கோவை மாவட்டத்தில் போதைக் கலாசாரம் நாளுக்குநாள் தீவிரமடைந்துவருகிறது. அந்த வகையில், தற்போது கஞ்சா சாக்லேட்டின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு சூலூர் அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.10.8 லட்சம் மதிப்புள்ள, 156 கிலோ கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப்குமார் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில், சோமனூர் அருகே சுமார் 22.5 கிலோ கஞ்சா சாக்லேட்டை போலீஸார் நேற்று பறிமுதல் செய்திருக்கின்றனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இது தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த நான்கு நாள்களில் மட்டும் 178 கிலோ கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. நான்கு நாள்களில் மொத்தம் 31,000 கஞ்சா சாக்லேட்கள் (பாக்கெட்) பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
பீகார், ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து வந்து, இங்கு தங்கிப் பணிசெய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் ஊருக்குச் சென்று வரும்போது, ரயில் மூலம் இந்தக் கஞ்சா சாக்லேட்களைக் கடத்திவருவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். ஒரு கஞ்சா சாக்லேட்டை ரூ.50-க்கு விற்பனை செய்து வந்திருக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், மில் தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரைக் குறிவைத்து இதை விற்று வந்திருக்கின்றனர்.

இதுபோன்ற போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால், 94981-81212, 77081-00100 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.