மும்பை விமான நிலையத்துக்கு போதைப்பொருள்கள் உலகம் முழுவதுமிருந்து கடத்திவரப்படுகின்றன. இதற்காக கடத்தல்காரர்கள் ஒவ்வொரு முறையும் புதிய வழிகளைக் கண்டுபிடித்துக் கடத்துகின்றனர். லாகோஸ் நகரிலிருந்து வரும் விமானத்தில், ஒருவர் போதைப்பொருள் கடத்திவருவதாக வருவாய் புனலாய்வுத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து லாகோஸ் நகரிலிருந்து வந்த சந்தேகத்துக்குரிய நபரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் எந்தவித போதைப்பொருளும் இல்லை. ஆனால், அவரிடம் போதைப்பொருள் இருப்பதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்திருந்தது. அந்த நபரின் பேக்கில் இரண்டு விஸ்கி பாட்டில்கள் இருந்தன. அதித் திறந்து விஸ்கியைச் சோதனைசெய்து பார்த்தனர். அப்போது போதைப்பொருளை சோதனை கருவி மூலம் சோதனை செய்ததில், விஸ்கியில் கோகைன் போதைப்பொருள் கலந்திருந்தது தெரியவந்தது. மதுவில் 2.2 கிலோ கோகைன் கலக்கப்பட்டிருந்தது.

அவற்றின் மதிப்பு ரூ.20 கோடி. இதையடுத்து அந்த நபர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது, இந்த விஸ்கி பாட்டில்களை அடிஸ் அபாபா நகரில் ஜியான் என்பவர் தன்னிடம் கொடுத்ததாகவும், அதை டெல்லியிலுள்ள ஒருவரிடம் டெலிவரி செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மும்பையிலிருந்து ரயில் மூலம் டெல்லிக்குச் செல்ல திட்டமிட்டிருந்திருக்கிறார் கைதுசெய்யப்பட்ட கின்ஸ்லி என்பவர். நைஜீரியாவைச் சேர்ந்த கின்ஸ்லி, இந்த போதைப்பொருள் கலந்த விஸ்கி பாட்டில்களை இந்தியாவில் டெலிவரி செய்வதற்கு 2,000 அமெரிக்க டாலர் கட்டணமாகப் பெற்றதாகத் தெரிவித்திருக்கிறார்.

போதைப்பொருளை திரவத்தில், குறிப்பாக மதுவில் கலந்து கடத்தப்படுவது மிகவும் அபூர்வம் என்று தெரிவித்த அதிகாரிகள், ``கோகைன் மதுவில் கரைந்துவிடும் தன்மைகொண்டதாகும். மதுவில் கரைந்த போதைப்பொருளை கடத்தல்காரர்கள் பின்னர் பிரித்து எடுத்துக்கொள்வர். பாட்டிலில் இருக்கும் மதுவில் போதைப்பொருள் கலந்திருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து நாடுகள் இரண்டு தொழில்நுட்பத்தைக் கண்டித்திருக்கின்றனர்" என்று தெரிவித்தனர். அடிஸ் அபாபா நகரில்தான் உலகத்திலேயே அதிகமான போதைப்பொருள் கடத்தல் நடந்துவருகிறது என்றும், அங்கிருந்துதான் தற்போது பறிமுதல்செய்யப்பட்ட போதைப்பொருளும் கடத்திவரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.