Election bannerElection banner
Published:Updated:

`ஏன் சீனாவுக்குப் போகவில்லை?’ - மணிப்பூர் பெண்களை மிரட்டிய ஆம்புலன்ஸ் டிரைவர்; கோவை அதிர்ச்சி

கைது  செய்யப்பட்ட விக்னேஷ்
கைது செய்யப்பட்ட விக்னேஷ்

கோவையில், கொரோனாவுடன் தொடர்புபடுத்தி மணிப்பூர் பெண்களுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது. செய்யப்பட்டார்.

ஊரடங்கால் உலகமே முடங்கிக் கிடக்கிறது. இந்தியாவில் மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு வருகின்ற 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளிகளின் நிலை ரணமாகிக்கொண்டிருக்கிறது. சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல், பிழைப்புக்குச் சென்ற ஊரிலும் தங்க முடியாமல் புலம் பெயர்ந்த தொழிலாளிகள் தவித்து வருகின்றனர்.

கோவை
கோவை

இதையடுத்து, மத்திய மாநில அரசுகள் ஏற்பாட்டில் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கோவையைப் பொறுத்தவரை, ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம், அசாம், மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மணிப்பூரைச் சேர்ந்த பெண்கள், கோவையில் பல்வேறு அழகு நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர். அதில் ஜென்னி, மரியா என்ற இரண்டு பெண்கள் சாய்பாபா காலனியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர். இதனிடையே, காய்கறி வாங்குவதற்காக நேற்று வீட்டிலிருந்து அவர்கள் வெளியில் வந்துள்ளனர். அப்போது அவர்களை வழிமறித்த ஓர் இளைஞர், ``நீங்கள் ஏன் சீனாவுக்குச் செல்லாமல் வெளியில் சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டுள்ளார்.

வடகிழக்கு மாநில மக்கள்
வடகிழக்கு மாநில மக்கள்

அதற்கு இவர்கள், ``நாங்கள் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள்” என்று பதிலளித்துள்ளனர். ஆனால், அதைப் புரிந்து கொள்ளாத அந்த இளைஞர், மீண்டும் அதையே சொல்லி, ``கோ கொரோனா” என்று சொல்லியுள்ளார். மேலும், அவர்கள் இருவரையும் தாக்குவதற்கும் வந்துள்ளார். இந்தச் சம்பவத்தை அவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.

பிறகு, வடகிழக்கு மாநிங்களைச் சேர்ந்தவர்களுக்காக இயங்கி வரும் குக்கி மாணவர்கள் அமைப்பினருக்குத் தகவல் சொல்லப்பட்டு, அவர்கள் மூலம் சாய்பாபாகாலனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர்களிடம் பிரச்னை செய்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவர் ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணியாற்றி வந்துள்ளார்.

வடகிழக்கு மாநில மக்கள்
வடகிழக்கு மாநில மக்கள்

``ஊரடங்கிலும் சொந்த ஊருக்குத் திரும்பாமல், இங்கேதான் இருக்கிறோம். முடிந்தவரை வெளியில் வருவதைத் தவிர்க்கிறோம். ஆனால், அத்தியவாசியத் தேவைகளுக்கு வெளியில் வருவதை சில நேரங்களில் தவிர்க்க முடியாது. அப்படி வரும் எங்கள் மக்களுக்குச் சில இடங்களில் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, எங்கள் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்” என்று வடகிழக்கு இந்திய மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு