Published:Updated:

`என் மரணத்துக்கு மத்திய அரசும், நீதிமன்றமும் என்ன சொல்லப்போகின்றன?'- தற்கொலை செய்தவரின் வாக்குமூலம்

தற்கொலை செய்துகொண்ட தனபால்
தற்கொலை செய்துகொண்ட தனபால்

கோவை ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் தீக்குளித்து இறந்தவர் உருக்கமான மரண வாக்குமூலத்தை எழுதியிருக்கிறார்.

கோவை, ராமநாதபுரம் அருகேயுள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்துவந்தார். அவரின் மனைவி உமா அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். தனபால் அவிநாசி சாலை, அண்ணாசிலை அருகேயுள்ள ஓர் தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்.

தற்கொலை
தற்கொலை
கோவை: ஆன்லைன் ரம்மியில் தோல்வி... விரக்தி! - ஒரேநாளில் இருவர் தற்கொலை

அதில், கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு, லட்சக்கணக்கான பணத்தை இழந்திருக்கிறார். இதனால், விரக்தியிலிருந்த தனபால், நேற்று காலை அந்த நிறுவனத்தின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருக்கிறார். பிறகு அதில் ஏறி அமர்ந்து பெட்ரோல் ஊற்றி, தீவைத்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இறப்பதற்கு முன்னர் தனபால் மரண வாக்குமூலத்தை எழுதியிருக்கிறார்.

கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டு; தொடர் தோல்வி! - தற்கொலை செய்த கோவை இளைஞர்

அந்த கடிதத்தில் தனபால்,``எனது பிசினஸுக்காக மனைவி பெயரில் ரூ.14 லட்சம் (60 தவணைகள்) பர்சனல் லோனாக வாங்கியிருந்தேன். கொரோனா பயம் காரணமாக, பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவால் இந்த ஆண்டு ரூ.20 லட்சத்தை இழந்துவிட்டேன். மத்திய அரசு அறிவித்த கடன் ஒத்திவைப்பு திட்டத்தைப் பயன்படுத்தி, ஏப்ரல் – ஆகஸ்ட் ஐந்து மாதங்கள் தவணை கட்டுவதைத் தள்ளிப்போட்டேன். அந்த ஐந்து மாதங்கள் சலுகையை பயன்படுத்தியதற்காக கூடுதலாக நான்கு மாதங்கள் தவணை கட்டச் சொல்கின்றனர்.

கஷ்டப்பட்டு செப்டம்பர், அக்டோபர் மாதத் தவணைகளை கட்டிவிட்டேன். 20 நாள்களுக்கு முன்னர் என் மாமனார் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் மனைவி ஊதியத்தில் சி.பி.எஸ் (பங்களிப்பு, ஓய்வு ஊதியம்) சரியாக வரவு வைக்கவில்லை. கட்டிய பணத்தையே சரியாக வரவு வைக்காத நிர்வாகம், பின்னாளில் அதை எப்படி மொத்தமாகக் கொடுக்கும்?

சி.பி.எஸ்-ல் லட்சகக்ணக்கில் பணம் இருந்தும் என் மாமனார் இறந்தபோது, மனைவி பணத்துக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததை என்னால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. சி.பி.எஸ்-லுள்ள அரசு ஊழியர்கள், கொஞ்சம் உங்களது பாதுகாப்பைப் பற்றிச் சிந்தியுங்கள். சி.பி.எஸ் குளறுபடிக்கு குரல் கொடுத்துப் போகும், முதலும் கடைசியுமான உயிர் எனதாக இருக்கட்டும். என் மரணத்துக்கு மத்திய அரசும் உயர் நீதிமன்றமும் என்ன சொல்லப்போகின்றன?

தற்கொலை
தற்கொலை

எனது மரணத்துக்குப் பிறகாவது உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் கடன் ஒத்திவைத்து வட்டி ஏற்றிய வழக்கில், நீதிபதிகள் ஒரு நல்ல தீர்ப்பைத் தருவார்கள் என்று நம்புகிறேன். என் மனைவி மற்றும் மகனுக்குத் தீராத துன்பத்தைத் தந்துவிட்டு அவர்களை நட்ட நடுவீதியில் தவிக்கவிட்டுச் செல்லும் இந்தப் பாவி..” என்று கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கோவை: ஆன்லைன் ரம்மியில் தோல்வி... விரக்தி! - ஒரேநாளில் இருவர் தற்கொலை

கோவையில் கடந்த சில நாள்களாக தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. வடவள்ளி அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் (கணவன், மனைவி, மகள்) தற்கொலை செய்துகொண்டனர். அந்தச் சோகம் அடங்குவதற்குள், தற்போது அடுத்த தற்கொலைச் சம்பவம் நடந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு