Published:Updated:

விதிமுறை மீறி அள்ளப்படும் செம்மண்!- தட்டிக்கேட்ட கமல் கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல்

கோவையில் விதிமுறைகளை மீறி செம்மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தினர் மீது செங்கல் சூளை உரிமையாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செம்மண் கொள்ளை
செம்மண் கொள்ளை

கோவை மாவட்டம், தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி பல நூறு அடிகளுக்கு செம்மண் எடுக்கப்படுகிறது. இதனால், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதி ஒரு பள்ளத்தாக்கைப் போல காட்சி அளித்து வருவதோடு, மனிதர்கள்- யானை மோதல்களுக்கு காரணமாகவும் உள்ளது.

செம்மண் கொள்ளை
செம்மண் கொள்ளை

இந்த நிலையில், தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுப்பது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

அதேபோல தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பல தகவல்களை வெளிக்கொண்டுவந்த கணேஷ், மருத்துவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரமேஷ், சமூக செயற்பாட்டாளர் ஜோஷ்வா ஆகியோர் செங்கல் சூளை அதிபர்களின் விதிமீறல்களையும், செங்கல் சூளையால் ஏற்படும் பாதிப்புகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துகொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், வீரபாண்டி பகுதியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் சமூக செயற்பட்டாளர் ஜோஷ்வா செங்கல் சூளைகளுக்கு எதிராக மனு அளிக்கச் சென்றார். அப்போது 30-க்கும் மேற்பட்ட செங்கல் சூளை ஆதரவாளர்கள் ஜோஷ்வாவை தரதரவென இழுத்துச் சென்று, தகாத வார்த்தையில் திட்டியபடி தாக்குதல் நடத்தினர்.

ஜோஷ்வா
ஜோஷ்வா

அ.தி.மு.க பகுதிச் செயலாளரும், செங்கல் சூளை வைத்திருப்பவருமான ஜெயபால் தூண்டுதலால் தாக்குதல் நடந்ததாகவும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல சின்னத்தடாகம் பகுதியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பாபு, பிரபு, சுரேஷ் ஆகிய மூன்று பேர் மீது செங்கல் சூளை ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்
மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்

``நாங்கள் அங்கு காலம் காலமாக தொழில் செய்துவருகிறோம். ஆனால், சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் எங்களை சமூக வலைதளங்களில் தகாத வார்த்தைகளில் திட்டி வருகின்றனர். அவர்கள் மீது நாங்கள் போலீஸில் புகாரளித்துள்ளோம்'' என்று செங்கல் சூளை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.