Published:Updated:

குமரி: மனைவியை நாற்காலியில் கட்டிவைத்து எரித்துக் கொல்ல முயன்ற கணவன்! - அதிர்ச்சி வீடியோ

கொலை செய்யும் நோக்கோடு கட்டி வைக்கப்பட்ட ஹெப்சிபாய்
கொலை செய்யும் நோக்கோடு கட்டி வைக்கப்பட்ட ஹெப்சிபாய்

`உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீவைத்து எரித்துக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார். தக்க சமயத்தில் தகவல் கிடைத்ததால் விரைந்து சென்று ஹெப்சிபாயைக் காப்பாற்ற முடிந்தது’ என்கின்றனர் போலீஸார்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பாலப்பள்ளம் நெடுவிளைப் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ராஜன் (53). இவருடைய மனைவி ஹெப்சிபாய் (40). திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில் இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை. இதனால், ஹெப்ஸிபாயை அவருடைய கணவர் சுரேஷ்ராஜன் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹெப்சிபாய்க்கு கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் கோர்ட்டில் இளநிலை உதவியாளராகப் பணி கிடைத்தது. கடந்த 2-ம் தேதி முதல் பணிக்குச் சென்று வந்திருக்கிறார். அவரை சுரேஷ் ராஜன் தினமும் பைக்கில் அழைத்துச் சென்று, பணி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்.

இந்தநிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் சுரேஷ்ராஜன் வீட்டுக்குள் ஹெப்சிபாயின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் சுரேஷ்ராஜன் வீட்டுக்குச் சென்று பார்த்திருக்கிறார்கள். ஆனால், வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் குளச்சல் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.

கைது செய்யப்பட்ட சுரேஷ்ராஜன்
கைது செய்யப்பட்ட சுரேஷ்ராஜன்

குளச்சல் போலீஸார் விரைந்து சென்று சுரேஷ்ராஜனின் வீட்டுக் கதவை உடைத்திருக்கிறார்கள். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஹெப்சிபாய் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டிருந்தார். அவரது வாயும், கண்களும் கட்டப்பட்டிருந்தன. உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டிருந்தது. அவரது காலில் அரிவாளால் வெட்டிய காயம் இருந்தது. மேலும் போலீஸைக் கண்டதும் கையில் கத்தியுடன் நின்ற சுரேஷ்ராஜன் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கிப்பிடித்த போலீஸார், ஹெப்சிபாயை மீட்டு குளச்சலிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

நெல்லை: `கட்டப் பஞ்சாயத்து.. அடித்துக் கொலை!’ - இன்ஸ்பெக்டர்மீது வழக்கு பதிவு

சுரேஷ்ராஜன் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்ததுடன், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோர்ட் ஊழியர் ஹெப்சிபாய் நாற்காலியில் கட்டப்பட்டு கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

ஹெப்சிபாய்
ஹெப்சிபாய்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``வேலைக்குச் சென்றுவந்த ஹெப்சிபாய் மீது அவரின் கணவர் சுரேஷ்ராஜனுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. இதனால், அவரைக் கொலை செய்யும் நோக்கோடு அவரது காலில் வெட்டியிருக்கிறார். அவர் சத்தம்போடாமல் இருப்பதற்காக, வாயில் துணியால் கட்டியிருக்கிறார். உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீவைத்து எரித்துக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார். தக்க சமயத்தில் தகவல் கிடைத்ததால், விரைந்து சென்று ஹெப்சிபாயைக் காப்பாற்ற முடிந்தது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு