Published:Updated:

ஆடு திருடன்... சூப்பர் ஸ்டார்... நெக்ஸ்ட் சி.எம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
லெனின்குமார், நிரஞ்சன்குமார்
லெனின்குமார், நிரஞ்சன்குமார்

ஆடிப்போன போலீஸார்

பிரீமியம் ஸ்டோரி
சென்னை மாதவரத்தில் ஆடுகளைத் திருடிய வழக்கில் அண்ணன் நிரஞ்சன்குமாரும், தம்பி லெனின்குமாரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இருவருமே 2017-ல் வெளியான `நீதான் ராஜா’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்தவர்கள் என்பதுதான் இந்த வழக்கின் இன்டர்வெல் பிளாக்!

நவம்பர் 8-ம் தேதி மாதவரம், மஞ்சம்பாக்கம் ரிங் ரோடு பகுதியில், சொகுசுக் காரில் ஆடு திருடிய இளைஞர்கள் இருவரை அந்தப் பகுதியினர் மறித்து ரகளை செய்து கொண்டிருப்பதாக மாதவரம் போலீஸாருக்குத் தகவல் வந்தது. போலீஸார் ஸ்பாட்டுக்குச் சென்று இருவரையும் பிடித்து வந்து விசாரித்ததில், அவர்கள் புதுவண்ணாரப்பேட்டை ஆண்டியப்பன் தெருவைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் விஜய ரங்கனின் மகன்கள் நிரஞ்சன்குமார், லெனின்குமார் என்பது தெரியவந்தது. இவர்கள் செய்திருக்கும் குற்றத்துக்குப் பின்னால் இருக்கும் கதையைக் கேட்டால் தலை கிறுகிறுக்கிறது!

ஆட்டைத் தேடு... ஆட்டையப் போடு!

அப்பா சினிமா தயாரிப்பாளர் என்பதால் இருவருக்குமே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது. ஆனால், வாய்ப்பு கிடைக்காததால், ‘சொந்தப் படம் தயாரித்தால் நாமே நடிக்கலாம்’ என்று முடிவு செய்த இருவரும், அதற்கான பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்திருக்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் அப்படிச் ‘சிந்தித்துக்கொண்டே’ சென்னை புறநகர் பைபாஸ் சாலையில் பைக்கில் பயணித்திருக் கிறார்கள். அப்போது சாலையோரமாக படுத்திருந்த ஆடு ஒன்று கண்ணில்பட... சட்டென்று அவர்களின் கிரிமினல் மூளை விழித்துக்கொண்டது.

ஆடு திருடன்... சூப்பர் ஸ்டார்... நெக்ஸ்ட் சி.எம்!

சற்றும் யோசிக்காதவர்கள், அதை லபக்கென்று ஒரே அமுக்காக அமுக்கி பைக்கில் ஏற்றி வந்து சென்னையில் விற்றிருக்கிறார்கள். சுளையாக கைமேல் காசு, யாரும் புகாரும் கொடுக்கவில்லை என்பதால் இருவருமே உற்சாகமடைந்தனர். இதனால், `இதையே முழுநேரத் தொழிலாகச் செய்யலாம்’ என்ற ‘அரிய’ சிந்தனையும் அவர்கள் மனதில் உதித்திருக்கிறது. பிறகென்ன... வேகமாகக் களமிறங்கியவர்கள், அடிக்கடி புறநகர் பகுதிகளுக்குப் பயணித்து ஆடுகளைத் திருடி விற்று, அந்தப் பணத்தை உள்ளூரில் வட்டிக்கு விட்டு இரட்டிப்பாக்கியிருக்கிறார்கள். ‘தொழில்’ படிப்படியாக விருத்தியடைந்து, அடுத்த கட்டத்துக்குச் செல்ல... தொழில் நிமித்தமாக சைலோ கார் ஒன்றையும், மினி லாரி ஒன்றையும் வாங்கியவர்கள், அவற்றில் ஆடுகளைத் திருட ஆரம்பித்திருக்கிறார்கள்.

டூ வீலரில் ஒன்றிரண்டு ஆடுகளைத் திருடியவர்கள், இப்போது அதிக எண்ணிக்கையில் ஆடுகளைத் திருட, வருமானமும் முன்பைவிட அதிகமாகியிருக்கிறது. மெதுவாக தங்கள் சினிமா கனவுக்கு உயிர்கொடுக்கத் தொடங்கியவர்கள், முதற்கட்டமாக அந்தப் பணத்தை சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்திருக்கிறார்கள். இப்படியே சுமார் ஒரு கோடி ரூபாயைத் தேற்றியவர்கள், ‘நீதான் ராஜா’ படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார்கள். கடந்த ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படம், வந்த வேகத்திலேயே பெட்டிக்குள் போனது. பெரும் நஷ்டத்தைச் சந்தித்தவர்கள், மீண்டும் ஆடு திருடத் தொடங்கியிருக்கிறார்கள்.

குலதெய்வ சென்டிமென்ட்... லொகேஷன் டெக்னிக்!

இதில் நிரஞ்சன்குமார் கடைப்பிடித்த டெக்னிக் ஒன்று யாரும் எதிர்பாராதது. அவருக்குத் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். பல சமயங்களில் அவர் குடும்பத்தோடு சென்று ஆடுகளை சைலோவில் அள்ளிப்போட்டுக் கொள்வார். செக்போஸ்ட்களில் வாகனத்தைச் சோதனையிட்டால், குலதெய்வம் கோயிலுக்குச் செல்வதாகச் சொல்லித் தப்பிப்பார். போதாக்குறைக்கு பள்ளிப் படிப்பையே தாண்டாத இவர்கள், காரில் வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதும் இவர்களுக்குச் சாதகமாக இருந்திருக்கிறது.

அண்ணனும் தம்பியும் சேர்ந்து செய்த இன்னொரு டெக்னிக், சினிமாவுக்காக லொகேஷன் பார்ப்பதாகச் சொல்லி கிராமங்களுக்குச் செல்வது. டிப்டாப்பாக காரில் சென்று இறங்கும் இவர்களைப் பார்க்கும் கிராமத்தினர், உற்சாகமாக ஊரைச் சுற்றிக் காட்டுவார்கள். கிளம்பும்போது ஊராருக்கே தெரியாமல் நைசாக நான்கைந்து ஆடுகளை லவட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். ‘அவ்ளோ பணக்காரப் பசங்க பண்ணியிருக்க மாட்டாங்க’ என்று கிராமத்தினர் நினைப்பதால் தப்பித்து வந்தவர்கள், அப்படியொரு திருட்டில்தான் மக்களிடம் காரும் ஆடுமாக சிக்கிக்கொண்டார்கள்.

ஆடு திருடன்... சூப்பர் ஸ்டார்... நெக்ஸ்ட் சி.எம்!

முதல்ல சூப்பர் ஸ்டார்... அடுத்து சி.எம்!

போலீஸிடம் மாட்டிக்கொண்ட பிறகு இவர்கள் எடுத்துவிட்ட ‘சூனா பானா’ டயலாக்குகள் போலீஸாரையே திகைக்க வைத்துவிட்டன. “சார்... தேவையில்லாம என்மேல கையைவெச்சு வம்புல சிக்கிக்காதீங்க. என் ஜாதகப்படி நான் சீக்கிரமே ரஜினி மாதிரி சூப்பர் ஸ்டார் ஆகிடுவேன்... உங்க ஃப்யூச்சரைக் கெடுத்துக்கா தீங்க” என்றிருக்கிறார் நிரஞ்சன் குமார். போலீஸார் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே லெனின்குமார், “சி.எம் ஆகவே வாய்ப்பிருக்குனு ஜோசியர் சொன்னதை விட்டுட்டீங்களேண்ணே...’’ என்று அடுத்த குண்டை வீச, ஒருகணம் ஆடிப்போனாலும்... சுதாரித்துக்கொண்டு, “உங்களுக்கு வாய் ஓவர்டா” என்றபடியே விசாரணையை ‘இறுக்கி’ சிறைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

இவர்கள் தயாரித்த ‘நீதான் ராஜா’ படத்தில் நிரஞ்சன்குமார் சொல்லும் வசனம் இது... ‘‘என் கண்ணெதிரே தப்பு நடந்தா தட்டிக் கேட்பேன்!”

ஒரு படத்தில் கவுண்டமணி சொல்லும், “அடுத்தவன் காசுல எப்பவுமே சோஷலிசம் பேசாதீங்கடா... அவனவன் காசுல பேசுங்கடா!” என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு