Published:Updated:

நள்ளிரவு...ஆயுதங்கள்! - கோவையை மிரட்டிய சந்தன மரக் கடத்தல் கும்பல் கைது

கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் தொடர்ச்சியாக சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பலில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தன மரம் கொள்ளையர்கள்
சந்தன மரம் கொள்ளையர்கள்

கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே சந்தன மரக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வெவ்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக சந்தனமரக் கடத்தல் நடந்து கொண்டே இருந்தது. நடுநிசியில், பயங்கர ஆயுதங்களுடன் இந்தக் கொள்ளையர்கள் சுற்றித் திரிவதாகத் தகவல்கள் வெளியாகின.

சந்தன மரக் கொள்ளையர்கள்
சந்தன மரக் கொள்ளையர்கள்

இதையடுத்து, இந்தக் கடத்தல்காரர்களைப் பிடிக்க போலீஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனாலும், கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

Vikatan

காட்டூர் காவல் எல்லை, சாய்பாபா கோயில் காவல் எல்லை, பந்தய சாலை காவல் எல்லை, குனியமுத்தூர் காவல் எல்லை, ஆர்.எஸ்.புரம் காவல் எல்லை என்று தொடர்ச்சியாக சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய கடத்தல்காரர்கள், கடைசியாக சிங்காநல்லூர் காவல் எல்லையில், பயங்கர ஆயுதங்களுடன் உலாவும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதுதொடர்பாக கேள்விகேட்ட இந்தப் பகுதி மக்கள் சிலரை கொள்ளையர்கள் ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டியிருக்கின்றனர்.

இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் உஷாரானவுடன், கொள்ளையர்கள் கோவை புதூர், மருதமலை என்று தங்களது கடத்தல் ரூட்டை மாற்றினார்கள். இந்நிலையில், இந்தக் கும்பல் சாய்பாபா காலனி காவல் எல்லையில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்துவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களை நோட்டமிட்ட போலீஸார், அதிகாலை அவர்களைப் பிடிப்பதற்குக் களமிறங்கினார்கள்.

போலீஸாரின், பிடியில் சிக்காமல் அவர்கள் ஓடினர். தப்பியோட முயன்ற, திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், விஷ்ணு மற்றும் அன்பு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த மரம் அறுக்கப் பயன்படுத்தப்படும் கோடாரி, ரம்பம் போன்ற பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்டவை
பறிமுதல் செய்யப்பட்டவை

நான்கு பேர் தப்பியோடிவிட்டனர். தப்பியோடிய நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர். விசாரணையில், கோவையின் பல்வேறு பகுதிகளில் சந்தன மரத்தைக் கடத்தியது இந்தக் கும்பல்தான் என்பது தெரியவந்துள்ளது.