Published:Updated:

கத்தி, அரிவாளுடன் பிறந்தநாள் கேக் வெட்டினர்!- கோவையைப் பதறவைத்த ரவுடிகள்

குருபிரசாத்

கோவையில், ரவுடிகள் சிலர் கத்தி மற்றும் அரிவாள்களால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் வைரலாகிவருகிறது.

 rowdies
rowdies

தமிழகத்தில், கடந்த சில ஆண்டுகளாக ரவுடிகள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதுதொடர்பாக தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களில், பல பிரபல ரவுடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Coimbatore rowdies
Coimbatore rowdies

குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு மண்டல காவல் எல்லைக்குட்பட்ட சேலம் மாவட்டத்தில், அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி ஜீசஸ் உள்பட, 5 பேரை போலீஸார் கைதுசெய்தனர். அதேபோல, சென்னையில் ரவுடி பினு மற்றும் கூட்டாளிகள் கைதுசெய்யப்பட்டனர்.

இதையடுத்து, கோவையிலும் இந்தக் கலாசாரம் தொடங்கி உள்ளது. சரவணம்பட்டி பகுதியில், அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடும் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

 rowdies
rowdies

இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள், சரவணம்பட்டி பகுதியில் உள்ள சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள்மீது காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, இவர்களில் இரண்டு பேர் கொலை வழக்கில் கைதானவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அரிவாளால் கேக் வெட்டியது தொடர்பாக சதீஸ் மற்றும் சுந்தர் தல என்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.