Published:Updated:

`நான் ஏற மாட்டேன்' மல்லுக்கட்டிய இளைஞர்! அரும்பாக்கம் வீடியோவால் போலீஸ் அதிர்ச்சி

அரும்பாக்கத்தில் இளைஞரை வாகனத்தில் ஏற்றும் போலீஸ்
அரும்பாக்கத்தில் இளைஞரை வாகனத்தில் ஏற்றும் போலீஸ்

சென்னை அரும்பாக்கத்தில் இளைஞருக்கும் போலீஸாருக்கும் நடந்த மல்லுக்கட்டு சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகிவருகிறது.

சாத்தான்குளம் சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினர் தாக்கியதால் மரணமடைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாபாரிகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என அனைவரும் போராட்டம் நடத்தியதால் சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முதல் காவலர் வரை இடமாற்றம் செய்யப்பட்டனர். குற்றம் சுமத்தப்பட்ட காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வாகனத்தில் ஏற மறுக்கும் இளைஞர்
வாகனத்தில் ஏற மறுக்கும் இளைஞர்

மரணத்துக்குக் காரணமாகக் காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ள நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சம்பவம் மற்றும் வி.கே.புதூர் சம்பவம் ஆகியவை காவல்துறையினருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வி.கே.புதூர் சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் என 2 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி தமிழக காவல்துறையில் சிலரின் செயல், சமூகவலைதளத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

வீடியோ

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ மார்க்கெட் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த இளைஞரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது இளைஞருக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த தகராறு, வீடியோவாக சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.

இளைஞரை வாகனத்தில் ஏற்றும் போலீஸ்
இளைஞரை வாகனத்தில் ஏற்றும் போலீஸ்
`2 வயதில் அம்மா; 18 வயதில் அக்கா!' - இன்ஜினீயர் வாழ்க்கையில் தொடரும் சோகம்

அந்த வீடியோவில், போலீஸ் வாகனத்தில் இளைஞர் ஒருவரை வலுக்கட்டாயமாக போலீஸார் ஏற்றுகின்றனர். அப்போது, இளைஞர் வாகனத்தில் ஏற பிடிவாதம் செய்கிறார். ஆனாலும் போலீஸார் ஏறு, ஏறு என்றபடி அந்த இளைஞரை போலீஸ் வாகனத்துக்குள் ஏற்றுகின்றனர். அப்போது வாகனத்தில் கதவைப்பிடித்துக் கொண்டபடி இளைஞர் போலீஸாருடன் மல்லுக்கட்டுகிறார். ஒருவழியாக இளைஞரை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்துக்கு போலீஸார் செல்வதோடு வீடியோ முடிவடைகிறது. உடனடியாக சமூக வலைதளத்தில் போலீஸாருக்கு எதிரான கமென்ட்ஸ்களை நெட்டிசன்கள் போடத் தொடங்கியுள்ளனர்.

பெண் மருத்துவர்

அரும்பாக்கத்தில் என்ன நடந்தது என்று போலீஸாரிடம் விசாரித்தபோது, ``ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் வருவதைத் தடுக்க வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். அப்போது இளைஞர் ஒருவர் போதையில் வந்தார். அவரிடம் எங்கு செல்கிறீர்கள் என்று விசாரித்தோம். உடனே சாலையில் எத்தனையோ பேர் செல்கிறார்கள். என்னை மட்டும் ஏன் பிடிக்கிறீர்கள் என்று வாக்குவாதம் செய்தார். மேலும் அவர், அவ்வழியாகச் சென்ற பெண் மருத்துவரைப்பார்த்து உங்களை மட்டும் போலீஸார் செல்ல அனுமதிக்கிறார்கள் என்று அவரின் கழுத்திலிருந்த அடையாள அட்டையைப் பிடித்து இழுக்க முயன்றார். உடனே நாங்கள் அந்த இளைஞரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றோம். அவரிடம் விசாரித்துக்கொண்டிருக்கிறோம்" என்றனர்.

போலீஸாருடன் மல்லுக்கட்டிய இளைஞர்
போலீஸாருடன் மல்லுக்கட்டிய இளைஞர்
சாத்தான்குளம்; சொந்தஊர் வழக்கில் 6வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர்!

இதற்கிடையில் இளைஞர் தரப்பில் மாத்திரைகளை வாங்கச் சென்றவரை போலீஸார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர் என்று தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்குக் கொரோனா என்பதால் அவர் விடுமுறையில் உள்ளார். அதனால் அருகில் உள்ள காவல் நிலைய இன்ஸ்பெக்டர்தான் இளைஞரிடம் விசாரித்துவருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு