Published:Updated:

'தங்கப் பரிசு தருகிறேன்' - கோவையை அதிரவைத்த முகநூல் மோசடி!

முகநூல் மோசடி
முகநூல் மோசடி

வெளிநாட்டிலிருந்து தங்க ஆபரணங்கள் பரிசளிப்பதாகக் கூறி மோசடி செய்த கும்பல் குறித்து கோவை போலீஸ் விசாரித்துவருகிறது.

முகநூல் வழியாக நடக்கும் மோசடி சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. ஒருவரின் முகநூல் கணக்கிலிருந்து புகைப்படங்களை எடுத்து, அதே பெயரில் போலி கணக்கு தொடங்குகின்றனர். இதையடுத்து, அவர்களது நண்பர்கள் பட்டியலில் பணம் கேட்கும் நூதன மோசடி நடந்துவருகிறது.

போலி முகநூல் பக்கத்தில் நடந்த உரையாடல்
போலி முகநூல் பக்கத்தில் நடந்த உரையாடல்
திருப்பூர்: `அவசரமா பதினஞ்சாயிரம் ரூபா வேணும்!’ - கலெக்டர் பெயரிலேயே ஃபேஸ்புக்கில் மோசடி முயற்சி

இந்தநிலையில், போலி முகநூல் கணக்கு மூலம் பொள்ளாச்சி ஆண் ஒருவரை பெண் ஏமாற்றியது தொடர்பாக கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் செந்தில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு முகநூல் வாயிலாக, Sarah Backy என்ற ஐ.டி-யிலிருந்து ஒரு பெண் பழக்கம் ஆகியிருக்கிறார். அவர், தான் யூ.கே-வில் வசிப்பதாக செந்திலிடம் கூறியுள்ளார். நாளடைவில் அவர்கள் பழக்கம் வாட்ஸ்அப் வரை நீண்டுள்ளது.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

இந்தநிலையில், அந்தப் பெண் செந்திலிடம் 20,000 பவுண்டு (Pound) மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் பரிசாகத் தருவதாகக் கூறியிருக்கிறார். அந்தப் பரிசுப் பொருளைப் பெற வேண்டுமென்றால், கலால் வரி தொகையை நீங்கள் கட்ட வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து, செந்திலுக்கு கலால் வரித்துறை அதிகாரி என ஒருவர் பேசி பணம் கட்ட கூறியிருக்கிறார். அதை நம்பி செந்திலும் அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கில் ரூ.9,50,000 பணத்தைக் கட்டியுள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி செந்திலுக்கு எந்தப் பரிசுப் பொருளும் கிடைக்கவில்லை. மேலும் அந்தப் பெண்ணையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

மோசடி
மோசடி

முக்கியமாக, பெண்ணின் முகநூல் பக்கம் போலியானது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, சரவணன் கோவை மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இது போன்ற போலி நபர்களிடமிருந்து விழிப்புடன் இருக்குமாறு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு