Published:Updated:

ஹோட்டல் இடிப்பு; சோடா பாட்டில் வீச்சு! - கோவை அன்னபூர்ணா குழுமத்தோடு மோதிய கே.ஜி நிர்வாகம்

குருபிரசாத்
தி.விஜய்

கோவையில் பிரபலமான அன்னபூர்ணா உணவகத்தை கே.ஜி மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் இடித்துத் தள்ளிய புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அன்னபூர்ணா ஹோட்டல்
அன்னபூர்ணா ஹோட்டல் ( தி.விஜய் )

கோவையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அன்னபூர்ணா மற்றும் ஸ்ரீ கெளரிசங்கர் உணவகம் இயங்கி வருகிறது. கோவை நீதிமன்றம் அருகில் உள்ள கே.ஜி.மருத்துவமனையின் வளாகத்திலும் அன்னபூர்ணாவின் ஒரு கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த 45 ஆண்டுகளாக வாடகை அடிப்படையில் இந்த உணவகம், செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன், அன்னபூர்ணா உணவகத்தைக் காலி செய்யுமாறு கே.ஜி மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

ஓட்டல் இடிப்பு
ஓட்டல் இடிப்பு

இதை ஏற்க மறுத்த அன்னபூர்ணா குழுமம், கே.ஜி மருத்துவமனை நிர்வாகம் மீது கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இருதரப்பினர் மத்தியில் சமரசம் ஏற்படவே வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

குற்றாலம் அருகே லாரி - கார் நேருக்கு நேர் மோதல்! - தனியார் நிறுவன அதிகாரிகள் 3 பேர் பலி

இதற்கிடையில் கடந்த சில நாள்களாக இருதரப்பினர் இடையேயும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, மருத்துவமனையின் சுற்றுச்சுவரையொட்டியுள்ள அன்னபூர்ணா உணவகத்தின் சமையல் அறைக்கூடம் இடிக்கப்பட்டது. இதற்கு கே.ஜி. நிர்வாகம்தான் காரணம் என்று புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தால் உணவக ஊழியர்கள் 4 பேர் காயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இடிப்பு
இடிப்பு

இந்த சம்பவம் குறித்துப் பேசிய அன்னபூர்ணா குழுமத் தலைவர் ராமசாமி, “எந்த முன்னறிவிப்புமின்றி உணவகத்தை இடித்துள்ளனர். என்னைக் கொலை செய்வதற்காகவே இந்தச் சம்பவத்தைத் திட்டமிட்டு நடத்தியுள்ளனர். இதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்றார் கொதிப்புடன்.

இந்நிலையில், அன்னபூர்ணா குழுமம் அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, கே.ஜி. மருத்துவமனை உரிமையாளர்கள் பக்தவச்சலம், அவரின் சகோதரர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது புகார் அளித்தும், போலீஸார் வழக்கில் அவர்களது பெயர்களைச் சேர்க்கவில்லை.

முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

அன்னபூர்ணா குழுமத்தின் குற்றச்சாட்டு குறித்து கே.ஜி. மருத்துவமனை நிர்வாகத்தின் பாதுகாவல் அதிகாரி திருப்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

``அன்னபூர்ணா ஹோட்டல் கட்டடம் பலத்த மழையின் காரணமாக விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்துள்ளது. இதனால் எங்கள் மருத்துவமனைக்கு வந்த நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுவிட்டது. இடிபாடுகளை அகற்றத்தான் ஜே.சி.பி இயந்திரம் வந்தது. இதனிடையே, அன்னபூர்ணா ஹோட்டலுக்குள் இருந்து வந்த சில மர்ம நபர்கள் செங்கல் மற்றும் சோடா பாட்டில்கள் மூலமாக எங்களைத் தாக்கினார்கள். அந்தக் கட்டடம் உறுதித்தன்மை இல்லாமல் இருப்பதை, அதிகாரிகள் சுட்டிக் காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கே.ஜி.மருத்துவமனை வளாகம்
கே.ஜி.மருத்துவமனை வளாகம்

அதனால்தான், கட்டடம் இடிந்துள்ளது. எங்கள் மருத்துவமனையின் பாதையை, அன்னபூர்ணாவின் சீனிவாசன், ராமசாமி, ஜெகன் ஆகியோர் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள்தான் அடியாள்களை ஏவி இந்தச் சம்பவத்தையும் செய்துள்ளனர்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு தரப்புக்கும் இடையேயான பிரச்னை குறித்து தெரிவிக்கும் சிலர், ``நீண்ட காலமாகவே இந்தப் பிரச்னை நீடித்து வருகிறது. இரண்டு நிறுவனத்தின் அதிபர்களும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், அவ்வப்போது சமாதானம் ஆவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. ஹோட்டல் இடிப்பு மூலம் விவகாரம் வீதிக்கு வந்துவிட்டது. இருவரும் பெரிய இடம் என்பதால், என்ன நடவடிக்கை எடுப்பது எனப் போலீஸாரும் தயங்கிக்கொண்டிருக்கின்றனர்” என்கின்றனர் இயல்பாக.