அலசல்
Published:Updated:

“இது தற்கொலை அல்ல... நிர்வாக கொலை!” - ‘சின்மயா’ மாணவி மரணம்... கொந்தளிக்கும் கோவை

சின்மயா வித்யாலயா பள்ளி
பிரீமியம் ஸ்டோரி
News
சின்மயா வித்யாலயா பள்ளி

கொரோனா காரணமா ஆன்லைன் கிளாஸ் போயிட்டிருந்த சமயத்துல, ‘இயற்பியல் படிக்க சார் வர சொல்லியிருக்காரு’னு ஸ்கூலுக்குப் போனா.

‘யாரையும் சும்மா விடக் கூடாது’ - சென்னை வெள்ளத்துக்கு நடுவேயும் கடந்த சில நாள்களாக, தமிழ்நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் துயர வாசகம் இது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்திருக்கும் சின்மயா வித்யாலயா பள்ளியில், 12-ம் வகுப்பு படித்துவந்த 17 வயது மாணவி, தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்பு எழுதிவைத்த மரண சாசனம் இது. பள்ளியின் இயற்பியல் ஆசிரியரான மிதுன் சக்கரவர்த்தி, மாணவிக்குக் கொடுத்த பாலியல் துன்புறுத்தல்தான், அவரின் தற்கொலைக்குக் காரணம். மாணவர்களின் உணர்ச்சிகரமான போராட்டம், மிதுன் சக்கரவர்த்தி, பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் மீதான கைது நடவடிக்கைகள், பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதம் என ஒரு மாணவியின் ஏற்க முடியாத மரணம் தமிழகமெங்கும் ஏராளமான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது!

மிதுன் சக்கரவர்த்தி
மிதுன் சக்கரவர்த்தி

பேரதிர்ச்சியில் உறைந்துபோயிருந்த மாணவியின் தந்தையிடம் பேசினோம். ‘‘ஒரு பேக்கரியில பலகார மாஸ்டரா வேலைக்குப் போயிட்டிருக்கேன். எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க. இவ, முதல் குழந்தை. படிப்புல கெட்டிக்காரி. இப்படிப் பண்ணிட்டா. சம்பவத்தன்னிக்கு என் மனைவியும் சின்னப் பொண்ணும் ஊருக்குப் போயிருந்தாங்க. வேலைக்குப் போயிட்டு சாயந்தரம் 5 மணிக்கு வந்து கதவைத் தட்டினேன். திறக்கலை. சரி, தூங்குறாபோலனு விட்டுட்டேன். மறுபடி 6 மணிக்கு வந்து தட்டினப்பவும் திறக்கலை. என்னமோ, ஏதோன்னு கதவை உடைச்சுப் பாத்தப்ப, தூக்குல தொங்கிட்டிருந்தா. அந்த ஆசிரியர் மிதுன் பணணின டார்ச்சர்தான் எல்லாத்துக்கும் காரணம்’’ என்று கதறினார்.

மீரா ஜாக்சன்
மீரா ஜாக்சன்

மாணவியின் தாயிடம் பேசியபோது, ‘‘கொரோனா காரணமா ஆன்லைன் கிளாஸ் போயிட்டிருந்த சமயத்துல, ‘இயற்பியல் படிக்க சார் வர சொல்லியிருக்காரு’னு ஸ்கூலுக்குப் போனா. அங்கவெச்சு அந்தப் படுபாவி பாலியல் வன்கொடுமை பண்ணியிருக்கான். அதை என் பொண்ணு அப்ப எங்ககிட்ட சொல்லலை. இப்பதான் அவ ஃபிரெண்ட் மூலமா தெரிஞ்சுது. அந்தச் சம்பவத்துக்கு பிறகு, ஒரு வருஷமாவே ‘ஸ்கூல் பிடிக்கலை. வேற ஸ்கூல் மாறணும்’னு அடம்பிடிச்சுக்கிட்டே இருந்தா. நாங்கதான் புரிஞ்சுக்கலை. ஆறு வருஷம் படிச்ச ஸ்கூல். 10-வதுல ஸ்கூல் ஃபர்ஸ்ட் எடுத்தா. ஸ்காலர்ஷிப்பும் வந்துட்டு இருந்துச்சு. அதனால, நான்தான் ஆரம்பத்துல வேண்டாம்னு மறுத்துட்டேன். ரொம்ப அடம்பிடிக்கவும், சொந்த ஊருக்குப் போறோம்னு சொல்லி, போன செப்டம்பர்லதான் டி.சி வாங்கி ஸ்கூல் மாத்தினோம்.

நல்லா படிச்சுக்கிட்டிருந்த பிள்ளை, சரியா படிக்கலை. யார்கிட்டயும் பேசாம அமைதியாவே இருந்தா. அப்பப்ப அழுதுக்கிட்டும் இருந்தா. மதுரையில சொந்தக்காரங்க வீட்டு விசேஷத்துக்குக் கூப்பிடப்ப, ‘வரலை’னு சொன்னா. பாவம் நொந்துபோயிருந்திருக்கா... எங்களைவிட அந்த மீரா மேடத்தை என் பொண்ணு நம்பியிருக்கா. அதனாலதான், அந்தப் பாவியைப் பத்தி அவங்ககிட்ட சொல்லியிருக்கா. ஆனா, அவங்களும் எம் பொண்ணைப் புரிஞ்சுக்கலை... அவவெச்ச நம்பிக்கையைக் காப்பாத்தலை. ‘இதெல்லாம் சின்ன விஷயம். பஸ்ல யாராவது இடிச்ச மாதிரி நினைச்சுக்கோ... வீட்ல சொல்லாத’னு சொல்லி கவுன்சலிங் கூட்டிட்டுப் போயிருக்காங்க. என் பிள்ளைக்கு ஏற்பட்ட நிலைமை இனி எந்தப் பிள்ளைக்கும் வரக் கூடாது’’ என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.

“இது தற்கொலை அல்ல... நிர்வாக கொலை!” - ‘சின்மயா’ மாணவி மரணம்... கொந்தளிக்கும் கோவை
MAHE

மாணவியின் உறவினர்கள், நண்பர்கள், சின்மயா பள்ளியைச் சார்ந்தவர்கள், போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தோம். ‘‘மிதுன் சக்கரவர்த்தி கடந்த ஒன்பது ஆண்டுகளாக சின்மயாவில்தான் பணியாற்றிவருகிறார். அங்கு ஆங்கில ஆசிரியராக இருந்த அர்ச்சனா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இளம் வயது என்பதால், மாணவர்களிடம் ஹீரோ பிம்பத்தை உருவாக்கிவைத்திருந்தார். அந்த மாணவி, அவரிடம் நம்பிக்கையாகப் பழகியதைச் சாதகமாக எடுத்துக்கொண்டு, யாரும் இல்லாத நேரத்தில் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதிர்ச்சியில் மாணவிக்கு என்ன செய்வது, யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. பெற்றோரிடம் சொன்னால் ஏதாவது செய்துகொள்வார்களோ என்று பயந்து மறைத்திருக்கிறார். சில நண்பர்களிடம் மேலோட்டமாகவும், சற்று தாமதமாக ஒரு நண்பரிடம் மட்டும் முழுத் தகவலையும் சொல்லியிருக்கிறார். அதன் பிறகே மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி, முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோரிடம் விவகாரம் சென்றிருக்கிறது. அவர்களோ, “நீ ஏன் அவர் கூப்பிட்டப்ப கிளாஸுக்குப் போனே... வீட்ல கொண்டுபோய் விடுறேன்னு சொன்னா நீ எதுக்கு அவர் பைக்ல ஏறுனே... அவர் கால் பண்ணினா நீ ஏன் பேசினே? உன் மேலதான் தப்பு!” என்று மாணவியைக் குற்றம் சுமத்தி, ‘மாணவி மேல்தான் தப்பு’ என்று நினைக்கும்படியாக மூளைச்சலவை செய்திருக்கிறார்கள். கவுன்சலிங்குக்கும் அழைத்துச் சென்றுள்ளார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, மிதுனிடம் ‘என்னால் தூங்க முடியவில்லை. இயற்பியல் வகுப்பை கவனிக்க முடியவில்லை. இதை நான் பள்ளி நிர்வாகத்திடம் சொல்லப்போகிறேன்’ என்றிருக்கிறார். ‘நான் யாரிடமும் இப்படி இருந்ததில்லை. உன்னிடம் மட்டும்தான் தெரியாமல் செய்துவிட்டேன். இதைப் பாலியல் துன்புறுத்தல் என்றெல்லாம் சொல்லாதே. இது யதேச்சையாக நடந்த விபத்து’ என்று கெஞ்சிவந்த மிதுன், ஒரு கட்டத்தில் மாணவியை மிரட்ட ஆரம்பித்திருக்கிறார். இந்த மன அழுத்தத்தில் ஏற்கெனவே ஒரு முறை கையைக் கிழித்து தற்கொலை முயற்சி செய்திருக்கிறார் அந்த மாணவி. பிறகு, பள்ளியும் மாறியிருக்கிறார். மிதுன் மீது நடவடிக்கை எடுக்காமல் தன்மீது குற்றம் சுமத்துகிறார்களே என்று வேதனைப்பட்டிருக்கிறார். அத்துடன், சிறுவயதில் அவருக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் அவருக்குள் ரணத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. எவ்வளவு போராடியும் தனக்கான நீதி எங்கேயும் கிடைக்கவில்லை என்கிற ரணத்தை அந்தச் சிறு பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இறுதியில் இந்த முடிவை எடுத்துவிட்டார்’’ என்றவர்கள், பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பற்றியும் சொன்னார்கள்...

“இது தற்கொலை அல்ல... நிர்வாக கொலை!” - ‘சின்மயா’ மாணவி மரணம்... கொந்தளிக்கும் கோவை

‘‘எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மீரா அதிரடியாகச் சமாளிப்பார். வடவள்ளி மற்றும் ஆர்.எஸ்.புரம் இரண்டு சின்மயா பள்ளிகளுக்கும் அவர்தான் பொறுப்பு. கையில் நாய்க்குட்டி, பந்தா பேச்சு என்று மிடுக்குடன்தான் வலம்வருவார். சின்னப் பிரச்னையாக இருந்தாலும் மாணவர்களை அடி வெளுத்துவிடுவார். அதனால்தான், இந்தப் பிரச்னையைச் சரிசெய்யும் பொறுப்பு மீராவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக மிதுன் அங்கேயே பணிபுரிவது, மீராவுக்கும் மிதுனின் மனைவிக்கும் இடையிலான நட்பு உள்ளிட்ட காரணங்களால் மிதுனைக் காப்பாற்றி, மாணவியைக் கைவிட்டு விட்டார் மீரா. பிரச்னை பெரிதாகிவிட்டதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பே மிதுனைப் பள்ளியிலிருந்து நீக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், அது பொய்’’ என்றார்கள்.

தேவநேயன்
தேவநேயன்

குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயன், ‘‘அந்தப் பள்ளி நிர்வாகம், ஆசிரியர், முதல்வர் மட்டுமல்லாமல், இந்தப் பிரச்னையை மூடிமறைத்த ஏனைய ஆசிரியர்கள், அந்த மாணவிக்கு கவுன்சலிங் கொடுத்த அனைவருமே குற்றவாளிகள்தான். இந்தச் சம்பவம் தெரிந்தவுடன் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்குத் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை இது தற்கொலை அல்ல. இது ஒரு நிர்வாகக் கொலை’’ என்றார் ஆதங்கமாக.

மாணவியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட, இன்னும் போலீஸால் கண்டுபிடிக்கப்படாத அந்த இரண்டு நபர்கள்போல, மிதுனைப்போலக் கொடூரமானவர்கள் நம் குழந்தைகளைச் சுற்றித் தினம் தினம் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள். நாம் நம் பிள்ளைகளோடு உரையாடி, கயவர்களை தைரியமாக எதிர்கொள்ளப் பழக்க வேண்டும்!