Published:Updated:

`படம் பார்க்க வந்தோம்…. வழியில் கடத்தினோம்'- இது திருச்சி வில்லங்கம்!

``பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவந்த இளைஞராஜாவை பார்த்ததில், கோபமடைந்து காரில் கடத்திவிட்டோம். கொஞ்சம் மிஸ் ஆகி, போலீஸில் மாட்டிக்கொண்டோம்”

கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள்
கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள்

நேற்று இரவு காந்தி மார்க்கெட் அருகே ஒரு வாலிபர் நின்று கொண்டிருக்க, அங்கு காரில் வந்த சிலர், அந்த வாலிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அடுத்து திடீரென அந்த கும்பல், தாங்கள் வந்த காரில் அந்த வாலிபரை வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு காரில் சென்றனர். அதனைப் பார்த்து பதறிய பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

கடத்தப்பட்ட இளையராஜா
கடத்தப்பட்ட இளையராஜா

அதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீஸார் காரை விரட்டினர். கார், சத்திரம் பேருந்து நிலையம் வழியாக, திருச்சி காவிரி பாலம் கடந்து, திருச்சி மாம்பழச்சாலை கும்பகோணத்தான் சாலை அருகே சிட்டாய் பறந்தது. விடாமல் விரட்டிப் பிடித்த போலீஸார், அந்தக் காரை வழிமறித்து அதில் இருந்த ஆட்களை மடக்கினர்.

அப்போதுதான் போலீஸாரின் விசாரணையில், கடத்தப்பட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பூதலூரை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் இளையராஜா என்பது தெரியவந்தது. இவர் அகில பாரத இந்து மகாசபை தஞ்சாவூர் மாவட்ட தலைவராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அந்த இயக்கத்தின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

செந்தில்குமார்
செந்தில்குமார்

இவரை கடத்தியது செந்தில்குமார் அவரது நண்பர்கள் தினேஷ் பிரபு, துரைராஜ், நிவாஸ், பொன்னர், சித்திக், ஆரிஃப் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அனைவரையும் கைது செய்த காவல்துறை ஆட்கடத்தல், தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கைது செய்தவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

போலீஸார் விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பெரம்பலூர் மாவட்டம் கிழுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த டெய்லர் செந்தில்குமார், பெரம்பலூர் மாவட்ட சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம் மாவட்ட செயலாளராக உள்ளார். அவரைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேரில் சந்தித்த இளையராஜா, தனக்கு சில தேசிய கட்சி தலைவர்களுடன் மிக நெருக்கம் என்றும், அந்தவகையில் பலருக்கு அரசு வேலை வாங்கித் தந்திருப்பதாகவும், செந்தில்குமாருக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியதுடன், ரூபாய் 5 லட்சம் வாங்கியுள்ளார். தொடர்ந்து இளையராஜா சொன்னபடி வேலைவாங்கித் தரவில்லை. அதனால் கொடுத்த பணத்தை செந்தில்குமார் பலமுறை திருப்பிக் கேட்டும் இளையராஜா வாங்கிய பணத்தை தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது

கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள்
கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள்

இந்நிலையில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான புதிய திரைப்படத்தைப் பார்ப்பதற்காக பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு தனது நண்பர்களுடன் செந்தில்குமார் வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு, பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பி தராமல் இழுத்தடிக்கும் இளையராஜா, திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனையடுத்து அங்குச் சென்ற செந்தில்குமார், கொடுத்த பணத்தை இளையராஜாவிடம் இருந்து திருப்பி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, அவரை மிரட்டுவதற்காக காரில் கடத்தியதாக தெரியவந்தது.

போலீஸார் விசாரணையில் கைதுசெய்யப்பட்ட செந்தில்குமாரிம் நண்பரான பொன்னர், “இளையராஜா தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாக சில தலைவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை காட்டி, வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி செந்திலும் 5 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட எங்களை மாதக்கணக்கில் இழுத்தடித்தார். வேறு வேலையாகத் திருச்சி வந்த எங்களுக்கு இளையராஜா காந்தி மார்க்கெட் பகுதியில் இருப்பது குறித்து தகவல் கிடைத்தது. அங்குச் சென்ற நாங்கள் அவரிடம் பணத்தை கேட்டோம். அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்படவே, அவனை காரில் கடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது” என கூறியுள்ளார்

`கடத்தப்பட்ட இளையராஜாவுக்கும் இந்து மகாசபைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இளையராஜா மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகள் எழவே அவரை எங்கள் அமைப்பிலிருந்து நீக்கிவிட்டோம்'

இந்து மகாசபை நிர்வாகியை கடத்தப்பட்டதாக செய்திகள் வட்டமடிக்கவே, திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு அகில பாரத இந்து மகாசபையின் மாநிலத் தலைவர் ராஜசேகர் வந்தார். அப்போது அவர், “கடத்தப்பட்ட இளையராஜாவுக்கும் இந்து மகாசபைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இளையராஜா மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகள் எழவே அவரை எங்கள் அமைப்பிலிருந்து நீக்கிவிட்டோம். அவர் மீது ஏராளமான மோசடி புகார்கள் திருச்சி மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளது. இதுகுறித்து நாங்களும் திருச்சி போலீஸாரிடம் தகவல் கூறியிருக்கிறோம்'' எனச் செய்தியாளர்களை சந்தித்துக் கூறினார். ஆனால் காரில் கடத்தப்பட்ட இளையராஜாவின் ஆதரவாளர்களோ, ``இளையராஜா இப்போது இந்து மகாசபையில் இருக்கிறார். மற்றபடியான சம்பவங்களை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்” என்றார்கள்.

கடந்த சில வாரங்களில், நள்ளிரவில் சூதாட்ட கிளப் ஓனர் கடத்தல், பிறகு உடல் சடலமாக்க கண்டெடுக்கப்பட்டது, திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே, இந்து முன்னணி நபருக்காக இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் என அடுத்தடுத்த சம்பவங்கள் பெரும்பரபரப்பை கிளப்பிவரும் வேளையில் வேலை வாங்கித் தருவதாக இந்து மகா சபையை சேர்ந்த மாநில நிர்வாகி ஒருவரை நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காரில் கடத்த முற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.