Published:Updated:

தாயைக் கத்தியைக் காட்டி மிரட்டிய தந்தை; மனஉளைச்சலில் விபரீத முடிவெடுத்த மாணவன்!- குன்றத்தூரில் சோகம்

தற்கொலை

கத்தியால் குத்திக்கொண்டு, தற்கொலை செய்துகொள்வதாகத் தந்தை மிரட்டியிருக்கிறார். அதைப் பார்த்த அவரின் மகன், அந்தக் கத்தியைப் பிடுங்கி தன்னுடைய மார்பில் குத்திக்கொண்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாயைக் கத்தியைக் காட்டி மிரட்டிய தந்தை; மனஉளைச்சலில் விபரீத முடிவெடுத்த மாணவன்!- குன்றத்தூரில் சோகம்

கத்தியால் குத்திக்கொண்டு, தற்கொலை செய்துகொள்வதாகத் தந்தை மிரட்டியிருக்கிறார். அதைப் பார்த்த அவரின் மகன், அந்தக் கத்தியைப் பிடுங்கி தன்னுடைய மார்பில் குத்திக்கொண்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Published:Updated:
தற்கொலை

சென்னையை அடுத்த குன்றத்தூர் மணிகண்டன் நகர், இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கூலிவேலை செய்துவருகிறார். இவரின் மகன் பாலகிருஷ்ணன் (19). இவர் குன்றத்தூரையடுத்த கோவூரிலுள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். கடந்த சில தினங்களாக பிரபாகரன் வேலைக்குச் செல்லாமல் தன்னுடைய மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுவந்திருக்கிறார். அதனால் பாலகிருஷ்ணன் மனவேதனையடைந்தார். இந்த நிலையில், அண்மையில் கணவன்-மனைவி இடையே வழக்கம்போல தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த பிரபாகரன், கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

அதனால், பிரபாகரனின் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கிய பாலகிருஷ்ணன், `நீங்கள் இருவரும் அடிக்கடி சண்டை போடுவதால் எனக்கு நிம்மதியில்லை' என்று கூறியபடி, கத்தியால் தன்னுடைய மார்பில் குத்திக்கொண்டதாகத் தெரிகிறது. அதனால் ரத்தவெள்ளத்தில் பாலகிருஷ்ணன் சரிந்தார். அதைப் பார்த்த அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பாலகிருஷ்ணனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்துவிட்டார்.

இது குறித்து குன்றத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். பின்னர் பாலகிருஷ்ணனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர்.

இது குறித்து குன்றத்தூர் போலீஸாரிடம் விசாரித்தபோது, ``பிரபாகரன், ஆரம்பத்தில் ஆட்டோ டிரைவராக வேலைபார்த்து வந்திருக்கிறார். அதன் பிறகு கிடைத்த வேலைகளைச் செய்திருக்கிறார். தற்போது வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். அதனால்தான் பிரபாகரனின் மனைவி கங்கையம்மாளுக்கும் அவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. பிரபாகரன், கங்கையம்மாள் தம்பதிக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இன்ஜினீயரிங் படித்துவிட்டு வேலைபார்த்து வருகிறார். இரண்டாவது மகன் பாலகிருஷ்ணன், கல்லூரியில் படித்துவந்தார்.

தற்கொலை
தற்கொலை
சித்திரிப்புப் படம்

சம்பவத்தன்று (18.1.2023) வீட்டில் பிரபாகரன், கங்கையம்மாள், பாலகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் மட்டும் இருந்திருக்கின்றனர். அப்போதுதான் கணவன் மனைவிக்கிடையே பிரச்னை வந்திருக்கிறது. அப்போது பிரபாகரன், `நான் சம்பாதிக்கும்போது, எனக்கு வீட்டில் மரியாதை இருந்தது. இப்போது எதற்கெடுத்தாலும் என்னிடம் சண்டைக்கு வருகிறாய்' என்று மனைவி கங்கையம்மாளிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் பாலகிருஷ்ணன், `வீட்டில் அடிக்கடி நீங்கள் இருவரும் தகராறு செய்வதால், நானே தற்கொலை செய்துகொள்கிறேன்' என்றுகூறி அப்பா பிரபாகரனிடமிருந்த கத்தியைப் பிடுங்கி தன்னுடைய மார்பில் குத்தியிருக்கிறார். அதனால்தான் பாலகிருஷ்ணன் உயிரிழந்ததாக பிரபாகரனும் கங்கையம்மாளும் விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

இந்தச் சம்பவம் குன்றத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.