Published:Updated:

`நாங்களும் சந்தோஷமா இருக்க வேண்டாமா?' - ஹெல்மெட் கேமராவில் சிக்கிய கோவை போலீஸ்

கேரளாவில் இருந்து கோவைக்கு சுற்றுலா வந்த இளைஞர்களிடம் போலீஸ் ஒருவர் வம்படியாகக் காசு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Police
Police

கோவை மாவட்டம், கோவை குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அப்படி வெளி மாநிலங்களில் இருந்து வரும், வாகன ஓட்டிகளிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் காருண்யா நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒருவர், வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகக் குற்றசாட்டு எழுந்தது.

Police
Police

அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக, கேரளாவிலிருந்து இருசக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் காசு கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம், பாலக்காட்டிலிருந்து, கடந்த சனிக்கிழமை ஏழு இளைஞர்கள் ஈஷா மையம் வந்துள்ளனர். அவர்களிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்துள்ளன. இருப்பினும், காருண்யா நகர் காவல் நிலையம் அருகே, சிறப்பு உதவி ஆய்வாளர் மாறன், ஆளுக்கு 100 ரூபாய் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர்கள், ‘எங்களிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன’ எனப் பதிலளித்துள்ளனர்.

Kerala tourist
Kerala tourist

‘சுற்றுலா வரும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், நாங்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 100 ரூபாய் மட்டும் கொடுங்கள்’ என்று மாறன் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த இளைஞர்கள் 100 ரூபாய் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

ஆனால், இந்தக் காட்சியைத் தங்களது ஹெல்மெட் கேமரா மூலம் படம்பிடித்த இளைஞர்கள், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Police
Police

``அந்த இளைஞர்களில் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் ஹெல்மெட் அணியவில்லை. அதற்காகத்தான் நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதற்கு ரசீதும் கொடுக்கப்பட்டுள்ளது" என்று காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

`நாங்களும் சந்தோஷமா இருக்க வேண்டாமா?' - ஹெல்மெட் கேமராவில் சிக்கிய கோவை போலீஸ் #Coimbatore #Police விவரங்களுக்கு http://bit.ly/31MqE4c

Posted by Junior Vikatan on Friday, October 4, 2019