கோவை மாவட்டம், பாலமலை அடுத்த பசுமணி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் வசிக்கும் இந்த மக்கள், முக்கிய நிகழ்வுகளுக்காக மட்டுமே வெளியே வருகின்றனர்.

இந்த நிலையில் நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸார் பாலமலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா செடி பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையிலான போலீஸார் மற்றும் வனத்துறையினர் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது காய்கறி செடிகளுக்கிடையே ஊடு பயிராக பயிரிடப்பட்டிருந்த 15 கிலோ மதிப்புள்ள 300 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

விசாரணையில், பசுமணி கிராமத்தைச் சேர்ந்த செல்லன் (60), பழனிச்சாமி (60), ராஜப்பன் (33), வேலுச்சாமி (26) ஆகியோர் கஞ்சா பயிரிட்டது தெரியவந்தது.
அதையடுத்து போலீஸார், அந்த நான்கு பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கஞ்சா செடியால் ஏற்படும் பாதிப்புக குறித்து பழங்குடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து, மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.