கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக தன்பாலின ஈர்ப்பு ஆப் மூலம் பல்வேறு மோசடிகள் நடந்துவருகின்றன. இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர், `Grinder' என்னும் ஆப்பில் ஆக்டிவாக இருந்திருக்கிறார். அந்த ஆப் மூலம் அவருக்கு ராக்கி என்ற பெயரில் நபர் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார்.

நாளடைவில் இருவரும் நெருங்கிப் பேசியிருக்கின்றனர். ராக்கி, அந்த இளைஞரைத் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து சரவணம்பட்டி பகுதியில் ஓர் ஆள் இல்லாத கட்டடத்தில் சந்திக்க இருவரும் திட்டமிட்டனர்.
ராக்கியின் பேச்சை நம்பி அந்த இளைஞர் அங்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த நான்கு இளைஞர்கள் அந்த இளைஞரைக் கத்திமுனையில் மிரட்டி தங்கச்சங்கிலி, தங்க மோதிரம், செல்போன் உள்ளிட்டவற்றைப் பறித்துக்கொண்டு தப்பியிருக்கின்றனர். இது குறித்து அந்த நபர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையிலேயே ராக்கி என்ற பெயரில் பேசியவர், போலியான பெயரைப் பயன்படுத்தியது தெரியவந்திருக்கிறது.
பணம் பறிப்பதற்காகவே இந்த ஆப்பைப் பயன்படுத்தி சதித்திட்டம் போட்டதும் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக கார்த்திகேயன் (24), மாரிச்செல்வம் (23), அபிராம் (19) , ஹரி விஷ்ணு (21) ஆகிய நான்கு இளைஞர்களை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த செல்போன் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம், சமையல்காரர் ஒருவரை தன்பாலின ஈர்ப்பு என்ற பெயரில் அழைத்து தாக்கிப் பணம், செல்போன் பறித்த வழக்கில் இரண்டு கல்லூரி மாணவர்கள் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.