Published:Updated:

`4 மாதங்களாகக் காணவில்லை!' -சிறுமிக்காக பொங்கலைப் புறக்கணித்த கோவை கிராமம்

சாமினி
சாமினி

கோவை அருகே காணாமல்போன ஐந்து வயது குழந்தை, நான்கு மாதங்களாகியும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கோவை மாவட்டம் சூலூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார்-கவிதா என்ற தம்பதியினர் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு வெற்றிவேல் (7) என்ற மகனும், சாமினி (5) என்கிற மகளும் இருக்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சாமினி, திடீரென்று மாயமானார்.

சாமினி குடும்பம்
சாமினி குடும்பம்

இதுகுறித்து, சாமினியின் பெற்றோர் போலீஸில் புகாரளித்திருந்தனர். அதனடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, மூன்று தனிப்படைகள் அமைத்து சிறுமியைத் தேடி வருகின்றனர்.

ஆனால், கிட்டத்தட்ட நான்கு மாதங்களாகியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாததால், அவரின் குடும்பத்தினரும் கிராம மக்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஏற்கெனவே, கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையைப் புறக்கணித்திருந்த அவர்கள், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையும் புறக்கணித்துள்ளனர்.

சாமினி
சாமினி

காஞ்சிபுரத்தில் காணாமல்போன 2 வயது சிறுமி 100 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது போல, தங்களது மகளும் மீட்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் ஜெயக்குமார் தம்பதியினர் காத்துக் கிடக்கின்றனர்.

ஹரிணியை மீட்பதற்கு கரூரைச் சேர்ந்த இணைந்த கைகள் அமைப்பினர் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். அதே இணைந்த கைகள் அமைப்பினர், தற்போது சாமினியையும் மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

சாமினி
சாமினி

சாமினியின் கிராமத்துக்குச் சென்று, அவரின் பெற்றோரைச் சந்தித்தனர். மேலும், சாமினி தொடர்பான போஸ்டர்களை அடித்து, அதைப் பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.

இதுகுறித்து சாமினியின் தந்தை ஜெயக்குமார், ``கடந்த அக்டோபர் 5-ம் தேதி மதியம், உணவு இடைவேளைக்கு வந்திருந்தபோது, மகள் விளையாடிக்கொண்டிருந்தாள். அதுதான் நாங்கள் அவளை கடைசியாகப் பார்த்தது. எப்போதும் இரவு 8.30 மணிக்குத்தான் பணி முடிந்து வருவோம்.

சாமினி
சாமினி

ஆனால், அன்றைய தினம் மாலை 6 மணிக்கே வந்துவிட்டோம். அப்போதே மகளைக் காணவில்லை. அதனால்தான் போலீஸில் புகாரளித்தோம். போலீஸாரும் தீவிர முயற்சி எடுத்துப் பார்த்துவிட்டனர். இப்போதுவரை சாமினியை மீட்க முடியவில்லை.

நாங்கள் மட்டுமல்ல, எங்களது கிராமமே இன்னும் சோகத்தில்தான் இருக்கிறது. அதனால், எந்தக் கொண்டாட்டத்திலும் ஈடுபடுவதில்லை. மகள் கிடைத்த பிறகுதான் எங்களுக்கு தீபாவளி, பொங்கல் எல்லாமே. நீண்ட நாட்களாக பணிக்குச் செல்லவில்லை. சாப்பாடு, தூக்கம் எதுவுமில்லை. என் மனைவியின் உடல்நலம் மோசமடைந்துவிட்டது.

சாமினி
சாமினி

எந்நேரமும் சாமினியின் போட்டோவைப் பார்த்துக்கொண்டும், உடைகளை அணைத்துப் பிடித்துக்கொண்டும் அழுது கொண்டிருக்கிறார். இப்போதுதான் பணிக்கு செல்லத் தொடங்கியிருக்கிறோம். இன்னும் சற்று தீவிர முயற்சி எடுத்தால் என் மகள் கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

கோவை மாவட்ட எஸ்பி சுஜித்குமார், “தனிப்படைகள் தீவிரமாக விசாரணை நடத்தியும் எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

சாமினி
சாமினி

ஒரு சிறிய துப்புகூட கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

பின் செல்ல