Published:Updated:

`அந்த நபருக்கும் தண்டனை கிடைத்தால்தான் என் மனசு ஆறும்!'- கோவை சிறுமியின் தாய் வேதனை

இந்த 10 மாதத்தில் பைத்தியம்போல் ஆகிவிட்டேன். என் குழந்தையின் நினைவு என்னை மிகவும் பாதித்துவிட்டது. சுய நினைவை இழந்திருக்கிறேன்.

சந்தோஷ்குமார்
சந்தோஷ்குமார்

கோவை துடியலூரை அடுத்த பன்னீர்மடை பகுதியைச் சேர்ந்த 1-ம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி கடந்த மார்ச் 25-ம் தேதி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போனார். இதையடுத்து, அடுத்த நாள் வீட்டின் எதிரே துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கோவை சிறுமி
கோவை சிறுமி

இந்தச் சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல்துறையினர், வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுதொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில், சந்தோஷ்குமார் என்பவரை மார்ச் 31-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. சந்தோஷ் குமாரைக் குற்றவாளி என அறிவித்து போக்ஸோ சட்டத்தின் கீழ் அவருக்கு ஆயுள் தண்டனையும் பிரிவு 302-ன் கீழ் தூக்குத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

`சந்தேகம் எழுப்பிய தாய்; காட்டிக்கொடுத்த டி.என்.ஏ ரிப்போர்ட்!'-கோவை சிறுமி கொலையில் திடீர் திருப்பம்

இந்த நிலையில், இந்த வழக்கில் மேலும் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாக சிறுமியின் தாய் ஏற்கெனவே நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். சிறுமி உடலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சதீஷ்குமார் டி.என்.ஏ தவிர இன்னொருவர் டி.என்.ஏ இருப்பதாக தெரியவந்தது. ஏற்கெனவே இதைச் சிறுமியின் தாய் வலியுறுத்திவந்த நிலையில், டி.என்.ஏ ரிப்போர்ட் அதை உறுதிப்படுத்த மீண்டும் நீதிமன்ற படியேறிருக்கிறார் சிறுமியின் தாய்.

சிறுமியின் தாய்
சிறுமியின் தாய்

இதற்கிடையே, நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாகப் பேசியுள்ள சிறுமியின் தாய், ``கொலை சம்பவம் நடந்து 10 மாதம் ஆகிவிட்டது. இந்த 10 மாதத்தில் என் குழந்தையின் எலும்புகூட மிஞ்சியிருக்காது. ஆனால், இந்த 10 மாதத்தில் பைத்தியம்போல் ஆகிவிட்டேன். என் குழந்தையின் நினைவு என்னை மிகவும் பாதித்துவிட்டது. சுய நினைவை இழந்திருக்கிறேன்.

Vikatan

இதன்பிறகும் அங்கு இருக்கக் கூடாது என்று வீட்டை மாற்றி வேறு இடத்தில் தங்கியிருக்கிறேன். தீர்ப்பு தேதி தெரிந்ததும் குற்றவாளி சந்தோஷுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், திடீர் என்று எனது வக்கீல் வந்து இதில் இன்னொருவருக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று கூறியபோது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

சந்தோஷ்குமார்
சந்தோஷ்குமார்

இந்த 10 மாசமும் தப்பு செய்த அந்த நபர் சுதந்திரமாக வெளியே நடமாடிக்கொண்டிருந்திருக்கிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சந்தோஷுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ, அதேபோல இன்னொரு நபருக்கும் இதே மாதிரி தண்டனை எப்போது கிடைக்கிறதோ அப்போதுதான் என் மனது ஆறும். அதுவரை எனக்கு சந்தோஷம் கிடையாது" என வேதனையுடன் கூறியுள்ளார்.

Vikatan