Published:Updated:

கொரோனா சோதனை; சிறுமிகளுக்குப் பாலியல் சீண்டல்!- போலி சுகாதார ஆய்வாளரை வளைத்த குளச்சல் போலீஸ்

கைதுசெய்யப்பட்ட அபிலாஷ் பெர்லின்
கைதுசெய்யப்பட்ட அபிலாஷ் பெர்லின்

சுகாதார ஆய்வாளர் எனக் கூறி கொல்லங்கோடு, நித்திரவிளை, புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்குச் சோதனை செய்யச் செல்வதுபோலச் சென்று, வீடுகளில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்தவர் கைதுசெய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள வீடுகளில் ஒருவர், அரசு சுகாதார ஆய்வாளர் என்று கூறி வீடுகளுக்கு சென்று கொரோனா சோதனை மேற்கொண்டுவந்திருக்கிறார். சோதனைக்காக வீடுகளுக்குச் செல்லும் இந்த டிப் டாப் நபர், தனியாக இருக்கும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்திருக்கிறார். இது குறித்து யாரும் புகாரளிக்கவில்லை. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு, இதுபோல பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் அந்த நபர். இது குறித்து அந்தச் சிறுமி பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்கள்.

சிறுமிகளிடம் சில்மிஷம்
சிறுமிகளிடம் சில்மிஷம்
Representational Image

இதையடுத்து போலீஸ் டீம் கொல்லங்கோடு, நித்திரவிளை பகுதிகளில் ரகசியமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நித்திரவிளைப் பகுதியில் அந்த நபர் சுகாதார ஆய்வாளர் எனக் கூறி ஒரு வீட்டுக்குள் நுழைய முயன்றிருக்கிறார். அப்போது மஃப்டியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர், அவரை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

உ.பி அதிர்ச்சி: கல்லூரி வளாகத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! - மாணவர்கள் 8 பேர் கைது

விசாரணையில் அவரது பெயர் அபிலாஷ் பெர்லின் என்பதும், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்திருக்கிறது. 41 வயதான அபிலாஷ் பெர்லின் ஒரு வங்கியில் கடன் வசூலிப்பாளராகப் பணிபுரிந்துவந்திருக்கிறார். இவர், கொரோனா காலகட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு, சுகாதார ஆய்வாளர் எனக் கூறி கொல்லங்கோடு, நித்திரவிளை, புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோதனை செய்யச் செல்வதுபோலச் சென்று, வீடுகளில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது.

அபிலாஷ் பெர்லின்
அபிலாஷ் பெர்லின்

கடந்த ஜனவரி மாதம் அபிலாஷ் பெர்லினுக்கு திருமணம் நடந்திருக்கிறது. ஆனால், அவரது நடவடிக்கை சரியில்லை எனக் கூறி திருமணமான ஓரிரு மாதங்களிலேயே அவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இந்தநிலையில்தான் சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுவந்திருக்கிறார். இதையடுத்து அபிலாஷ் பெர்லின் மீது குளச்சல் அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், போலீஸார் அவரை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு