Published:Updated:

`அவரால் நரக வாழ்க்கையை அனுபவித்தேன்!’ - காவல்நிலையத்தில் புகார் கொடுத்த துணை நடிகை

representational image
representational image

சரவணனைத் திருமணம் செய்தபிறகு என்னையும் குழந்தைகளையும் கொடைக்கானல் பங்களாவுக்கு அழைத்துச் சென்றார். அங்குதான் சரவணனின் சுயரூபம் எனக்குத் தெரிந்தது என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார் சென்னை துணை நடிகை.

சென்னை செனாய் நகர் மேற்குப் பகுதியைச் சேர்ந்த துணை நடிகை ஒருவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்புப் பிரிவில் கடந்த 20-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``எனக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மூத்தவன் மருத்துவக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். 2வது மகன் பள்ளியில் படிக்கிறான். என்னுடைய சொந்த ஊர் திருச்சி. நான் சென்னையில் கடந்த 10 ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறேன். என்னுடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று குழந்தைகளோடு தனியாக வாழ்ந்துவருகிறேன்.

Woman in stress
Woman in stress

நான், அழகுநிலையம், அழகு லேசர் கிளினிக்கை சென்னையில் நடத்திவருகிறேன். மேலும் சிறுசிறு வேடங்களில் துணை நடிகையாக சின்னத்திரையிலும் சினிமாவிலும் நடித்துள்ளேன். என் தாய் வீட்டு சொத்து பிரிக்கப்பட்டு எனது பாகமாக 25 லட்சம் ரூபாய் கிடைத்தது. ஏற்கெனவே நடத்திவரும் கிளினிக் மூலம் எனக்கு நல்ல வருமானமும் கிடைத்தது. என் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து வந்தேன். முதல் திருமணத்தின்போது என் பெற்றோர் 100 சவரன் வரதட்சணையாகக் கொடுத்தனர்.

இந்தநிலையில் 2014-ம் ஆண்டு மான்கராத்தே படத்தில் சிறிய வேடத்தில் நான் நடித்தேன். அப்போது அந்தப்படத்தில் நடித்த சரவணன் சுப்பிரமணி (42) என்பவர் பஸ்களுக்கு பாடி கட்டும் தனியார் நிறுவனம் நடத்திவருவதாகக் கூறி என்னுடன் அறிமுகமானார். பிறகு நான் வசிக்கும் வீட்டின் அருகே என்னை ஏதேச்சையாகச் சந்திப்பது போல அடிக்கடி என்னைச் சந்தித்து என்னுடன் பழகினார். திடீரென ஒருநாள் என்னை மிகவும் விரும்புவதாகவும் திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுவதாகவும் கூறினார். மேலும் அவர் எனக்கும் என் குழந்தைகளுக்கும் ஆதரவு தந்து நல்ல வாழ்க்கைப் பாதுகாவலனாக இருப்பேன் என்று உருகப் பேசி என்னை நம்ப வைத்தார்.

Vikatan

இதையடுத்து 2014 -ம் ஆண்டு என்னைத் திருமணம் செய்து கொண்டார். பின்பு நானும் சரவணனும் எனது மகன்களும் வாழ்ந்தோம். எங்களின் திருமணத்திற்குப் பிறகு சரவணின் தாய், சகோதரி என்னிடம் பேசினார்கள். ஆனால் அவர்களுடைய வீட்டுக்கு என்னை அழைத்துச் செல்லவில்லை. திருமணத்துக்குப் பிறகு சரவணன் என்னை வீட்டை விட்டுச் செல்ல தடை விதித்தார். இதனால் கிளினிக் தொழிலும் சினிமா வேலையும் பாதிக்கப்பட்டன. தாய் வீட்டுப் பாகபிரிவினைச் சொத்துப் பணமும் குறைந்தது. அச்சமயம் என் மகன்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் சரவணன் என்னையும் என் குழந்தைகளையும் கொடைக்கானல் பங்களாவுக்கு அழைத்துச் சென்றார். அங்குதான் சரவணனின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. அவர் குடித்துவிட்டு தன் நண்பர்கள் 3 பேரின் முன்னிலையில் என்னை நடனமாடச் சொன்னார். ஒரு மனைவியை இப்படி நடத்துகிறாரே என்று நான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். என் குழந்தைகளும் பயந்து நடுங்கிவிட்டனர். என்னையும் குழந்தைகளையும் பங்களாவை விட்டு வெளியே விடாமல் சித்ரவதை செய்தார். என் வாழ்க்கைக்கு ஒரு ஆண் துணை வேண்டுமென்று விரும்பி மணந்த கணவனால் பெரிய ஆபத்தில் தள்ளப்பட்டோம் என்று மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். பிறகு நான் எப்படியோ என் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு தப்பித்து சென்னை வந்து சேர்ந்தேன்.

`டியூஷன் படிக்கவந்த மாணவிக்கு பாலியல் தொல்லை!' - தி.நகர் வழக்கை திசைமாற்றுகிறதா போலீஸ்?
representational image
representational image

இந்நிலையில் 3 நாள்களுக்குப் பின்னர் சரவணனுக்குத் தெரிந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவன் என்னைத் தொடர்பு கொண்டு மிகவும் தவறாகப் பேசினான். ஆசிட் வீசுவதாகக் கூறி மிரட்டினான். இதனால் நான் பயந்து மீண்டும் சரவணனுடன் சேர்ந்து வாழ்ந்தேன். அச்சமயம் சரவணன் என்னிடம் மன்னிப்பு கேட்டு என்னைச் சமதானப்படுத்தினார். சில நாள்களுக்குப்பிறகு மீண்டும் என்னை வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் ஹவுஸ் அரஸ்ட் பண்ணி தொடர்ந்து தொல்லை தர ஆரம்பித்துவிட்டார்.

இதனால் நான் மனமுடைந்து, இந்த வாழ்க்கையே எனக்கு வேண்டாம், என்னை விட்டுவிடுங்கள். நான் எங்காவது என் குழந்தைகளுடன் பிழைத்துக்கொள்கிறேன் என்று எவ்வளவோ அழுது கெஞ்சினேன். ஆனால் அவர் என்னை விடாமல் எங்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தார். அதனால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தேன்.

இந்தநிலையில், சரவணனுக்கு ஏற்கெனவே திருமணம் நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு சண்டை போட்டேன். அதற்கு அவர், `திருமணம் ஆனது உண்மைதான். அவள் ஹிஸ்டிரியா நோயாளி. எனக்கும் முதல் மனைவிக்கும் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது எனக்கும் அவளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்று கூறினார். அதன் பின்னரும் அதே கொலை மிரட்டலோடுதான் என் வாழ்க்கை சென்றது.

representational image
representational image

ஒருகட்டத்தில், அவருடன் இனிமேல் வாழ்வது சாவதற்குச் சமம் என்று அவர் வெளியே சென்றபோது, வீட்டைக் காலி செய்துவிட்டு வேறுவீட்டுக்குச் சென்றுவிட்டேன். தொடர்ந்து இரண்டு மூன்று வீடுகள் மாறிவிட்டேன். ஆனாலும் சரவணன் என் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுவருவதைப் பின்தொடர்ந்து வீட்டைக் கண்டுபிடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்.

அதன் பின்னர் அவரது முதல் மனைவிக்கும் இவருக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை என்றும் ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் எனக்கு தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு மகளும் மகனும் அவருடைய முதல் மனைவிக்கு இருப்பதும், சரவணனுக்கு இரண்டாவதாக இன்னொரு மனைவியும் அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது எனவும் எனக்கு தெரிந்தது. அதன்பின் சரவணனை விட்டு பிரிந்து சுமார் 10 வீடுகளுக்கு மேல் மாறிவிட்டேன். எனது தொலைபேசி எண்ணையும் பலமுறை மாற்றிவிட்டேன். அந்தச் சமயத்தில் என் காரை உடைத்து என்னை சரமாரியாகத் தாக்கினார்கள்.

`ஆடி கார்; துணை நடிகை; தினமும் ஒரு லட்சம்'- போலி ஏ.டி.எம். கார்டு மன்னனின் அதிர்ச்சி வாக்குமூலம்

2017-ல் சரவணனின் முதல் மனைவி, என் கிளினிக் வந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். நான் அவரின் காலில் விழுந்து கெஞ்சினேன். ஆனால் அவர் என்னை மிரட்டிவிட்டுச் சென்றுவிட்டார். ஒருபக்கம் சரவணனை விட்டுச் சென்றால் அவரின் அடியாள்கள் காரை உடைக்கின்றனர். இன்னொரு பக்கம் சரவணனின் மனைவியின் தரப்பினர் என்னை அடிப்பதும் காரை உடைப்பதும் வாடிக்கையாக உள்ளது. இவர்கள் மீது நான் பல தடவை காவல் நிலையங்களில் புகார்கள் கொடுத்துள்ளேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சரவணன் எனக்கு பாலியல் கொடுமை செய்தது மட்டுமன்றி என்னுடைய ஆபாப் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுகிறார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கோ என் குழந்தைகளின் உயிருக்கோ ஆபத்து ஏற்பட்டால் சரவணனும் அவருடைய அடியாள்கள்தான் காரணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, 294 பி, 498 ஏ 313, 406, 506(1) ஆகிய இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகிறார்.

தற்போது எனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் மருத்துவமனையில் உள்ளேன்.
துணை நடிகை

இதுகுறித்து துணை நடிகையிடம் பேசினோம். ``சரவணனால் எனக்கு நடந்த கொடுமைகள் அனைத்தையும் புகாரில் குறிப்பிட்டுள்ளேன். தற்போது எனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் மருத்துவமனையில் உள்ளேன்" என்றார் சுருக்கமாக.

துணை நடிகை குற்றம் சுமத்திய சரவணனைத் தொடர்பு கொண்டபோது அவரின் தரப்பினர் பதிலளிக்கவில்லை. சரவணன் விளக்கம் அளிக்க முன்வந்தால் உரிய பரிசீலனைக்குப்பிறகு வெளியிட தயாராக உள்ளோம்.

அடுத்த கட்டுரைக்கு