Published:Updated:

நடுவீட்டில் எரிந்த பிணம், காட்டிக் கொடுத்த ருத்ராட்சம்... என்ன காரணம்? #TamilnaduCrimeDiary

நடுவீட்டில் எரிந்து கிடந்த பிணம் முதல் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வரை... தடதடக்கும் க்ரைம் செய்திகள்.

#TamilnaduCrimeDiary
#TamilnaduCrimeDiary

கோவை குறிச்சி கல்லுக்குழி வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (42). பெங்களூருவில் மென் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு பணியிலிருந்து விலகி கோவை வந்த சக்திவேல், மனைவி அழகு, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். சக்திவேலின் செயல்பாடுகள் காரணமாகக் கணவன் மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வார்த்தைப் போர் முற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவன் மனைவி இருவரும் பிரிந்துவிட்டனர். குழந்தைகளைத் தன்னுடன் அழகு அழைத்துச் சென்றுவிட, சக்திவேல் மட்டும் கோவையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

சக்திவேல்
சக்திவேல்

உறவினர்கள் யாருடனும் தொடர்பில் இல்லாத சக்திவேல், திருநெல்வேலியைச் சேர்ந்த அக்கா வீட்டாருடன் மட்டும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனிடையே கடந்த ஆறு மாதங்களாக, அவர்களிடமும் சக்திவேல் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அக்கா மகன் தினேஷ், பலமுறை செல்போன் மூலமாகத் தொடர்பு கொண்டபோதும் சக்திவேல் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த தினேஷ் கோவையிலுள்ள சக்திவேலின் வீட்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னர் நேரில் சென்றுள்ளார்.

வீடு திறந்த நிலையில் இருந்துள்ளதைப் பார்த்தவர், ``மாமா, மாமா எங்க இருக்கீங்க?” எனச் சத்தம் போட்டும் யாரும் வராததால், வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது எரிந்த நிலையில் ஒரு சடலம் இருந்துள்ளது. சடலத்தின் மீது எரிந்த நிலையில் சணல் சாக்கு, தேங்காய் சிரட்டைகள், காகிதங்கள் இருந்ததைப் பார்த்து வெலவெலத்துபோன தினேஷ் உடனடியாக இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், சக்திவேல் வீட்டுக்கு அருகில் உள்ள ஓர் தம்பதி உட்பட 8 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

எரிந்த நிலையில் சக்திவேலின் உடல்
எரிந்த நிலையில் சக்திவேலின் உடல்

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ``இந்தச் சம்பவம் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு நடந்திருக்கக் கூடும். சக்திவேலுக்கும் அவர் வீட்டருகில் உள்ள இளம்பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அந்த இளம்பெண்ணின் கணவர் கண்டித்துள்ளார். ஆனால், அவர்கள் கள்ளக்காதல் தொடர்ந்துகொண்டேதான் இருந்துள்ளது. இதனால் அவரே சக்திவேலை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்.

அதேபோல, சக்திவேலுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக ஏற்கெனவே குனியமுத்தூர் காவல்நிலையத்தில் ஓர் வழக்கு உள்ளது. அதனால் கூட கொலை நடந்திருக்கலாம். இப்போதைக்கு அந்தச் சடலத்தின் கழுத்திலிருந்த ருத்ராட்ச கொட்டையை வைத்தே கொல்லப்பட்டவர் சக்திவேல்தான் என்பதை உறுதி செய்துள்ளோம். உடற்கூறாய்வு முடிந்துள்ளது. சடலத்தில் இருந்து சதையை எடுத்து டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். கை, காலை கட்டிப் போட்டு சணல் சாக்கு, தேங்காய் சிரட்டைகள், காகிதங்கள் ஆகியவற்றில் மண்ணெண்ணெய் மூலம் எரித்து கொன்றுள்ளனர். இதுதொடர்பாக நான்கு தனிப்படை அமைத்து விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என்றனர்.

நான்கு மாதமாகியும் எரிந்த பிணத்தின் வாடை கூடவா அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்குத் தெரியாது என போலீஸார் விசாரிக்கையில், ``சக்திவேல் யாருடனும் பேசமாட்டார். அவர் வீட்டில் அவரைத் தவிர வேறு யாரும் இல்லாததால் சுத்தபத்தமாக இருக்காது. இதனால், பிணம் எரிந்து கிடந்த வாடையைக்கூட எங்களால் உணர முடியவில்லை” என அக்கம்பக்கத்தினர் பதிலளித்துள்ளனர். நடுவீட்டில் பிணம் எரிந்து கிடந்த சம்பவம் கோவை மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபாஷ்!
மாணவர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் போக்குவரத்து ஆய்வாளர்

குளித்தலை நகரப் போக்குவரத்து காவல்நிலைய ஆய்வாளராக இருப்பவர் கார்த்திகேயன். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான், குளித்தலை நகரப் போக்குவரத்துக் காவல் நிலைய ஆய்வாளராகப் பொறுப்பேற்றார். பணிக்கு வந்த நாள் முதல் இவரின் செயல்பாடு பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுவருகிறது.

குளித்தலையில் இரண்டு வருடங்களாகத் திறக்கப்படாமல் இருந்த பயணிகள் நிழற்குடையை தானே களத்தில் இறங்கி சுத்தம் செய்ததோடு பேருந்துகள் நின்று செல்வதற்கும் வழிவகை செய்தது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஹெல்மெட் விழிப்புணர்வுக்காக மாணவர்களை வைத்து நாடகம், பாட்டு, கவிதை, ஓவியம் என்று போட்டிகள் நடத்தியது மூலமாக ஆறு பள்ளிகளில் 6,000 -க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது பிரமிக்கத்தக்க செயல்தான்.

கடந்த ஒருமாதமாகப் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு காவலன் செயலி பற்றிய தொடர் விழிப்புணர்வு நிகழ்வை நடத்தி வருகிறார். இதன்மூலம், கரூரில் மட்டும் 3,000 பெண்கள் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த விழிப்புணர்வு பிரசாரம் குறித்து குளித்தலை போக்குவரத்துக் காவல்நிலைய ஆய்வாளர் கார்த்திகேயனிடமே பேசினோம்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

``ஹெல்மெட் போடாதவர்கள், சாலை விதிகளை மீறுபவர்கள் மீது வெறும் கேஸை மட்டும் போடுவதால் பிரச்னை தீராது. அதனால்தான், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலமா விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களுக்கு ஈசியா சாலைவிதிகளை உணர வைக்கிறோம். இதுவரை ஆறு பள்ளிகள், இரண்டு கல்லுரி மாணவர்களிடையே பல்வேறு போட்டிகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினோம்.

மகனுக்குக் கல்யாணம்... ஒரு மாத கால பரோல் முடிந்து மீண்டும் சிறைக்குச் சென்ற இராபர்ட் பயஸ்!

பாட்டு, நடனம், நடிப்பு, ஓவியத்திறமை, கவிதை எழுதும் ஆற்றல் என்று சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களை இனம்கண்டு, அவர்களை வைத்து வரும் ஜனவரி முதல் வாரத்தில் மிகப்பெரிய விழாவை நடத்தவிருக்கிறோம். இதனால், மாணவர்களின் திறமையும் வெளியுலகுக்குத் தெரியும்; போக்குவரத்து விதிகள் சம்பந்தமான விழிப்புணர்வும் ஏற்படும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்கிற எங்களது இந்த ரீதியிலான விழிப்புணர்வு நிகழ்வுகள் நான்-ஸ்டாப்பாக தொடரும்" என்றார்.

அலர்ட்!
அடுத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓ.பி.சிங்?

பிரதமர் மோடிக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தில் பலமான பேச்சு ஓடுகிறது. விரைவிலேயே அஜித் தோவலை கழற்றிவிட்டு, அவரிடத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி ஓம் பிரகாஷ் சிங்கை கொண்டு வர மோடி திட்டமிட்டுள்ளாராம். ராமஜென்ம பூமி தீர்ப்புக்குப் பிறகு, உ.பி-யில் சட்டம் ஒழுங்கை கையாண்டது, சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களை ஒடுக்கியது என ஓ.பி.சிங் மீது மோடிக்கு பாசிட்டிவ் அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு விஷயங்களை சிங் திறமையாகக் கையாள்வார் என முன்னாள் உ.பி முதல்வரும் தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் பரிந்துரை செய்திருப்பதால் மோடியின் குட் புக்கில் ஓ.பி.சிங் இடம்பெற்றுவிட்டதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் பேசிக்கொள்கின்றனர்.
ஓ.பி.சிங்
ஓ.பி.சிங்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் 15 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் நிலையில், போலீஸாரின் துப்பாக்கியில் இருந்து ஒரு புல்லட் கூட வெளியேறவில்லை என ஓ.பி.சிங் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஓ.பி.சிங் நியமிக்கப்படலாம் என்கிற தகவல் டெல்லி அதிகாரிகள் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.