கோவை, அம்மன் குளம் தாமு நகர் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு கபடிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் என்ற வாலிபர் 3 வெளியூர் கபடி வீரர்களை வைத்து விளையாடி போட்டியில் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு அம்மன் குளத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து, வெளியூர் வீரர்களை வைத்து விளையாடியது தொடர்பாக நவீன்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த விஜயகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் நவீனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் நவீன்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பட்ட நவீன்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

நவீன்குமாரை கொன்றவர்களை போலீஸார் ஒருபுறம் தேடி வந்தனர். மறுபுறம் தங்களது நண்பனைக் கொன்றவர்களை பழிவாங்க நவீன்குமாரின் நண்பர்களும் தேடிவந்தனர். இதில், கண்ணன் என்பவர் வடவள்ளியில் தங்கியிருப்பதாக அவர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வடவள்ளி சென்று கண்ணனைத் தாக்கியுள்ளனர். அப்போது, மற்றொருவர் கெம்பட்டி காலனியில் பதுங்கியிருப்பதாகவும், அவரை காண்பித்துத் தருவதாகக் கண்ணன் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அனைவரும் கெம்பட்டி காலனி சென்றுள்ளனர். அங்கு சென்றவுடன், கண்ணன் தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் அவரை கற்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் கண்ணனை மீட்ட போலீஸார் அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கண்ணனைக் கொலை செய்ய முயன்ற, நவீன்குமாரின் நண்பர்கள் ஷாஜின் வர்கிஸ், ராம்பிரசாத், கார்த்திக், ரஞ்சித்குமார், பிரபு ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த கொலை மற்றும் பழிவாங்கும் முயற்சிகள் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.