவர் காளஹஸ்தியை அடுத்த தேவலம்பேட்டையிலுள்ள பழைமையான சிவன் கோயில் வளாகத்திலுள்ள நந்தி சிலைக்குள் கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்கள் இருப்பதாகவும் தனது சிஷ்யன் ஹரியிடம் கூறியதாகத் தெரிகிறது.

அதையடுத்து, சாமியார் பாபாவும் ஹரியும் சேர்ந்து தங்களிடம் வழக்கமாக அருள்வாக்குக் கேட்க வரும் சிலரிடம் நந்தி சிலை குறித்துக் கூறியிருக்கின்றனர். 60 கோடி ரூபாய் மதிப்பு என்றதும், சிவன் கோயில் நந்தி சிலையைத் திருட 10 பேர்கொண்ட திருட்டுக் கும்பல் தயாராகியிருக்கிறது. கடந்த மாதம் 26-ம் தேதி பாபா, ஹரி, சித்தூர் மாவட்டம், வேலவேடு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், வெங்கடாஜலபதி, ஸ்ரீதர் , ரங்க பாபு உள்ளிட்ட எட்டு பேர் தேவலம்பேட்டை சிவன் கோயிலுக்கு நள்ளிரவு நேரத்தில் சென்றிருக்கின்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், கடத்தல் கும்பல் எளிதில் கடப்பாரைகளைக்கொண்டு நந்தி சிலையைப் பெயர்த்தெடுத்துக்கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றிருக்கிறது. பின்னர், இரவு நேரம் என்பதால், கங்காபுரத்தைச் சேர்ந்த முனீந்திரா என்பவரின் விளைநிலத்தில் மறைத்து வைத்துவிட்டு அவரவர் வீடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள்.

தேவலம்பேட்டை சிவன் கோயில் நந்தி
தேவலம்பேட்டை சிவன் கோயில் நந்தி

மறுநாள் காலை சிலையை உடைத்து வைரக்கற்களை எடுப்பதற்காகக் குழுவாகச் சென்றிருக்கின்றனர். அப்போது, கடத்தலின்போது உடன் இருந்த ரங்க பாபு என்பவர் மட்டும் வரவில்லை. அதைத் தொடர்ந்து, சாமியார் பாபா தலைமையில் கடத்தல் கும்பல், சிலையை எடுக்கச் சென்றபோது, நந்தி சிலை மறைத்துவைக்கப்பட்டிருந்த இடத்தில் இல்லாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாமியார் பாபாவுடன் இருந்த ரங்க பாபு முந்தைய நாள் இரவு அனைவரும் வீட்டுக்குச் சென்ற பிறகு, மற்றொரு கும்பலைத் தன் தலைமையில் அமைத்து சிலையை அங்கிருந்து கடத்தி சித்தூருக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு தனது நண்பர் வீட்டில் சிலையை மறைத்துவைத்த ரங்க பாபு பூட்டைப் பூட்டி எடுத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார். பின்னர், ஐந்து நாள்கள் கழித்து நந்தி சிலையை ஐந்து பேர்கொண்ட கும்பல் பல மணி நேரம் போராடி வைரம் இருக்கும் என்று ஆவலுடன் உடைத்துப் பார்த்ததில், அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. சாமியார் பாபா பேச்சைக் கேட்டு சிலையை உடைத்து, சிக்கலில் மாட்டிக்கொண்ட கும்பல் புலம்பித் தீர்த்திருக்கிறது. சிலை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால், உடைக்கப்பட்ட நந்தி சிலையை மூட்டையில் அள்ளிச் சென்று ஸ்வர்ணமுகி ஆற்றில் வீசிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

உடைக்கப்பட்ட நந்தி சிலை
உடைக்கப்பட்ட நந்தி சிலை

இதற்கிடையில், சிவன் கோயிலில் நந்தி சிலை திருடுபோன சம்பவம் தொடர்பாகக் கோயில் சாமியார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சித்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் வெங்கடகிரி பகுதியில் ரங்க பாபு போலீஸார் சோதனையில் சிக்கினார். பின்னர் ரங்க பாபு அளித்த தகவலின் பேரில் ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த சாமியார் பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 14 பேரை சித்தூர் போலீஸார் கைதுசெய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கைதுசெய்யப்பட்ட கடத்தல் கும்பல்
கைதுசெய்யப்பட்ட கடத்தல் கும்பல்

ஏற்கனவே, ஆந்திராவில் தொடர்ச்சியாகக் கோயில்கள் மீது தாக்குதல்கள் நடந்துவரும் நிலையில், நந்தி சிலை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திராவை அலறவிட்ட `ஐ.டி புரூஃப்’ திருடன்; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சைபராபாத் போலீஸ்! -நடந்தது என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு