Election bannerElection banner
Published:Updated:

ஆசை வார்த்தை கூறி குழந்தை கடத்தல்... 24 மணி நேரத்தில் மீட்ட கோவை போலீஸ்!

குழந்தை கடத்தல்
குழந்தை கடத்தல்

கோவையில் குழந்தை கடத்தல் கும்பலை 24 மணி நேரத்தில் பிடித்து, குழந்தையையும் மீட்டுக் கொடுத்த போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி செல்வம் - செல்வராணி. திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, இந்தத் தம்பதிக்கு கோவை அரசு மருத்துவமனையில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, அந்தக் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வாங்குவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கோவை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

செல்வம் தம்பதி
செல்வம் தம்பதி

அப்போது, ஒரு தம்பதி, `நாங்கள் பிறப்புச் சான்றிதழ் வாங்கித் தருகிறோம்’ என்று செல்வம் தம்பதியிடம் கூறியுள்ளனர். அதன் காரணமாக அவர்களிடம், செல்வம் தம்பதி நெருங்கிப் பழகியுள்ளனர். ஆனால், அவர்கள் எதிர்பாராத வகையில் அந்தக் கும்பல் ஒரு குழந்தையைக் கடத்திசென்றுவிட்டது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தனிப்படை அமைத்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வைத்து குழந்தையைக் கடத்திச் சென்ற விக்னேஷ் - பிரபாவதி ஆகிய இருவரை பிடித்து, குழந்தையையும் மீட்டனர். இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ``செல்வம் செல்வராணி தம்பதியரை பின்தொடர்ந்த விக்னேஷ் - பிரபாவதி தம்பதி, அவர்களிடம் பேசிப் பழகியுள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனை
கோவை அரசு மருத்துவமனை

நாளடைவில் செல்வம் தம்பதிக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களது வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளனர். பிறப்புச் சான்றிதழ் வாங்க, செல்வம் தம்பதியுடன் விக்னேஷ் தம்பதியும் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுக்க வேண்டுமென செல்வத்தை, விக்னேஷ் வெளியில் அழைத்துச் சென்றுவிட்டார். அதனால், பிரபாவதியும் செல்வராணியும் கையில் ஆளுக்கு ஒரு குழந்தையுடன் இருந்துள்ளனர். சிறிது நேரத்தில் பிரபாவதி குழந்தையுடன் மாயமாகிவிட, ஜெராக்ஸ் கடையில் இருந்து போன் பேசுவது போலவே விக்னேஷ் எஸ்கேப் ஆகிவிட்டார். செல்வம் உள்ளே சென்று, `குழந்தை எங்கே?’ என்று கேட்டபோதுதான், குழந்தை கடத்தப்பட்ட விஷயம் அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

பிரபாவதி
பிரபாவதி

அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தோம். சனிக்கிழமை மாலை திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வைத்து விக்னேஷ் தம்பதியைப் பிடித்துவிட்டோம். குழந்தையையும் மீட்டு செல்வம் தம்பதியிடம் ஒப்படைத்துவிட்டோம்” என்றனர்.

விக்னேஷ் பிரபாவதியைக் கைது செய்த போலீஸார், இதில் இன்னும் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, இவர்கள் குழந்தை கடத்தல் கும்பல்களுடன் தொடர்பில் இருப்பவர்களா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக குழந்தையைக் கடத்தினார்களா? போன்ற பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர்.

பிரபாவதி
பிரபாவதி

கடத்தப்பட்ட 24 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட கோவை போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு