Published:Updated:

நாமக்கல்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ப்ளஸ் ஒன் மாணவி! - சினிமா துணை நடிகர் உட்பட மூவர் கைது

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

குழந்தைநலப் பாதுகாப்புக் குழுவினர், அந்த கிராமத்துக்குச் சென்று, தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்களின் விசாரணையில், அந்த மாணவி 4 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

சமீபத்தில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், அதே பகுதியில் 16 வயது மாணவியை, சினிமா துணை நடிகர் உட்பட நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது, அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே இருக்கிறது காரைக்குறிச்சி. இந்த கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் 16 வயது மகள், அந்தப் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்துவந்தார். இந் நிலையில், அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, நாமக்கல் மாவட்ட குழந்தைநல பாதுகாப்புக் குழுவுக்கு, மாணவி வசிக்கும் பகுதியிலுள்ள சிலரால் ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. தகவலைக் கேட்டு அதிர்ச்சியான, குழந்தைநல பாதுகாப்புக் குழுவினர், அந்த கிராமத்துக்குச் சென்று, தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்களின் விசாரணையில், அந்த மாணவி நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

சக்தி கணேசன் (நாமக்கல் எஸ்.பி)
சக்தி கணேசன் (நாமக்கல் எஸ்.பி)
நா.ராஜமுருகன்

இதையடுத்து, நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு, புதுச்சத்திரம் காவல் நிலைய போலீஸாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சக்தி கணேசன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் தரப்பட்ட புகாரின்பேரில், புதுச்சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன், வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். அவரின் விசாரணையில், ராசிபுரம் தாலுகா, பட்டணம் பரமேஸ்வர் நகரைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி தமிழ்ச்செல்வன் கடந்த 2020-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 10-ம் தேதி உறவினர் வீட்டுக்குச் சென்ற அந்த மாணவியைக் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன் பிறகு தண்ணீர்பந்தல்காட்டைச் சேர்ந்த சினிமா துணை நடிகரான மோகன்குமார் (27), காரைக்குறிச்சியை சேர்ந்த பெயின்ட்டர் வேலை பார்க்கும் கவின்ராஜ் (19) மற்றும் கண்ணையன் (45) ஆகியோர் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தமிழ்ச்செல்வன், மோகன்குமார், கவின்ராஜ் ஆகிய மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் புத்துச்சத்திரம் காவல் நிலைய போலீஸார் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவான கண்ணையனை வலைவீசித் தேடிவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு