Published:Updated:

‘உள்ளாடையுடன் போட்டோ அனுப்பு!’

 மதபோதகரின் மாபாதகம்...
பிரீமியம் ஸ்டோரி
News
மதபோதகரின் மாபாதகம்...

மதபோதகரின் மாபாதகம்...

தமிழகத்தில், கிறிஸ்தவ மத போதனைகளைப் பரப்புவதற்காக பள்ளிகளுக்குச் செல்லும் அமைப்பு ஒன்றின் சில மதபோதகர்கள் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி ஒருவர் இது தொடர்பாக தன் நண்பரின் ட்விட்டரில் தகவல்களைப் பதிவிட... அவை சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘ஸ்கிரிப்சர் யூனியன் அண்ட் சில்ரன் ஸ்பெஷல் சர்வீஸ் மிஷன் கவுன்சில் ஆஃப் இந்தியா’ என்ற சர்வதேச கிறிஸ்தவ அமைப்பு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலுள்ள பள்ளிகளில் மதப்பிரசாரம் செய்துவருகிறது. இதன் தலைமை அலுவலகம், சென்னை அயனாவரம் யுனைடெட் இந்தியா நகரில் இருக்கிறது. இந்த அமைப்பின் மத போதகர்கள், ஐந்து பேர்கொண்ட குழுக்களாக கிறிஸ்தவ பள்ளிகளுக்குச் சென்று, இரண்டு வாரம் தங்கியிருந்து தொழிற்கல்வி மற்றும் பைபிள் வகுப்புகளை நடத்துகிறார்கள். தவிர, ‘கோடைக்கால முகாம்’ என்ந்ற பெயரில் சில மாணவ, மாணவிகளைத் தேர்ந்தெடுத்து கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று வேத வசனங்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.

‘உள்ளாடையுடன் போட்டோ அனுப்பு!’

இவர்களில் ஒருவரான, வேத சங்க வெளியீடுகளின் ஆங்கிலப் பிரிவுச் செயலாளர் சாமுவேல் ஜெய்சுந்தர்தான் தற்போது பாலியல் புகார் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். கோவையைச் சேர்ந்த சாமுவேல் ஜெய்சுந்தர் திருமணமாகாதவர். `இவரது ஆங்கிலப் புலமையும், உற்சாகப்படுத்தும் பேச்சும் மாணவர்களிடையே வெகு பிரபலம்’ என்கிறார்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள்.

இரு மாதங்களுக்கு முன்னர் இவர்மீதுதான் 19 வயது இளம்பெண் பாலியல் புகார் கொடுத்தார். இவர் வேலூர் விருதம்பட்டுவிலுள்ள ‘ஐடா ஸ்கடர்’ பள்ளியில் படித்த முன்னாள் மாணவி என்கிறார்கள். இந்தப் பள்ளிக்கும் சாமுவேல் ஜெய்சுந்தர் தலைமையிலான மத போதகர்கள் ஆண்டுக்கு ஒரு முறை சென்று வந்துள்ளனர்.

‘‘நான் படிக்கும் காலத்தில், பள்ளிக்கு வரும் சாமுவேல் ஜெய்சுந்தர் பாலுணர்வைத் தூண்டும் வகையில் பேசுவார். அவர் ஆசைப்படும் மாணவியைத் தொடர்ச்சியாகப் பாராட்டுவார். ‘புத்திசாலி பொண்ணு... அழகா இருக்கே’ என்று கொஞ்சுவார். பிறகு, செல் நம்பரைப் பெற்றுக்கொண்டு அடிக்கடி மாணவியிடம் பேசுவார். பேசிப் பேசியே அந்தரங்க விஷயங்களுக்குள் செல்வார். ‘உள்ளாடையோட போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பு’ என்பார். அவரது பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் நானும் ஒருத்தி’’ என்று அதிரவைத்தார் அந்த முன்னாள் மாணவி.

இது குறித்து ஸ்கிரிப்சர் அமைப்பின் நிர்வாகிகளிடம் புகார் கூறிய அந்தப் பெண், சாமுவேல் ஜெய்சுந்தர் அனுப்பியதாகச் சில குறுந்தகவல்களையும் காண்பித்தார். இதையடுத்து, அக்டோபர் 5-ம் தேதி சாமுவேல் ஜெய்சுந்தரை சஸ்பெண்ட் செய்துவிட்டதாக ஸ்கிரிப்சர் அமைப்பு அறிவித்தது. இந்தநிலையில்தான், அந்த முன்னாள் மாணவியின் நண்பரான ஜோயல் கிஃப்ட்சன் என்பவர் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் மத போதகர் சாமுவேல் ஜெய்சுந்தர் குறித்துத் தொடர்ந்து பாலியல் புகார்க் கருத்துகளைப் பதிவிட்டார். அவரது பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. சாமுவேல் ஜெய்சுந்தரால் பாதிக்கப்பட்டதாக மேலும் சில முன்னாள் மாணவிகளும் ‘ரீ-ட்வீட்’ செய்தனர். பாடகி சின்மயி உள்ளிட்ட பிரபலங்களும் மாணவிகளின் பதிவுகளைத் தங்களது ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்தனர்.

‘உள்ளாடையுடன் போட்டோ அனுப்பு!’

இதனால், இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தத் தொடங்கியது. ‘ஸ்கிரிப்சர்’ அமைப்புக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் கிளம்பின. இதையடுத்து, தங்கள் அமைப்புக்குக் களங்கம் ஏற்படுத்துவோர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் அந்த அமைப்பு புகாரளித்தது. இவ்வளவு சர்ச்சைகளுக்கு இடையில் அதே அமைப்பைச் சேர்ந்த ரூபன் க்ளமென்ட் என்பவர்மீதும் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டதால், அவரையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறது ஸ்கிரிப்சர் அமைப்பு.

இந்த அமைப்பு மதப்பிரசாரம் செய்த பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர், ‘பெயரை வெளியிட வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டு நம்மிடம் பேசினார்கள். ‘‘ஸ்கிரிப்சர் அமைப்பின் மத போதகர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக இதுவரை 15 முன்னாள் மாணவிகளிடமிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. ‘பிரச்னையைப் பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று அந்த அமைப்பின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். இந்தப் பாலியல் பிரச்னை நீண்டகாலமாக மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. போலீஸில் புகார் கொடுத்தால், கோர்ட்டுக்கும் ஸ்டேஷனுக்கும் அலையவிடுவார்கள் என்பதால்தான், ஸ்கிரிப்சர் அமைப்பின் தலைமை நிர்வாகிகளிடமே புகார் கொடுத்தனர். பள்ளிகளில் மதப்பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன... இதனால் அந்தப் பள்ளிகளுக்கு என்ன லாபம் கிடைக்கிறது? அரசாங்கம், உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர் கொதிப்புடன்.

இதற்கிடையே, வேலூர் ‘ஐடா ஸ்கடர்’ பள்ளி முதல்வர் தரப்பில் மாணவ, மாணவிகளுக்கும், பள்ளி ஊழியர்களுக்கும் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. ‘‘சமூக ஊடகங்களில் வெளியாகாத சில செய்திகளும் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. ஸ்கிரிப்சர் அமைப்பில் உள்ளவர்களின் நோக்கங்களைக் கண்டறிய விசாரணையைத் தொடங்கியிருக்கிறோம். இப்போதைக்கு இதைவிட வேறு எதையும் உங்களுக்குச் சொல்லும் நிலையில் நாங்கள் இல்லை. விசாரணை முடியும் வரை பொறுமையாக இருங்கள்’’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து ‘ஐடா ஸ்கடர்’ பள்ளி முதல்வர் டேனியலிடம் கேட்டபோது, ‘‘புகாருக்குள்ளான குழுவினர் கடந்த ஆண்டும் எங்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். அதனால், ‘அவர்கள் ஏதாவது தவறாக நடந்துகொண்டார்களா?’ என்று எங்கள் பிள்ளைகளிடம் கேட்டோம். ஒருவரும் புகார் சொல்லவில்லை. முன்னாள் மாணவிகள்தான் பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார்கள். இருந்தாலும், கமிட்டி அமைத்து விசாரணை நடத்திவருகிறோம்’’ என்றார்.

புகாருக்குள்ளான சாமுவேல் ஜெய்சுந்தரை செல்போனில் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, அவர் பேச மறுத்துவிட்டார். ஸ்கிரிப்சர் அமைப்பின் வழக்கறிஞரான பிரவீன் அலெக்சாண்டரிடம் பேசினோம். ‘‘19 வயது பெண்தான் முதல் புகார் கொடுத்தார். ஆதாரத்தைக் கேட்டோம். சாட்டிங் பதிவுகளை அனுப்பினார். அந்தப் பதிவுகளில், புகார் கொடுத்த பெண்ணே சாமுவேல் ஜெய்சுந்தரிடம் ரொமான்ஸாகப் பேசியிருக்கிறார். அவரது உரையாடலில் கடைசியாக ‘ஐ லவ் யூ’ என்று முடித்திருக்கிறார். இது குறித்து, அந்த பெண்ணின் பெற்றோரிடம் கூறினோம். அவர்கள் எங்களிடம், `நீங்க எதுவும் ஸ்ட்ரிக்டா ஆக்‌ஷன் எடுக்காதீங்க’ என்று கேட்டுக்கொண்டார்கள்.

பிறகுதான், அந்தப் பெண் தன் நண்பர் ஜோயல் கிஃப்ட்சன் மூலமாகச் சமூக வலைதளங்களில் எங்களுடைய தரப்பு குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டிருக்கிறார். பள்ளிகளுக்குச் செல்லும் எங்களது குழுவில் பெண்களும் இருக்கிறார்கள். ஆண்களைத் தனியாக அனுப்புவதில்லை. பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறும் முன்னாள் மாணவிகளோ, அவர்களுடைய பெற்றோரோ யாருமே இதுவரை போலீஸில் புகார் கொடுக்கவில்லை. இதை முன்னாள் மாணவி ஒருவரின் பர்சனல் பிரச்னையாகவே பார்க்கிறோம். சாமுவேல் ஜெய்சுந்தர் மீது இதற்கு முன் எந்தப் புகாரும் வந்ததில்லை. இதேபோல், மற்றோர் ஊழியரான ரூபன் க்ளமென்ட் மீது இன்னொரு பெண் புகார் சொல்லியிருப்பதால், அவர்மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்’’ என்றார்.

பெண் பிள்ளைகளின் பாதுகாப்பில் பள்ளிகள் மட்டுமன்றி, அரசும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தேவை, உடனடி நடவடிக்கை!