Published:Updated:

``ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலை குண்டு வைத்து தகர்ப்போம்’’ - இமெயிலில் வந்த மிரட்டல்!

ஐ.என்.எஸ் விக்ராந்த்
ஐ.என்.எஸ் விக்ராந்த்

ஏற்கெனவே போலி முகவரி கொடுத்து, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கப்பல் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த வழக்குக்கும் இந்த இமெயில் வெடிகுண்டு மிரட்டலுக்கும் தொடர்பிருக்கிறதா என விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரள மாநிலம், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் `ஐ.என்.எஸ் விக்ராந்த்’ என்ற போர்க் கப்பலை இந்தியா தயாரித்துவருகிறது. முழுவதும் இந்தியாவால் முதன்முதலில் தயாரிக்கப்படும் விமானம் தாங்கி போர்க் கப்பல் கொச்சியில் கட்டப்பட்டுவரும் ஐ.என்.எஸ் விக்ராந்த். இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில், கடந்த மாதம் கடலில் பயணத்தை முடித்து வெற்றிகரமாக திரும்பியது ஐ.என்.எஸ் விக்ராந்த். இந்தப் போர்க்கப்பலை குண்டுவைத்து தகர்க்கப்போவதாக இமெயில் மூலம் மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. இது குறித்து கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் எர்ணாகுளம் தெற்கு காவல் நிலையத்தில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 385-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றுவருகிறது.

கப்பல் கட்டும் தளத்தை குண்டுவைத்து தகர்ப்பதாகக் கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் ஐந்து அதிகாரிகளுக்கு கடந்த மாதம் 24-ம் தேதி இமெயில் மூலம் மிரட்டல் வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் கொச்சி கப்பல் கட்டும் தளத்திலும் ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலிலும் சோதனை நடத்தப்பட்டது. போலி இமெயில் ஐ.டி-யிலிருந்து நேற்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலை குண்டு வைத்து தகர்ப்போம் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை:தேர்வு முடிவுகளை வெளியிடாவிட்டால் பல்கலைக்கழகத்தை வெடிவைத்துத் தகர்ப்போம்;இ-மெயிலில் மிரட்டல்
என்.ஐ.ஏ.
என்.ஐ.ஏ.

இது மிகவும் தீவிரமான வழக்கு என்பதால் டி.ஜி.பி-க்கு ரிப்போட் அனுப்புவதுடன், என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்ததில், ``முகவரி கண்டறிய முடியாத இமெயில் மூலம் மிரட்டல் விடப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்களின் உதவியுடன் இமெயில் அனுப்பப்பட்ட முகவரியைக் கண்டறிய முயல வேண்டும். நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும்விதமாக இந்த மிரட்டல் அமைந்திருப்பதால் இந்த வழக்கை என்.ஐ.ஏ-க்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" எனக் கூறப்படுகிறது.

இந்த மிரட்டலில் கப்பல் கட்டும் தொழிலாளர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மிரட்டல் விடுத்த மெயிலில் கப்பல் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள சிலரது பெயர்களும், பணியாளர் எண்ணும் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆரம்பகட்ட போலீஸ் விசாரணை குறித்து ஆய்வு செய்த பின்பு என்.ஐ.ஏ இது குறித்து விசாரணை நடத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்குழு, ஆவணங்களை கேரள டி.ஜி.பி-யிடம் வழங்கவிருக்கிறது.

ஐ.என்.எஸ் விக்ராந்த்
ஐ.என்.எஸ் விக்ராந்த்

ஏற்கெனவே போலி முகவரி கொடுத்து, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கப்பல் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். அது குறித்து தனியாக விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்குக்கும், இமெயில் வெடிகுண்டு மிரட்டலுக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க் கப்பலுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு