Published:Updated:

`திருடப்பட்ட யானை தந்தம்; கசிந்த தகவல்!’ - 2 ஆண்டுகளுக்குப் பின் வனத்துறையிடம் சிக்கிய கும்பல்

வனப்பகுதியில் திருடப்பட்ட யானை தந்தத்தை, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டுள்ளனர் கோவை வனத்துறையினர்

தந்தம்
தந்தம்

கோயம்புத்தூர் வனக்கோட்டம், பெரியநாயக்கன் பாளையம் சரகம், தோலம்பாளையம் கிழக்கு பீட் வனப்பகுதியில் 2017-ம் ஆண்டு நடந்த சம்பவம் அது. குஞ்சூர்பதி ஊரைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர், காட்டில் இறந்து கிடந்த ஒரு யானையைப் பார்த்துள்ளார். இந்தத் தகவலை, பெருக்குபதி ஊரைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரிடம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கார்த்திக்
கார்த்திக்

இதையடுத்து, கார்த்திக் மற்றும் ஈஸ்வரன் யானை இறந்த இடத்துக்குச் சென்று, இரு தந்தங்களை உருவி எடுத்து காட்டுக்குள் மறைத்து வைத்துவிட்டனர். தந்தங்கள் எடுத்த விவரத்தை, குஞ்சூர்பதியைச் சேர்ந்த சின்ன போண்டா என்ற வீரபத்திரனிடம் சொல்லியுள்ளனர். இதைத்தொடர்ந்து, தந்தங்களை விற்க கோவனூரைச் சேர்ந்த மான் என்ற தாமோதரனை அழைத்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த தந்தங்களைக் காண்பித்துள்ளார்கள்.

மானும், தந்தங்களை விற்பதற்காக தன் செல்போனில் போட்டோ எடுத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில், கோரபதி ஊரைச் சேர்ந்த தங்கராஜ் மற்றும் மங்களகரைபுதூர் ஊரைச் சேர்ந்த அண்ணாச்சி என்ற மோகன் ராஜ் ஆகியோர்களிடமும் ஈஸ்வரன் விஷயத்தைச் சொல்லியுள்ளார்.

ஈஸ்வரன்
ஈஸ்வரன்

இந்தத் தங்கராஜ் கேரளாவில் பணியாற்றி வருகிறார். பின்பு, தங்கராஜ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரிடம் தந்தத்தை காண்பித்துள்ளார்கள்.

பின்னர், அந்தத் தந்தங்களை அங்கேயே மறைத்துவிட்டு கணுவாய்பாளையத்தில் இருக்கும் டாஸ்மாக்குக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது தந்தங்கள் அங்கு இல்லை.

இந்த நிலையில், தந்தங்களைப் பற்றி ஈஸ்வரன் மற்றும் வீரபத்திரனிடம் மான் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், அது தொலைந்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

வீரபத்திரன்
வீரபத்திரன்

ஆனால், மான் அதை நம்பாமல், ``நீங்கள் தந்தங்களை விற்று விட்டீர்கள். எனவே, எனக்கு என் பங்கு பணம் வேண்டும்" என்று மிரட்டியதுடன் ஆள்களை வைத்தும் அடித்துள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், விஷயம் தற்போது வெளியே கசிந்தது. இதையடுத்து, வனத்துறையினர், கார்த்திக் மற்றும் வீரபத்திரன் ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தி நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

மான்
மான்

அதேபோல, கள்ளச்சாராய வழக்கில் சிறையில் இருந்த மானிடம் வாக்குமூலம் பெற்று நீதிமன்றக் காவலில் வைத்தனர்.

ஈஸ்வரன் மதுக்கரை நீதிபதி முன்பு சரணடைந்தார். பிறகு, மோகன்ராஜைப் பிடித்து விசாரித்ததில், `தந்தங்களை தங்கராஜ்தான் திருடி கேரளா எடுத்துச் சென்றார்.

மோகன்ராஜ்
மோகன்ராஜ்

ஆனால், அங்கு விற்க முடியவில்லை. எனவே, தந்தங்கள் அவனிடம்தான் இருக்கும்' என்று சொல்லியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, கொச்சின் சென்று வனத்துறையினர் தங்கராஜைப் பிடித்து, அங்கு கிணற்றுக்குள் மறைத்து வைத்திருந்த தந்தங்களைக் கைப்பற்றினர்.

தங்கராஜ்
தங்கராஜ்

தங்கராஜ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

`டாஸ்மாக்கில் மது அருந்திக்கொண்டிருந்த தங்கராஜ், வெளியே சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு, தந்தங்களை திருடி கேரளா சென்றுவிட்டார்.

பிடிபட்ட தந்தம்
பிடிபட்ட தந்தம்

இரண்டு தந்தங்களும் இரண்டடி நீளம் கொண்டது. அவற்றின் எடை சுமார் 5 கிலோ’ என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.