Published:Updated:

`எல்லாம் சரியாகத்தான் நடந்தது; ஆனால்...!' - அரசு டாக்டராக நடித்த மாப்பிள்ளை அதிர்ச்சி வாக்குமூலம்

Karthick
Karthick

`திருமணம் வரை எல்லாம் சரியாகத்தான் போனது. ஆனால் வரவேற்பு நிகழ்ச்சியில் பணம் கேட்டதால் பெண் வீட்டினரிடம் சிக்கிக் கொண்டேன்' என்று அரசு டாக்டராக நடித்த கார்த்திக், போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த கார்த்திக் (32), அரசு டாக்டராக நடித்து சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணை சில நாள்களுக்குமுன் திருமணம் செய்து கொண்டார். புழல் ரெட்டேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கார்த்திக்கின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தபோது அவரின் சுயரூபம் வெளியில் தெரிந்தது. கார்த்திக், அவருக்கு மாமாவாக நடித்த ஜெயக்குமார், அத்தையாக நடித்த வசந்தி ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

karthick
karthick

போலீஸாரிடம் மாப்பிள்ளை கார்த்திக் அதிர்ச்சிகரமான வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம், ``கார்த்திக்கின் முழுப் பெயர் கார்த்திக் துரை ராமசந்திரன். இவர் கடந்த 2001, 2002-ம் ஆண்டில் சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்துள்ளார். அப்போது திடீரென அவரின் அப்பா, இறந்துவிட்டதால் எம்.பி.பி.எஸ் படிப்பை அவரால் தொடர முடியவில்லை.

இந்தச் சமயத்தில் சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் குடியிருக்கும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் தலைமை நர்ஸாகப் பணியாற்றும் ஒருவர், தன்னுடைய 2வது மகளுக்கு வரன் தேடியுள்ளார். நர்ஸின் அண்ணன் கஜேந்திரனின் 40 ஆண்டுக்கால நண்பர் வீரமணி என்கிற சொக்கலிங்கம் என்பவர் மூலம் கார்த்திக் குறித்த தகவல் பெண் வீட்டினருக்குத் தெரியவந்துள்ளது. பெண் வீட்டினரிடம் கார்த்திக், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் டாக்டராகப் பணியாற்றுவதாகக் கூறியுள்ளார். அதை பெண் வீட்டினரும் முழுமையாக நம்பியுள்ளனர்.

karthick
karthick
`ரூ.11 லட்சம், 75 சவரன்  வரதட்சணை; போதையில் உளறிய மாமா!' - திருமண வரவேற்பில் சிக்கிய போலி டாக்டர்

திருமணப் பேச்சுவார்த்தை முடிந்தபிறகு மே 23-ம் தேதி நிச்சயதார்த்தம் ஜி.கே.எம்.காலனியில் நடந்துள்ளது. அதன்பிறகு கார்த்திக்கும் மணமகளும் பழகியுள்ளனர். செப்டம்பர் 11-ம் தேதி குமரன் நகரில் உள்ள கோயிலில் திருமணமும் 12-ம் தேதி ரெட்டேரியில் உள்ள மண்டபத்தில் வரவேற்பும் நடந்துள்ளது.

திருமணப் பேச்சுவார்த்தை நடந்தபோது கார்த்திக், தன்னை அநாதை என்று பெண் வீட்டினரிடம் கூறியுள்ளார். மேலும், எனக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் கோயம்புத்தூரில் இருப்பதாகக் கூறியுள்ளார். அதை பெண் வீட்டினர் முழுமையாக நம்பியுள்ளனர்.

வரதட்சணையாகக் கிடைத்த பணத்தை ஆடம்பரமாகச் செலவழித்துள்ளார் கார்த்திக். விலை உயர்ந்த ஆடைகளை வாங்கி, விருப்பம் போல வாழ்ந்துள்ளார். கார்த்திக்கின் நண்பர் ஒருவர் சென்னையில் டாக்டராகப் பணியாற்றுகிறார். அவரின் கிளினிக்கிற்கு அடிக்கடி சென்றுள்ளார். நண்பனின் காரில்தான் ஊரைச் சுற்றி மற்றவர்களை அரசு டாக்டர் என நம்ப வைத்துள்ளார். கார்த்திக் தன் தரப்பு உறவினர்களாக சிலரை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார். அதற்காக அவருக்குத் தெரிந்தவர்களை மாமா, அத்தை, அக்கா என உறவுகளாக பெண் வீட்டினரிடம் நடிக்க வைத்துள்ளார். கார்த்திக் சொல்லிக் கொடுத்தது போல அவர்களும் திருமணத்தின்போது நடித்துள்ளனர்" என்றார்.

marriage hall
marriage hall

கார்த்திக்கிடம் போலீஸார் விசாரித்தபோது,``திருமணம் வரை பெண் வீட்டினர் நான் சொல்லியதை முழுமையாக நம்பினார்கள். இதனால் எல்லா காரியமும் சரியாகத்தான் நடந்தது. ஆனால், திருமணம் முடிந்து வரவேற்பு மண்டபத்தில் நடந்தபோதுதான் மாமாவாக நடித்தவர், குடிபோதையில் என்னைப்பற்றி உண்மைகளை பெண் வீட்டினரிடம் உளறிக் கொட்டிவிட்டார். இந்தத் தகவல் தெரிந்ததும் மண்டபத்திலிருந்து காரில் தப்பிக்க வெளியில் வந்தேன். ஆனால் அதற்குள் போலீஸார் என்னை மடக்கிப் பிடித்துவிட்டனர்" என்று வாக்குமூலமாகக் கூறியுள்ளார்.

புதுமாப்பிள்ளை கார்த்திக் பயன்படுத்திய கார் மற்றும் திருமண அழைப்பிதழ்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். கார்த்திக்கின் இந்த மோசடி வேலையால் அப்பாவி பட்டதாரி பெண்ணின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. தனியார் மண்டபத்தில் ஆடம்பரமாக நடக்கவிருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. இதனால் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

karthick
karthick

கார்த்திக் மீது இந்திய தண்டணைச் சட்டப்பிரிவுகள் 294 பி, 498 ஏ, 406, 420, 506 (2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கார்த்திக்கிற்கு உதவி செய்த குற்றத்துக்காக வீரமணி, மாமாவாக நடித்த ஜெயக்குமார், அத்தையாக நடித்த ஜெயக்குமாரின் மனைவி வசந்தி ஆகியோர் சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு