Published:Updated:

`வளையாத மின் விசிறி... அந்த ரத்தம்..!' கோவை மாணவன் சாவில் பள்ளி மீது சந்தேகம் எழுப்பும் பெற்றோர்

மூன்று மாதங்களாக சிசிடிவி செயல்படவில்லை என்பது சந்தேகத்தை அதிகரிக்கிறது.

ஹரீஸ்
ஹரீஸ்

கோவை சூலூர் பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் குமார். இவர் அப்பகுதியில் கோழிக்கடை மற்றும் ஹாலோ பிளாக் தயாரித்து விற்பனை செய்துவருகிறார். அவரின் மகன் ஹரீஸ் காரமடையிலுள்ள வித்ய விகாஸ் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவந்தார். இவர் பள்ளி வளாகத்திலுள்ள விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

Representational Image
Representational Image

மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, கோவை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரும் அளித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவனின் தந்தை குமார். ``என் மகன் கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளான். தற்கொலை செய்யும் அளவுக்கு எல்லாம் போகமாட்டான். மாலை 4.57 மணியளவில், காரமடை உதவி ஆய்வாளர் நாகராஜ் , என்னை தொலைபேசியில் அழைத்து ஹரீஸ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்தார்.

குமார்
குமார்

நான் சென்றபோது, காரமடை காவல் நிலையத்தின் முன் அவசர ஊர்தியில் உடல் வைக்கப்பட்டிருந்தது. எங்களிடம் சொல்லாமலேயே, மகனின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டனர்.

உயிரிழந்த தினம், என்னுடைய மகன் மதியம் 1.27 மணியளவில் வயிற்றுப் போக்குக் காரணமாக எலக்ட்ரால் பவுடரை சாப்பிட்டுவிட்டு அவனது அறைக்குச் சென்றுள்ளான். ஆனால், சிசிடிவி-யில் பதிவுகள் இல்லை. மூன்று மாதங்களாக சிசிடிவி செயல்படவில்லை என்பது சந்தேகத்தை அதிகரிக்கிறது.

காவல்துறையுடன் வாக்குவாதம்
காவல்துறையுடன் வாக்குவாதம்

என் மகன் மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகின்றனர். ஆனால், மின் விசிறி இறக்கை ஒடுங்கவில்லை. மேலும், இறந்த இடத்திலிருந்து பத்தடி தள்ளி ரத்தம் சொட்டுச் சொட்டாக இருந்துள்ளது.

உதவி ஆய்வாளர் நாகராஜிடம் கேட்டதற்கு, முதலில் கழுத்தை கத்தியால் அறுக்க முயற்சி செய்து, பின்னர் தூக்கு மாட்டிக் கொண்டதாக கூறினார். அப்படி ஆகியிருந்தால் அறை முழுவதும் ரத்தம் இருந்திருக்கும். மேலும் ஹரீஷின் அறையில், அனைத்து பேப்பர்களும் சுத்தம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அதுவும் சந்தேகத்தை அதிகரிக்கிறது.

ஹரீஸ் பெற்றோர்
ஹரீஸ் பெற்றோர்

என் மகன் ரத்தத்தைப் பார்த்தாலே மயங்கி விழுந்து விடுவான். இறைச்சி வெட்டிய ரத்தத்தைக் கூட அவன் பார்க்க மாட்டான். அப்படியிருக்கும்போது, அவன் எப்படிக் கழுத்தைக் கத்தியால் அறுத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வான்?

என் மகன் இறந்த நேரத்தில், தலைமை வார்டனைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. அவர் மீதுதான் எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மட்டும் சம்பிரதாயத்துக்காக ஆறுதல் சொன்னார். ஆனால், பள்ளியின் உரிமையாளர் இப்போதுவரை எங்களிடம் பேசவில்லை. எங்களது நிலைமை வேறு யாருக்கும் வரக் கூடாது. இந்தப் பள்ளியில் யாரும் தங்களது குழந்தைகளை விடுதியில் தங்கி படிக்க வைக்காதீர்கள்” என்றார் கண்ணீருடன்.

காரமடை காவல் துறையினர், 174 பிரிவின் கீழ் சந்தேகத்தின் பேரில் மரணம் என வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கை வேறு காவல் நிலையத்துக்கோ அல்லது அமைப்புக்கோ மாற்றி விசாரிக்க வேண்டும்.

ஹாஸ்டல்
ஹாஸ்டல்

பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹரீஸின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். `அதுவரை உடலை வாங்க மாட்டோம்' என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த வித்ய விகாஸ் பள்ளி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை இல்லை. இவர்களின் பள்ளிப் பேருந்தில் பயணித்த 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக, ஓட்டுநர் கோவிந்தராஜ் மற்றும் நடத்துநர் மாரிமுத்து ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தனர். ஹரீஸைப் போல, மேலும் சில மாணவர்கள் அங்கு மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, ஊட்டியைச் சேர்ந்த ஒரு மாணவரும் இதேபோல உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, வித்ய விகாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் நாராயணமூர்த்தி, ``வயிறு வலிக்கிறது என்று சொல்லித்தான் ஹரீஸ் வகுப்பிலிருந்து சென்றுள்ளான். வார்டன்தான் அவனை, ஹாஸ்டல் பார்மஸிக்கு அழைத்துச் சென்று மருந்து வாங்கிக் கொடுத்துள்ளார். மதியம் 3.30 மணிவரை அவனை வார்டன் கண்காணித்துள்ளார். அதன் பிறகுதான், இப்படி நடந்துள்ளது. இந்தத் தகவலை முறைப்படி, ஹரீஸ் பெற்றோர் மற்றும் காவல்துறைக்குத் தெரிவித்தோம்.

வித்ய விகாஸ் மேல்நிலைப்பள்ளி
வித்ய விகாஸ் மேல்நிலைப்பள்ளி
கோவைப் பள்ளி விடுதியில் மாணவன் தற்கொலை! - சந்தேகம் எழுப்பும் உறவினர்கள்

ஹாஸ்டலுக்குள் ஒரே ஒரு சிசிடிவி கேமரா மட்டும் வேலை செய்யவில்லை. மற்றபடி, எல்லா கேமராக்களும் வேலை செய்து கொண்டுதான் இருந்தன. அவற்றின் பதிவுகளை காவல்துறைக்கு அளித்துள்ளோம். ஹரீஸ் நன்கு படிக்கும் மாணவன். எதற்காக இப்படி ஓர் முடிவை எடுத்தான் என்று தெரியவில்லை. எங்கள் பள்ளி குறித்து வரும் தகவல்களில் உண்மை இல்லை. நாங்கள் அனைத்து விசாரணைக்கும் ஒத்துழைப்பு தருவோம்” என்றார்.

வித்ய விகாஸ் பள்ளியில், கல்வித்துறை அதிகாரிகள், தாசில்தார் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். ஹரீஸ் பெற்றோரின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.