Published:Updated:

கடத்தல் லிஸ்ட்டில் நோய் எதிர்ப்பு மருந்து! தங்கச்சிமடம் கடல் பகுதியில் சிக்கிய 10,000 குப்பிகள்

நோய் எதிர்ப்பு மருந்து குப்பிகள்
நோய் எதிர்ப்பு மருந்து குப்பிகள் ( விகடன் )

தங்கச்சிமடம் வடக்கு கடல் பகுதியில் சந்தேகப்படும் நிலையில் மூட்டை ஒன்று மிதப்பதாக மண்டபத்திலுள்ள இந்தியக் கடலோரக் காவல்படையினருக்குத் தகவல் கிடைத்தது.

தங்கச்சிமடம் கடல் பகுதியில் மிதந்துவந்த சாக்கு மூட்டையிலிருந்து 10,000 டோஸ் ஊசி மருந்தை மண்டபம் கடலோரக் காவல் படையினர் கைப்பற்றினர். மனித உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இந்த மருந்து, இலங்கைக்குக் கடத்திச் செல்லும்போது கடலில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து கடலோரக் காவல் படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கடலோரக் காவல் படை கைப்பற்றிய மருந்து குப்பிகள்
கடலோரக் காவல் படை கைப்பற்றிய மருந்து குப்பிகள்
விகடன்

தமிழகக் கடலோரப் பகுதிகளிலிருந்து கஞ்சா, பீடி இலை, கடல் அட்டை போன்றவற்றை இலங்கைக்குக் கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவந்தன. கடந்த சில மாதங்களாக இந்தக் கடத்தல் பொருள்கள் பட்டியலில் சமையலுக்குப் பயன்படுத்தும் விரலி மஞ்சளும் இடம்பிடித்தது. இலங்கையில், மஞ்சள் உள்ளிட்ட விவசாயப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து மஞ்சள் இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இலங்கையில் சமையல் மஞ்சளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இலங்கை விதித்த இறக்குமதி தடை, தொடர் வீழ்ச்சியில் மஞ்சள் விலை... காரணம் என்ன?

இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட கடத்தல் கும்பல் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டுவருகிறது. ஈரோடு பகுதிகளிலிருந்து மொத்தமாக மஞ்சளைக் கொள்முதல் செய்யும் தமிழகக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், அவற்றை தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தஞ்சை மாவட்டக் கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு கடத்திவருகின்றனர். இந்த மஞ்சள் கடத்தல் தொடர்ச்சியாக நடந்துவரும் நிலையில், அவ்வப்போது சில ஆயிரம் கிலோக்கணக்கிலான கடத்தல் மஞ்சள்களை போலீஸார் கைப்பற்றிவருகின்றனர்.

கடலில் மிதந்த ஊசி மருந்து குப்பி
கடலில் மிதந்த ஊசி மருந்து குப்பி
விகடன்

இந்தநிலையில் இன்று காலை தங்கச்சிமடம் வடக்கு கடல் பகுதியில் சந்தேகப்படும் நிலையில் மூட்டை ஒன்று மிதப்பதாக மண்டபத்திலுள்ள இந்திய கடலோரக் காவல் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதிக்கு வந்த கடலோரக் காவல் படையினர் கடலில் மிதந்த சாக்கு மூட்டையை மீட்டு சோதனை செய்தனர். சோதனையின்போது அந்த மூட்டைக்குள் 2 மி.லி அளவுகொண்ட ஊசி மருந்து இருப்பது தெரியவந்தது. அந்த மூட்டைக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் B1, B6, B12 + Calcium Pantothenate என்ற ஊசி மருந்து கொண்ட சுமார் 10,000 குப்பிகள் இருந்திருக்கின்றன.

மருந்து குப்பி அட்டை
மருந்து குப்பி அட்டை
விகடன்

இதையடுத்து அவற்றை மண்டபம் கடலோரக் காவல் படை நிலையத்துக்குக் கொண்டு வந்தனர். இந்த ஊசி மருந்து தமிழக கடலோரப் பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்திச் செல்லப்பட்டபோது கடலில் தவறி விழுந்து மிதந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவற்றைக் கடத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் மற்றும் புலனாய்வு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு