Published:Updated:

ராமநாதபுரம்: திரைப்பட நடிகரின் மனைவியிடம் பண மோசடி: மகளிர்குழுமீது எஸ்.பி-யிடம் புகார்!

மனைவியுடன் எஸ்.பி அலுவலகத்தில் ஹலோ கந்தசாமி

திரைப்பட நடிகர் கந்தசாமி தன் மனைவியுடன் ராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில் மகளிர்குழு தொடர்பாக மோசடிப் புகாரளித்தார்.

ராமநாதபுரம்: திரைப்பட நடிகரின் மனைவியிடம் பண மோசடி: மகளிர்குழுமீது எஸ்.பி-யிடம் புகார்!

திரைப்பட நடிகர் கந்தசாமி தன் மனைவியுடன் ராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில் மகளிர்குழு தொடர்பாக மோசடிப் புகாரளித்தார்.

Published:Updated:
மனைவியுடன் எஸ்.பி அலுவலகத்தில் ஹலோ கந்தசாமி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் பிரபல திரைப்பட நடிகர்‌. திரைத்துறையில் `ஹலோ கந்தசாமி’ என அனைவராலும் அறியப்படுகிறார். இவர் மனைவி பெயர் சந்தான லட்சுமி. இவர் தன் மனைவியுடன் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி-யிடம் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ``என்னுடைய மனைவி சந்தானலட்சுமி கமுதியில் சுடலைமாடன் களஞ்சியம் மகளிர்குழுவில் பொருளாளராக இருக்கிறார். வட்டார களஞ்சியம் அமைப்பைச் சேர்ந்த செந்தாமரைச் செல்வி என்பவர் என் மனைவி உள்ளிட்ட பல பெண்களை ஒன்றிணைத்து பெருநாழி கிராமத்தில் பல்வேறு மகளிர்குழுக்களை உருவாக்கி, ராமநாதபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் குழுவுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வரை லட்சக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு... அதில் பாதியை மட்டுமே குழுக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

அந்தப் பணத்தை வட்டியுடன் குழுக்களிடமிருந்து வாங்கியிருக்கிறார். குழு உறுப்பினர்களிடம் பணத்தை வங்கியில் கட்டிவிட்டதாகக் கூறி பணம் கட்டிய ரசீது உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், வங்கியிலிருந்து குழு நிர்வாகிகளுக்கு வங்கியில் பணம் கட்டவில்லை; பணத்தைக் கட்டவும் என நோட்டீஸ் வந்திருக்கிறது. இது குறித்து குழு நிர்வாகிகள் செந்தாமரைச் செல்வியிடம் கேட்டபோது, `பணத்தை வங்கியில் கட்டிவிட்டேன். நீங்கள் கண்டுகொள்ளாதீர்கள்' எனக் கூறினார்.

ராமநாதபுரம் எஸ்.பி அலுவலகம்
ராமநாதபுரம் எஸ்.பி அலுவலகம்

இந்த நிலையில், வங்கியிலிருந்து குழு உறுப்பினர்களுக்கு பணத்தை வட்டியுடன் கட்டும்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர். இதனால் என் மனைவியும், குழு நிர்வாகிகளும் என்ன செய்வது எனப் புரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். எனவே செந்தாமரைச் செல்வியைப் பிடித்து விசாரணை நடத்தி, பணத்தை மீட்டு வங்கியில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து நம்மிடம் பேசிய ஹலோ கந்தசாமி, ``கமுதியில் வட்டார களஞ்சியம் அமைப்பைச் சேர்ந்த செந்தாமரைச் செல்வி என்ற பெண் கடந்த 2013-ம் ஆண்டு பெருநாழி கிராமத்தில் என் மனைவி உட்பட சிலப் பெண்களை மூளைச்சலவை செய்து, `உங்கள் தலைமையில் ஒவ்வொரு மகளிர் குழுவை உருவாக்கிக் கொண்டு வாருங்கள்... வங்கியிலிருந்து கடன் பெற்றுத் தருகிறேன்' எனத் தெரிவித்திருக்கிறார். அதை நம்பி என் மனைவி சுடலைமாடன் களஞ்சியம் என்ற மகளிர் குழுவை உருவாக்கினார். அதேபோல அல் அமீன் களஞ்சியம், பிஸ்மில்லா களஞ்சியம் என பெருநாழி கிராமத்தில் மட்டும் ஏழு குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனிச் செயலாளர், பொருளாளர் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிலும் 20 முதல் 30 பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அந்தப் பெண்கள் அனைவரின் ஆதார் கார்டுகள், வங்கிப் புத்தக ஆவணங்களைப் பெற்று அவர்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார். அதைவைத்து ராமநாதபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் குழுவுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி, குழு நிர்வாகிகளிடம் மூன்று லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்திருக்கிறார்.

நடிகர் ஹலோ கந்தசாமி
நடிகர் ஹலோ கந்தசாமி

மேலும் பணத்தை வங்கியில் நேரடியாகக் கட்டவிடாமல் தானே வசூல்செய்து அதற்கான ரசீதுகளைக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் அனைத்துக் குழுவினரும் வட்டியுடன் பணத்தைக் கட்டி முடித்துவிட்டனர். அதன் பின்னர் மகளிர்குழுவினரைச் சந்தித்து பணம் கட்டிய ரசீது உள்ளிட்ட அனைத்தையும் செந்தாமரைச் செல்வி வாங்கிச் சென்றுவிட்டார். பின்னர் கடந்த ஆண்டு வங்கியிலிருந்து மகளிர்குழு நிர்வாகிகளுக்குப் பணத்தை கட்டும்படி நோட்டீஸ் வந்திருக்கிறது. இதுவரை செந்தாமரைச் செல்வியிடம் என் மனைவி உள்ளிட்ட அனைத்து மகளிர்குழு நிர்வாகிகள் கேட்டபோது பணம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து தாங்கள் கட்டிய பணத்தின் ரசீதுகளை கொடுக்கும்படி கேட்டபோது, அவை எரிந்துவிட்டன எனத் தெரிவித்திருக்கிறார். பின்னர் இந்த வட்டார களஞ்சியம் அமைப்பின் மேலாளரிடம் மகளிர்குழு நிர்வாகிகள் சென்று கேட்டபோது, அவர் பணம் கட்டியதற்கான எந்த ஆவணத்தையும் எங்களிடம் கொடுக்கவில்லை எனக் கூறியிருக்கிறார்.

ராமநாதபுரம் எஸ்.பி. அலுவலகம்
ராமநாதபுரம் எஸ்.பி. அலுவலகம்

தற்போது வங்கியிலிருந்து பணத்தைக் கட்டக் கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர். நாங்கள் நீதிமன்றத்தை அணுகி விளக்கம் தெரிவித்திருக்கிறோம். நான் இதுவரை 64 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். தற்போது 15 திரைப்படங்களில் நடித்துவருகிறேன். பண மோசடி விவகாரத்தில் என் மனைவி மிகுந்த மன வேதனையில் இருக்கிறார். இதனால் நான் திரைப்படங்களில் நடிப்பதை ஒத்திவைத்துவிட்டு என் மனைவியுடன் காவல் நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும் சென்றுகொண்டிருக்கிறேன். எனவே, மாவட்ட போலீஸ் எஸ்.பி செந்தாமரைச் செல்வியைப் பிடித்து மகளிர்குழுவினர் கட்டிய பணத்தை மீட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். இவர் இதேபோல் கமுதி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்களை உருவாக்கி பல லட்சங்களை மோசடி செய்திருப்பதாக அந்தப் பகுதியினர் கூறுகின்றனர். அவரைக் கைதுசெய்து, விசாரணை நடத்தி, அவர் மோசடிசெய்த பணத்தை மீட்க வேண்டும்" என்றார்.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட எஸ்.பி தங்கதுரை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism