கட்டுரைகள்
Published:Updated:

‘வட்டி இல்லாமல் கடன் வேண்டுமா?’ - விளம்பரம் செய்து வலைவிரித்த ஆசாமி

விளம்பரம் செய்து வலைவிரித்த ஆசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
விளம்பரம் செய்து வலைவிரித்த ஆசாமி

“நீங்கள் கடனாகக் கேட்ட 4 கோடி ரூபாயை ஒரே வாரத்தில் ஏற்பாடு செய்துவிடலாம். ஆனால், அதற்கு முன்பு அக்ரிமென்ட் போட வேண்டும். புரோநோட்டில் கையெழுத்து வேண்டும். இன்னும் சில ஃபார்மாலிட்டிஸ் இருக்கின்றன.

குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளைக் காண்பித்து, சென்னைத் தொழிலதிபரை ஏமாற்றிய விவகாரத்தில் கைதாகியிருக்கிறார் கோவை ஆசாமி. போலீஸாரையே மலைக்க வைத்திருக்கிறது அந்த ஆசாமி கையாண்ட மோசடி வித்தைகள்.

சென்னை நீலாங்கரையில் பிரபல ஹோட்டலை நடத்திவரும் தொழிலதிபர் ஒருவர், தன் பிஸினஸ் தேவைக்காக நண்பர்களிடம் கடன் கேட்டிருக்கிறார். இந்தச் சமயத்தில் பிரபல நாளிதழில் ‘வட்டியில்லாமல் கடன் வேண்டுமா?’ என்ற விளம்பரத்தைப் பார்த்து, அதில் குறிப்பிட்டிருந்த போன் நம்பரில் தொடர்பு கொண்டிருக்கிறார். எதிர்முனையில் பேசியவர், தன்னை ஹரீஷ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். தனக்கு நான்கு கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று தொழிலதிபர் கேட்டதும், நுங்கம்பாக்கத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலுக்கு வந்து தன்னைச் சந்திக்கும்படி கூறியிருக்கிறார் அந்த ஹரீஷ்.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்று ஹரிஷைச் சந்தித்தார் அந்தத் தொழிலதிபர். அப்போது, கழுத்து நிறைய செயின், கையில் பிரேஸ்லெட் என டிப் டாப்பாகக் காட்சியளித்திருக்கிறார் ஹரீஷ். இந்தச் சந்திப்பின்போது, “எனக்குக் கோவைப் பகுதியில் ஏராளமான எஸ்டேட்கள் இருக்கின்றன. பெரிய அளவில் பிசினஸ் செய்துவருகிறேன். அதோடு தமிழகத்திலிருக்கும் பிசினஸ்மேன்களுடன் நெருங்கிய பழக்கமிருக்கிறது. அவர்களின் பிளாக் மணியை ஒயிட்டாக மாற்றித்தரவே வட்டியில்லாமல் கடன் கொடுக்கும் தொழிலைச் செய்கிறேன்” என்று அள்ளிவிட்டிருக்கிறார் ஹரீஷ்.

‘வட்டி இல்லாமல் கடன் வேண்டுமா?’ - விளம்பரம் செய்து வலைவிரித்த ஆசாமி

மேலும், “நீங்கள் கடனாகக் கேட்ட 4 கோடி ரூபாயை ஒரே வாரத்தில் ஏற்பாடு செய்துவிடலாம். ஆனால், அதற்கு முன்பு அக்ரிமென்ட் போட வேண்டும். புரோநோட்டில் கையெழுத்து வேண்டும். இன்னும் சில ஃபார்மாலிட்டிஸ் இருக்கின்றன. அதற்கு 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும்” என்று நிபந்தனைகளை அடுக்கியிருக்கிறார் ஹரீஷ். இதையெல்லாம் நம்பிய தொழிலதிபர், ஹரீஷின் எல்லா நிபந்தனைகளுக்கும் ஓகே சொன்னதோடு, அவர் கேட்ட 4 லட்சம் பணத்தையும் கொடுத்திருக்கிறார். ஆனால், அதன்பிறகு பலமுறை தொடர்புகொள்ள முயன்றபோதும் ஹரீஷின் செல்போன் சுவிட்ச் ஆஃப் என்றே வந்திருக்கிறது. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலதிபர், அடையாறு உதவி கமிஷனர் நெல்சனிடம் புகாரளித்திருக்கிறார்.

தொழிலதிபர் அளித்த தகவலின்படி, சி.சி.டி.வி கேமராப் பதிவுகள், செல்போன் சிக்னல், போன் அழைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அடையாறு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். ஹரீஷ் பயன்படுத்திய செல்போனிலிருந்து சென்ற அழைப்புகள் கோவைப் பகுதியைக் கைகாட்ட, அங்கே அவரைப் பொறிவைத்துப் பிடித்தனர் போலீஸார். விசாரணையில், ஹரீஷின் நிஜப்பெயர் சுரேஷ் என்பதும், தமிழ்நாடு முழுவதும் பணத்தேவையுடன் இருக்கும் தொழிலதிபர்களைக் குறிவைத்து ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. தற்போது சுரேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து அடையாறு போலீஸாரிடம் பேசினோம். ``கைது செய்யப்பட்ட சுரேஷ், கோவை அன்னூரைச் சேர்ந்தவர். டிரைவராக வேலைபார்த்து வந்த சுரேஷ், குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக வேண்டும் என்று செம்மரக் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு கோவைப் பீளமேடு போலீஸார் செம்மரக்கடத்தல் வழக்கில் சுரேஷைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். சிறையில் சுரேஷுக்குத் தனிக்கொடி என்பவருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. ஒருவரை எப்படியெல்லாம் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்யலாம் என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டார் சுரேஷ். சிறையிலிருந்து வெளியில் வந்ததும், பிரபல நாளிதழில் ‘வட்டியில்லாமல் கடன் வேண்டுமா?’ என்று விளம்பரம் செய்து, பணம் கேட்டு வருபவர்களிடம் தன் பெயரை ரமேஷ், ஹரீஷ் என மாற்றிச் சொல்லிக் கைவரிசை காட்டியிருக்கிறார்.

‘வட்டி இல்லாமல் கடன் வேண்டுமா?’ - விளம்பரம் செய்து வலைவிரித்த ஆசாமி

இதற்காக 25-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் மற்றும் செல்போன்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறார் சுரேஷ். மேலும், தன்னைப் பெரிய செல்வந்தர்போல காட்டிக்கொள்ள சொகுசுக் கார்களை வாடகைக்கு எடுத்தும், நட்சத்திர ஹோட்டல்களில் சந்திப்பு நடத்தியும், பணம் கேட்டு வருபவர்களை மயக்கி வந்திருக்கிறார். தன்னிடம் கட்டுக்கட்டாகப் பணம் இருப்பதைப்போலக் காட்டிக்கொள்ள, குழந்தைகள் விளையாடும் போலி ‘சில்ரன்ஸ் பேங்க்’ ரூபாய் நோட்டுகளையும் பயன்படுத்தியிருக்கிறார். மும்பையிலிருந்து ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கிய இந்தப் போலி ரூபாய் நோட்டுகளை, கடன் கேட்டு வருபவர்களின் பார்வையில்படும்படி கட்டுக்கட்டாக வைத்திருந்திருக்கிறார். இந்தப் பொறியில்தான் பல தொழிலதிபர்கள் விழுந்திருக்கிறார்கள்.

அவரிடமிருந்து 18 செல்போன்கள், 25 சிம்கார்டுகள், கார், லேப்டாப், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான குழந்தைகள் விளையாடும் ‘போலி’ ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். சுரேஷ் இதுபோல ஏராளமான தொழிலதிபர்களை ஏமாற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. ஆனால், வேறு யாரும் இதுவரை புகாரளிக்கவில்லை. இந்த ஏமாற்றுவேலைப் பின்னணியில் இன்னும் சிலர் இருப்பதாகத் தெரிகிறது. இந்த மோசடி நெட்வொர்க்கை முழுமையாகக் கண்டுபிடித்த பிறகே ஏமாந்தவர்கள் விவரம் தெரியவரும்” என்றனர்.

தினுசு தினுசா கிளம்புறாய்ங்க, உஷார்!